23 மார்., 2019

மட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி

மட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காணி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நாளை (23) காலை 9 .00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த வைபவத்தில், காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா,

அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சி.யோகேஸ்வரன், உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களையும் சேர்ந்த மக்கள் உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள நிரந்தரக் காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் வகையில் 6109 காணி அனுமதிப்பத்திரங்களும், 1097 காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் தெரிவித்தார்.