30 ஜன., 2019

மேற்குலகத்தின் அழுத்தம் அதிகரிக்கையில் படைப்பலத்தை வெளிக்காட்டினார் மதுரோ

வெனிசுவேலா இராணுவத்தின் ரஷ்யத் தளவாடங்களின் அணிவகுப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ நேற்று முன்தினம் பார்வையிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான காலக்கெடுவை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெய்ன் உள்ளிட்ட நாடுகள் விடுத்துள்ள நிலையில் மதுரோவுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாகவும் படைப்பலத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் விமான எதிர்ப்புத் தாங்கிகள், குறித்த அணிவகுப்பின்போது மலைப்பகுதியொன்றின் மீது தாக்குதல் நடத்தியிருந்தன.

இந்நிலையில், இராணுவத்தின் ஆதரவை தான் கொண்டிருப்பதை இந்த அணிவகுப்பு உலகுக்கு காண்பித்துள்ளதாகவும் வெனிசுவேலாவின் ஆயுதப் படைகள் நாட்டைக் காக்கத் தயாராகவுள்ளதாக மதுரோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஜோன் போல்டன், எலியன் ஏப்ராம்ஸ் உள்ளிட்டோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடும்போக்குவாத கொள்கை ஆலோசகர்களால் இயக்கப்படும் ஆட்சிக் கவிழ்ப்பொன்றில் ஜுவான் குய்டோ பங்கேற்பதாக மதுரோ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அயல் நாடான கொலம்பியாவிலிருந்து இராணுவத்தில் கிளர்ச்சியைப் பரப்பும் நோக்கத்தோடு வட்ஸஅப், ஏனைய சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தகவல்கள் அனுப்பப்படும் சதித்திட்டத்தையும் மதுரோ கண்டித்துள்ளார்.

மோசடித் தேர்தலை மேற்கோள்காட்டி இடைக்கால ஜனாதிபதியாக தன்னை எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து தனது அதிகாரத்துக்கான சவாலை 56 வயதான மதுரோ எதிர்கொள்கிறார். சர்வதேசத்தின் ஆதரவை குவைடோ பெற்றுள்ளதுடன், தன்னுடன் இணைகின்ற படைவீரர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்குவதாக குவைடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குவைடோவை ஜனாதிபதியாக ஆதரிக்கும் நாடுகளில் நேற்று முன்தினம் இஸ்ரேலும் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ள நிலையில், வெனிசுவேலாவின் எதிர்கட்சிப் பிரதிநிதி கார்லோஸ் அல்பேர்டோ வெஷியோவை, ஐக்கிய அமெரிக்காவின் அந்நாட்டிற்கான இராஜதந்திர பிரதிநிதியாக தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மதுரோவுக்கெதிராகவும் புதிய தேர்தல்களுக்காகவும் நாளை மறுதினமும் எதிர்வரும் சனிக்கிழமையும் பாரிய போராட்டங்களுக்கு குவைடோ அழைப்பு விடுத்துள்ளார்.