புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 நவ., 2018

சித்தரையும் செல்வத்தையும் தோற்கடிக்க ஆலோசனை!

வழமை போலவே கூட்டமைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கேட்டு உள்வீட்டு குழப்பங்கள் அரங்கேறத்தொடங்கிவிட்டது.

கடந்த தேர்தலில் தென்மராட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் சரவணபவனால் தோற்கடிக்கப்பட்ட அருந்தவபாலனிற்கு பதில் தனக்கு இடம் தரவேண்டுமென கேசவன் சயந்தன் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆனால் மறுபுறம் மாவையின் வலதுகரமாகவுள்ள வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தனோ முன்னர் அனந்திக்காக வடமாகாணசபையினை விட்டுக்கொடுத்தமையினை சுட்டிக்காட்டி தனக்கு இடம் கோரியுள்ளார்.தன்னால் மாவையினை வெல்ல வைக்கமுடியுமென தெரிவித்துள்ளதுடன் தனது தவிசாளர் பதவியை மாவை.சேனாதிராசாவின் மகனிற்கு விட்டுக்கொடுக்கவும் முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஊடாக அவர் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளதாக தமிழரசு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இம்முறை தேர்தலில் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தோற்கடித்து கூட்டமைப்பினை தமிழரசு கைவசம் முழுமையாக கொண்டு செல்வதென்பது தமிழரசின் தீவிர திட்டமாகும்.அவ்வகையில் தன்னை தேர்தலில் குதிக்க அனுமதிக்கவேண்டுமென்பதே சுகிர்தனின் நிலைப்பாடாகவுள்ளது.

இதனிடையே நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை தற்போது கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடன் வழமை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்குள் ஏதேனும் கட்சிகள் இணைக்கப்படுவது குறித்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி அது தொடர்பிலான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.