30 ஜன., 2019

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-சிறிலங்காவினுடைய புதிய இராணுவப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

தென்ஆபிரிக்காவை தளமாக கொண்ட விசாரணைக் குழுவானது 2008 – 9 போரின் போது முக்கிய களநிலை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சில்வாவினுடைய பணியினை விபரிக்கும் 137 பக்க ஆணவக் கோவையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணக் கோவையானது அவருக்கு எதிரான அல்லது இன்றை வரையான சிறிலங்காவின் போர்க்கால கட்டளைத் தளபதிக்கு எதிரான மிகவும் விரிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.