புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2018

கூட்டமைப்பின் அக்கினிப் பிரவேசம்

உள்ளூராட்சித் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஒரு அக்கினிப் பிரவேசமாகவே அமையப்
போகின்றது.
என்றுமில்லாதவாறு கூட்ட மைப்புக்கு எதிரான கண்டனங்கள் எதிரணியினரால் முன்வைக்கப் பட்டு வருகின்றன.
மாகாணசபைத் தேர்தல் போன்று ஒரு மிகப்பெரிய வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாய நிலையில் அந்த அமைப்பு உள்ளது.
கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதைக் காணும் போது அந்த அமைப்பின் ஆயுள் நீடிக்குமா என்ற சந்தேகமும் கூடவே எழுகின்றது.
நான்கு பங்காளிக் கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் இன்று அமைப்பில் நிலைத்திருக்கும் மூன்றின் மத்தியிலும் பிளவு ஏற்படுவதற்கான சந்தர்ப்பமொன்று அண்மையில் உருவானது.
உள்ளூராட்சித் தேர்தலில் தமக்கு உரிய ஆசனப் பங்கீடு வழங்கப்படவில்லையெனக் கூறி ரெலோ அமைப்பு கூட்டமைப்பினுடனான தனது உறவைத் திடீரென முறித்துக் கொண்டது.
இது கூட்டமைப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. கூட்டமைப்பின் கதி அதோகதிதானெனப் பலரும் நினைத்துக் கொண்டனர்.
புளொட்டும் ரெலோவின் வழியைப் பின்பற்றினால் கூட்டமைப்பின் கதை முற்றாகவே முடிந்திருக்கும். தமிழரசுக் கட்சி தனித்து நின்றிருக்கும்.
ஆனால் சம்பந்தனின் கடும் முயற்சி காரணமாக ரெலோ தனது மனதை மாற்றிக்கொண்டது. அந்தக் கட்சிக்கு அதிக ஆசனங்களும் ஒதுக்கப்பட்டன.
ஆனால் தமிழரசுக் கட்சியினர் தாம் ஆசனப் பங்கீட்டில் மோசமாகப் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.கூட்ட மைப்பில் உள்ள பெரிய கட்சியான தமக்கு உரிய இடம் வழங்கப்படவில்லையெனவும் அந்தக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் தமது மனப்புகைச்சலையும் வௌியிட்டு வருகின்றனர்.
கட்சியின் சில அதிருப்தியாளர்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுகின்ற முயற்சிகளிலும் இறங்க நேர்ந்துள்ளது.
கூட்டமைப்பில் ஏற்படுகின்ற குழப்பங்கள் எதிரணியினருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களின் ஓர் அடையாளமாக விளங்கிய கூட்டமைப்பை அற்பக் காரணங்களுக்காகச் சிதைக்க முற்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்தி விட முடியாது.
ஏதாவது அதிருப்தி ஏற்படுமாயின், கூட்டமைப்பின் தலைமையுடன் பேசி ஒரு சுமுகமான நிலையை எட்டுவதே நாகரீகமான செயலாகக் கணிக்கப்படும். இதைத்தான் மக்களும் விரும்புவார்கள்.
ஆனால் அரசியல்வாதிகள் மக்களின் இத்தகைய கருத்துக்களைச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணமே அவர்களிடத்தில் நிறைந்து காணப்படுகின்றது.
சில ஊடகங்களும் கூட்ட மைப்பை வீழ்த்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதைக் காண முடிகின் றது. கூட்டமைப்புத் தொடர்பாக மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அவை செயற்படுகின்றன.
தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்ற இத்தகைய ஊடகங்கள் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் இவற்றின் தீய நோக்கத்தை வெகுவிரைவிலேயே புரிந்து கொள்வார்கள்.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்தி விட முடியாதென அதன் தலைவரான சம்பந்தன் மார்தட்டிக் கூறியிருக்கிறார்.
பழுத்த அரசியல் வாதியான அவர், முன்பின் யோசிக்காது இத்தகைய கருத்தைக் கூறியிருக்க மாட்டார். ஆனால் கூட்டமைப்புச் செல்ல வேண்டிய பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது என்பதையும் அவர் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வௌியிலிருந்து ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகளுக்கு மேலதிகமாக கூட்டமைப்பினுள் காணப்படுகின்ற பிளவுகளுக்கும், எதிர்ப்புக்களுக்கும் அவர் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்துத் தாண்டிச் செல்லும் போது தான், சம்பந்தன் எதிர்பார்க்கின்ற வெற்றியை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது நிலவிய நிலை போன்றதொரு நிலை இன்று வடபகுதியில் காணப்படவி்ல்லை. மக்கள் உள்ளூராட்சித் தேர்தலை முழு அளவில் எதிர்கொள்வார்களென எதிர்பார்க்க முடியவில்லை.
முழு அரசியல்வாதிகளும் தம்மை ஏமாற்றி விட்டதாகவே அவர்கள் நினைக்கின்றனர். தமது பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளால் தீர்வு காண முடியவில்லை என்ற ஆதங்கமும் இவர்களிடம் நிறையவே உள்ளது.
இதைவிட கூட்டமைப்பினுள் நிகழ்ந்த குழப்பங்கள் அவர்களைச் சலிப்படையச் செய்து விட்டன. இதன் காரணமாக மக்கள் முழு அளவில் வாக்களிக்கச் செல்வார்களா? என்பது கேள்விக்குறியாக எழுந்து நிற்கின்றது.
என்னதான் இருந்தாலும் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் முழு வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாய நிலையொன்று உருவாகி விட்டது என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.
அந்த வகையில் கூட்டமைப்பின் முழு அளவிலான பரப்புரைகள் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். மக்களை முழு அளவில் வாக்களிக்கச் செய்விக்கும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
குறைந்த அளவில் வாக்குகள் பதியப்படுமாயின் எதிரணியினரின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு விடும். கடந்த சில தேர்தல்களது முடிவுகள் இதனை உறுதிப்படுத்தியிருந் தன.
எனவே ஒரு நெருப்பாற்றை நீந்திக் கடக்கின்ற நிலையில் கூட்டமைப்பு உள்ளது.
ஆகவே இதையொரு அக்கினிப்பிரவேசம் என்றே கூற வேண்டும்.
இதில் வெற்றிபெற் றால் கூட்டமைப்பு தேறி விடும். இல்லையேல், அதன் பின்னடைவு தவிர்க்க முடியாததாகி விடும்

ad

ad