17 பிப்., 2018

கனடா புதிய சனநாயக கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு தாட்ஷா நவநீதன் போட்டி

ரொரொன்ரோ, ஒன்ராரியோ – ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்ட சமூக செயற்பாட்டாளராகிய தாட்ஷா நவநீதன் கனடா புதிய சனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ளார்.

ஒரு கட்சியின் துணைத் தலைவர் பதவியென்பது அக்கட்சியின் நிருவாக அமைப்புக்குள் மூத்த தலைமைத்துவப் பொறுப்பைக் கொண்டுள்ள ஒரு பதவியாகும். துணைத் தலைவர் என்ற ரீதியில் தாட்ஷா நவநீதன் கட்சியின் சமூக வெளிக்களப் பணிகளிலும், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளைச் செய்வதிலும் தனது கவனத்தைச் செலுத்துவார்.

தாட்ஷா நவநீதன் துணைத் தலைவர் பதவிக்காகப் போட்டியிடுவதற்கான முக்கிய காரணத்தை விளக்கும்போது,

“அடிப்படைச் சமூக நீதி, வலுவான கோட்பாடுகள், முற்போக்குக் கொள்கைகள் என்ற அடிப்படையில் நேரிய, சமத்துவமான கனடா நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் எமது கட்சியுடன் ஒன்றிணைந்து பணியாற்ற விரும்பிய காரணத்தால் தான், நான் புதிய சனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ளேன். புதிய சனநாயகக் கட்சி உறுப்பினராக, அடிமட்டப் பிரசாரத்தினூடாக சமூகங்களை இணைக்கக்கூடிய எமது ஆற்றல் நாடு முழுவதுமுள்ள சமூகங்களை ஒருங்கிணைத்து, கட்சிக்கான உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள் போன்றவர்களின் தளங்களைக் கட்டியமைப்பதற்கு முக்கியமானதாகும். இந்த செயற்பாட்டின் மூலம் 2019 தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும்.” என்று குறிப்பிட்டார்.

தாட்ஷாவுக்கு ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர்கள் லிசா கிரெட்ஸ்கி, தெரேசா ஆம்ஸ்ரோங், மைக்கேல் மான்தா ஆகியோர் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள முக்கிய பிரமுகர்கள் பலரிடமிருந்து ஆதரவு தெரிவித்த ஒப்புதல்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் அவர்கள் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட வேளையில் அவரின் பிரச்சார இயக்குனராக இருந்த மைக்கல் ஹே அவர்களினதும், ரொரொன்ரோ, யோர்க் பகுதி தொழிலாளர் கவுன்சிலின் மூத்த ஒருங்கிணைப்பாளர் முஹமட் ஹாசிம் அவர்களினதும் ஆதரவு ஒப்புதல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புதிய சனநாயகக் கட்சியின் மாநாட்டிலே கட்சியின் பிரதிநிதிகள் கட்சிக்கான தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியோரை வாக்களிப்பின் மூலம் தெரிந்தெடுப்பார்கள். இக்கட்சியின் வரலாற்றிலேயே பெரிய அளவிலாக 2000க்கும் மேற்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றார்கள்.

தாட்ஷா அவர்கள் தெரிவு செய்யப்பட்டால் கனடாவில் பிரதான மத்திய அரசியல் கட்சி ஒன்றின் துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண்ணாக அவர் விளங்குவார்.