புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஜூன், 2019

கல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ்! குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்துனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் இந்துமத குரு, கல்முனை நகரசபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இன்றைய தினம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் போராட்ட இடத்திற்கு சென்றிருந்தார்.

அத்துடன், பிரதேசவாசிகள் பெருமளவானவர்கள் அங்கு குவிந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு விசேட அறிவிப்பொன்றை விடவுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளதால், அங்கு ஊடகவியலாளர்களும் பெருமளவில் குவிந்துள்ளனர்.

இதேவேளை, இந்த போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக கல்முனை புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ரயர்கள் எரிக்கப்பட்டன. மர்மக்கும்பல் ஒன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. பொலிசார் அந்த இடங்களிற்கு சென்று, ரயர்களை அப்புறப்படுத்தினர்.

இதேவேளை, கல்முனை தரமுயர்த்த கோரிக்கை போராட்டத்திற்கு ஏட்டிக்கு போட்டியாக முஸ்லிம் குழுவொன்று ஆரம்பிக்கவிருந்த போராட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன