புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜூன், 2019

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்

இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே பதவி விலகியதையடுத்து அடுத்து யார் பிரதமர் என்ற நிலையில், அதற்கான முதல் கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, தற்போது இரண்டாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.


ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதில் இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை தெரசா மே சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

இதனால் பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியாக அக்கட்சியின் 10 எம்.பி.க்கள், பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினர். இங்கிலாந்து மக்களவையில் கடந்த 13-ஆம் தேதி நடந்த இதற்கான வாக்கெடுப்பில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இதில், போரிஸ் ஜான்சன் அதிகபட்சமாக 114 வாக்குகளையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் 43 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மிஷெல் கோவ் 37 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அடுத்த சுற்றுக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள குறைந்தது 17 வாக்குகளாவது பெற வேண்டும் என்ற நிலையில் மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லெட்ஸம், எஸ்தர் மெக்வீ ஆகியோர் அதைவிடக் குறைவான வாக்குகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினர். இதனால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 7 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும், இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது சுற்றுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அதில், போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் முதல் இடத்திலும், ஜெர்மி ஹன்ட் 46 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், மிஷெல் கோவ் 41 வாக்குகளும், ரோரி ஸ்டூவார்ட் 37 வாக்குகளும், சஜித் ஜெவிட் 33 வாக்குகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

இரண்டாம் சுற்றுக்கான வாக்கெடுப்பில் 33-க்கும் குறைவாக வாக்குகள் பெற்றால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதால், 7 பேரில் டோமினிக் ராப் 30 வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றுள்ளதால், அவர் வாக்களித்தவர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக போஸ்டல் வாக்கு எண்ணிக்கை முறையில் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.