புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2018

குற்றவாளி இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே போயின ஐ.நா. தீர்மானங்கள்?”

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டிய இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே
போயின ஐ.நா. தீர்மானங்கள்?” என வட அமெரிக்காவில் நடைபெற்ற “இலங்கைத் தமிழ்ச் சங்க” ஆண்டு விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா எழுப்பினார்.
வட அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழீழத் தமிழர்கள் நடத்திவரும் “இலங்கைத் தமிழ்ச் சங்க”த்தின், 41ஆவது ஆண்டு விழா, சங்கத்தின் தலைவர் பாலன் பாலசிங்கம் தலைமையில் கடந்த 03.11.2018 அன்று நியூஜெர்சியில் நடைபெற்றது. சங்கச் செயலாளர் திரு. சசி செல்லத்துரை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
நியூஜெர்சியின் மன்ரோ டவுன்சிப் இரமடா பிளாசா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையமைச்சர் சட்டத்தரணி உருத்திரகுமாரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர், பல்வேறு தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்வில், தோழர் பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம் :
“தமிழீழ மரபு வழி சொந்தங்கள் ஒருங்கிணைந்து வட அமெரிக்க மண்ணில் நடத்துகின்ற, “இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்” இந்நிகழ்வு எமக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்நிகழ்வில் உரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்தேசியம் என்ற ஒளி விளக்கு
நம் தமிழ்ச்சமூகம் இன்றைக்கு நெருக்கடியான காலத்தில் இருக்கிறது. தமிழீழத்திலும் கொடிய நெருக்கடியிலே இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் வேறு வகையான நெருக்கடியில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நேரத்தில்தான் “தமிழ்த்தேசியம்” என்ற ஒளி விளக்கும் நமக்குக் கிடைத்திருக்கிறது.
எமது தேசிய இனம் - தமிழர், எமது தேசிய மொழி - தமிழ், தமிழர் தாயகத்தின் இறையாண்மையை மீட்பது எமது இலக்கு என்ற வரையறுப்போடு நாங்கள் தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து வருகின் றோம்.
தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு. இன்னொன்று - தமிழீழம். இந்த இரண்டு தாயகங்களும் இன்றைக்கு இறையாண்மை இழந்து நிற்கின்றன. அவை இறையாண்மை பெற்ற அரசாகத் திகழும் அளவிற்கு பெருமைகளையும், உரிமைகளையும் கொண்டிருக்கின்றன.
எனக்கு முன்னால் இங்கு பேசிய, இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள், நமது வரலாற்றுப் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.
நம்முடைய தமிழ் மொழி - ஒரு அறிவுக் கலனாக - அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. அதுதான் நம் இனத்தை உருவாக்கியதிலும் முகாமையான பங்கு வகுக்கிறது.
பாவேந்தர் பாரதிதாசன் இதைத்தான் சொன்னார். “இனத்தைச் செய்தது மொழிதான்! இனத்தின் மனத்தைச் செய்ததும் மொழிதான்” என்றார்! இனத்தின் உளவியல் உருவாக்கத்திற்கு - பண்பியல் உருவாக்கத்திற்கு மொழி தான் அடிப்படைக் காரணம் என்றார் பாவேந்தர்.
அறிவு, வீரம், அறம் ஆகிய மூன்று துறைகளிலும் தமிழர்களின் வரலாற்றை நம் தமிழ் மொழி சேமித்து வைத்திருக்கிறது. எங்கிருந்தோ அல்ல, இங்கிருந்தே - நம் வரலாற்றிலிருந்தே - வாழ்விலிருந்தே நம் முன்னோர் இவற்றைச் சாதித்து இருக்கிறார்கள்.
புலிகளின் போர் அறம்
இலங்கையில் சிங்களவர்கள் துப்பாக்கிகள் எடுத்து நம் மக்களை சுட்டுக் கொன்றனர். நம் மக்களை இனப் படுகொலையிலிருந்து பாதுகாப்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி எடுத்தார். ஆனால், அறத்தோடு அவர் நின்றார். தன் கையிலேயே அவ்வளவு ஆயுதங்கள் வைத்திருந்த போதும், தமக்கென சொந்த விமானப்படை வைத்திருந்தபோதும், தலைவர் பிரபாகரன் அவர்கள் சிங்கள மக்களைக் கொன்றொழிக்க வில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் எங்காவது சிங்களப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுண்டா? தமிழ்நாட்டிற்கு புலிப் போராளிகள் வந்து தங்கியிருந்த காலத்திலே, அவர்கள் மது அருந்த மாட்டார்கள். புகைப்பிடிக்க மாட்டார்கள். அவ்வளவு ஒழுக்கத்துடன் நடந்து கொள்வார்கள்.
கையில் ஆயுதங்கள் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும், அறத்துடன் அதை ஏந்தி நின்ற தமிழன் - தலைவர் பிரபாகரன் அவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும்! அதனால்தான் உலகத் தமிழர்கள் நாம் அனைவரும் அவர்களை எண்ணிப் பெருமையோடு நிற்கிறோம்.
பிரபாகரன் - தமிழினத்தின் கொள்கலன்
தமிழ்நாட்டிற்கு வந்த ஐரோப்பிய அறிஞர்கள் பலர் தமிழ் மொழிக்காக தொண்டாற்றி இருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்தனர். ஆனால், அம்முயற்சிகளால் வெளிநாடுகளில் சாதாரண மக்களும் தமிழர்களை - தமிழினம் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை. அறிவார்ந்த மக்களிடம் மட்டுமே தமிழர்கள் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தால்தான் உலகெங்கும் தமிழினமும், தமிழர்களின் வீரமும் அறிமுகமாயின.
விடுதலைப்புலிகள் அறிவைப் பயன்படுத்தினார்கள். தாங்களே ஆயுதம் செய்ய கற்றுக் கொண்டார்கள். சொந்தமாக விமானங்களை செய்ய முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டினார்கள்.
நான் அடிக்கடி சொல்வதுண்டு. நம்முடைய அமைப்பு சிறியதா பெரியதா என்பதல்ல - நாம் அடையாளப் படுத்தும் - பிரதிநிதித்துவப்படுத்தும் நமது இனம் பெரியது! நம்முடைய மொழியும், அதன் வரலாறும் பெரியன! எனவே, அதற்குத் தகுந்தாற்போல் ஒரு கொள்கலனாக நம்முடைய தமிழ்த்தேசிய அமைப்பு இருக்க வேண்டும். அப்படித்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்தார்.
1991ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகருக்கு மாவீரர் நாள் நிகழ்வுக்காக ஐயா பழ. நெடுமாறன் அவர்களும், நானும் சென்றிருந்தபோது, அங்கு தளபதி கிட்டு அவர்களை சந்தித்தேன். அங்கு மாவீரர் நாள் உரையாற்றியபோது தளபதி கிட்டு, “தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் கொள்கலனாக செயல்படுகிறார்” என்று குறிப்பிட்டார்.
அறிவையும், வீரத்தையும் அறத்தோடு இணைத்து முன் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்! அவர்களுடைய இடைக்கால அரசில் ஆண் - பெண் சமத்துவம் பேணப்பட்டது. வரதட்சணையை ஒழித்தார்கள். சாதி ஒழிப்புக்கான செயல் திட்டங்களை வகுத்தார்கள். சாதி அடையாளத்தை மறுத்தார்கள். ஒரு இடைக்கால ஆட்சியிலேயே தமிழர்கள் எப்படி முற்போக்கு சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதைப் பார்த்தோம்.
இனத்தின் வீழ்ச்சி

ஆனால், இன்றைக்கு நமக்கென ஒரு சொந்த அரசு இல்லாமல் - இறையாண்மை இல்லாமல் நாம் வீழ்ந்து கிடக்கிறோம். ஒரு காலத்தில், பூம்புகார் போன்ற பன்னாட்டுத் துறைமுகங்கள் வழியாக மேற்கே ஐரோப்பாவிலும், கிழக்கே சீனம் வரையிலும் வணிகம் செய்த இனம் தமிழினம்! இன்றைக்கு சொந்த ஆட்சியை இழந்து நிற்பது, மிகப்பெரிய பேரவலம் - பெருந்துயரம்!
ஒரு காலத்தில் பதினான்கு நாடுகளுக்குத் தலைநகராக விளங்கிய மண் - தஞ்சை மண்! பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் ஆட்சி புரிந்த ஐந்தாம் மகிந்த என்ற சிங்கள மன்னன் தமிழ் மக்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்தான். இதை அறிந்த இராசராசச் சோழன், தஞ்சையிலிருந்து இலங்கைக்குப் படை யெடுத்துச் சென்று போரிட்டான். ஆனால், அந்த ஐந்தாம் மகிந்த தப்பித்துக் காடுகளுக்குள் ஓடிவிட்டான். மனிதநேயத்தோடு அவனை விட்டுவிட்டு இராசராசன் திரும்பி விட்டான்.
அதன்பிறகு, சிங்கள மகிந்தன் மறுபடியும் தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்தபோது, இராசராசச் சோழனின் மகன் இராசேந்திர சோழன் மகிந்தனைத் தேடிப் படையெடுத்துச் சென்றான். அவனை போரில் வீழ்த்தி, தளைப்படுத்தி, தஞ்சைக்குக் கொண்டு வந்தான். அந்த இனம் - இன்றைக்கு சொந்த அரசில்லாமல் - இனப்படுகொலைக்கான நீதியும் மறுக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கிறது!
இன்றைக்கு என்ன நடக்கிறது? இனப்படுகொலைக் குற்றவாளியான இராசபக்சே, அரியணை ஏறும் அவலம் நடக்கிறது! இலங்கையின் தலைமையமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளார். நாம் இராசபக்சேயை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் காலம் வரும்! நமது இறையாண்மை யையும் மீட்போம்!
தமிழர் தாயகங்கள் இரண்டு
வரலாற்று வழிப்பட்ட தாயகம், தனித்த பொது மொழி, தனிப் பண்பாடு - பொருளியல் வாழ்க்கை ஆகிய வையெல்லாம் இணைந்து ஒரு தேசம் உருவாகிறது என்பது சமூக அறிவியல். தேசம் என்பதன் கருத்தியல் வடிவம் - தேசியம்! நாம் முன்வைக்கும் தமிழ் நாட்டிற்கான தமிழ்த்தேசியமும், தமிழீழத்தில் முன்வைக்கப்படும் தமிழ்த் தேசியமும் அவ்வாறானவை தான். ஆனால் அவை இரண்டும் தனித் தனியானவை; வெவ்வேறு தேசங்களுக்கானவை என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
இன்றைக்கு, தமிழீழமும் தமிழ்நாடும் பல பின்ன டைவுகளை சந்தித்திருக்கலாம். சீரழிவுகள் வந்திருக்க லாம். ஆனால், நாம் அவற்றையெல்லாம் கடந்து தமிழர்கள் என்ற உணர்வால் இன்று ஒன்றுபட்டிருக் கிறோம். எனவே, எங்கோ நாம் வாழ்கின்ற பகுதிகளில் மட்டுமல்ல, நம்முடைய தாயகத்திலே இதைப்போல் எழுச்சி வேண்டும். நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக் காமல் போயிருக்கலாம். ஆனால், நிச்சயம் அதற்கான காலம் உருவாகும் என்ற நம்பிக்கையோடு இருப்போம். இவை வெறும் நம்பிக்கை சொற்கள் அல்ல - காலத்தின் கணிப்பு!
தமிழீழ இனப்படுகொலை நடந்துமுடிந்தபோது, தமிழ்நாட்டில் ஒரு சோர்வு ஏற்பட்டிருந்தது. அப் பொழுது, நாங்கள் “கண்ணீரைத் துடையுங்கள் - களத் திற்கு வாருங்கள்” என்ற குறுநூலை பல்லாயிரக் கணக்கிலே அச்சடித்து வெளியிட்டோம். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் தமிழர்களிடம் புத்துணர்ச்சியை உண்டாக்கியது. நாம் இன்னும் போராட வேண்டியதன் அவசியத்தை அது உணர்த்தியது.
சிதறும் சிங்களம் - மலரும் தமிழீழம்
அதன்பின், “சிங்களம் சிதறும்” என்ற தலைப்பில் எமது தமிழர் கண்ணோட்டம் இதழில் கட்டுரை வெளியிட்டோம். அதுபோல், இராசபக்சேவுக்கும் சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே பிற்காலத்தில் மோதல் எழுந்தது. இப்போது இரணில் விக்கிரமசிங்கே அணிக்கும், இராசபக்சே அணிக்கும் இடையில் மோதல் வந்து, அந்த ஆட்சிக் கவிழும் நிலையில் உள்ளது. இவற்றிற்கெல்லாம் அவர்கள் தற்காலிகத் தீர்வுகள் காணக்கூடும். ஆனால், இந்த மோதல்களுக்கு சிங்களர்களால் நிரந்தரத் தீர்வு காண முடியாது. ஏனெனில், சிங்களரின் கொடுங் கோன்மையை அறம் வீழ்த்தும்!
பன்னாட்டு அரசியலிலும் நிறைய மாற்றங்கள் வரும். 1989இல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டு வீழும் என்று நம்மில் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? அது 1991இல் 15 தனித்தனி நாடுகளாக மாறியது. செக் கோஸ்லோவேகியா இரண்டு நாடுகளானது. யூகோஸ் லோவியா ஆறு நாடுகளானது.
கிழக்குத் தைமூரிலே ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாம் நினைத்தோமா? ஆனால், அங்கு கருத்து வாக்கெடுப்பு நடந்து, கிழக்குத் தைமூர் தனி நாடானது! அதேபோல், தெற்குச் சூடான் தனி நாடானது! எரித்திரியா என்ற புதிய நாடு உருவானது.
ஐ.நா. மன்றத்தில் இப்போது 193 நாடுகள் இருக்கின்றன. அம்மன்றம் தொடங்கப்பட்டபோது, இத்தனை நாடுகள் இருந்தனவா? இல்லை! இன்னும் புதிது புதிதாக எத்தனையோ நாடுகள் உருவாகி ஐ.நா. மன்றத்தில் சேர இருக்கின்றன. எனவே, தமிழர்கள் தங்களுடைய இறையாண்மையை மீட்கும் காலம் வரும்!
பன்னாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்போது புதிய தேசியத் தாயகங்கள் தங்கள் இறையாண்மையை மீட்டுக் கொள்கின்றன. நாம் நம்பிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய காலமிது!
தமிழ் மக்களைக் கொன்றொழித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசைப் பாராட்டி ஐ.நா. மனித உரிமை அவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தபோது, கம்யூனிஸ்ட்டு கியூபாவும், இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அதை ஆதரித்தன. ஏன்? இலங்கையுடனும், இந்தியாவுடனும், சீனாவுடனும் இராசதந்திர உறவு வேண்டும் என்பதற்காக!
சேகுவேரா சேர்ந்து உருவாக்கிய நாடுதான் கியூபா! அந்த நாடு பிடல் காஸ்ட்ரோ உயிரோடு தெம்பாக இருக்கும்போதே, இனப்படுகொலைக் குற்றவாளியை ஆதரித்து நின்றதே! அதற்காக, சேகுவேராவை நாம் புறக்கணிக்கத் தேவையில்லை. அதேநேரத்தில், ஏமாளியாகவும் இருக்கத் தேவையில்லை!
புதிய நிலைமை - புதிய களம்
இவற்றிலெல்லாம் நமக்குப் படிப்பினைகள் வேண்டும். எந்த இனத்திற்கும் நாம் எதிரியல்ல! அதுபோல், எந்த நாட்டுக்கும் நாம் எதிரி அல்ல! நம்முடைய இறையாண்மையை மீட்க எந்த நாடு உதவினாலும், அவர்களை நாம் ஆதரிப்போம்!
இதுபோல், அவ்வப்போது நடைபெறும் பன்னாட்டு அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை தனது விடுதலை இலட்சியத்திற்காகப் பயன்படுத்தக் கூடிய வலுவான - ஆற்றலுள்ள அமைப்பே இன்றைக்கு தமிழர்களுக்குத் தேவை!
ஒருங்கிணைந்த வலுவான சனநாயக அமைப்பாக நாம் வளர்ச்சி பெற வேண்டும். மக்கள் திரள் எழுச்சிப் போராட்டங்களை நடத்தி, பன்னாட்டு கவனத்தை ஈர்க்கும் அமைப்பாக அது செயல்பட வேண்டும். அதற்குச் சில ஈகங்களை செய்துதான் ஆக வேண்டும்.
போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்று வரை, தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை ஏன் திரும்பப் பெறவில்லை? இதுவரை எந்தப் பன்னாட்டுப் புலனாய்வும் நடைபெறவில்லை - உள் நாட்டு விசாரணையும் நடைபெறவில்லை. அலங்கார மாகக் கொண்டு வரப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் என்னவானது? ஐ.நா.வின் மனித உரிமை மன்றத் தீர்மானங்கள் என்னவாயின? கூண்டிலே நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளி முடிசூட்டிக்கொள்ளும் கொடுமை அரங்கேறுவது எப்படி? இதுதான் ஐ.நா. தீர்மானங்களின் இலட்சணமா? மனித உரிமைகளை ஐ.நா. மன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இந்தச் செயலற்றத் தன்மை தகர்க்கவில்லையா?
இந்தக் குரல், தமிழ்நாட்டில் மட்டுமல்ல - புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் மட்டுமல்ல - தமிழீழத் திலும் ஒங்கி ஒலிக்க வேண்டும்! உலகக் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்!
ஐ.நா. மேற்பார்வையில் தமிழீழத்திலும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சனநாயகக் கோரிக்கையை நாம் உயிர்த்துடிப்போடு கொண்டு செல்ல வேண்டும்!
2014ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசு, ஸ்காட்லாந்து விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தியது. கனடாவில் கியூபெக் விடுதலை வேண்டுமா, வேண்டாமா என பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஸ்பெயின் - கட்டலோனியாவில் அம்மாநில அரசே கருத்து வாக்கெடுப்பு நடத்திக் கொண்டது.
இவையெல்லாம் பன்னாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டுள்ளபோது, தமிழீழத்தில் இனப்படுகொலைக்கு இவ்வளவு பேரை - கொடிய விலையாகக் கொடுத்துள்ள நமக்கு உறுதியாக நீதி கிடைக்கும்! நமக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நம்பிக்கையோடு நாம் செயலாற்றுவோம்! வெற்றி பெறுவோம்! நன்றி வணக்கம்!”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

ad

ad