25 ஜூன், 2019

தினகரனின் வலதுகை தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையலாம்


தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்ததோடு, மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை ஆபாசமாக விமர்சித்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கட்சி நிலவரங்கள் குறித்தும் தங்க தமிழ்செல்வன் பேசிய வாட்ஸ்அப் ஆடியோ பேச்சு குறித்தும் இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.


பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ரேடியோவில் கொடுத்த பேட்டி தொடர்பாக தங்க தமிழ்செல்வன் என்னிடம் விளக்கம் அளித்தார். இது குறித்து அவரை எச்சரித்தேன் . ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்குவேன் என்றேன்.

தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் திட்டமிட்ட ஆலோசனை கூட்டம் தான். தங்க தமிழ்செல்வனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க அச்சமோ, தயக்கமோ இல்லை. மதுரையை சேர்ந்த நிர்வாகியிடம் தான் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார். தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். தங்கதமிழ்செல்வன் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அமமுகவில் இருந்து விரைவில் தங்க தமிழ் செல்வன் நீக்கப்படுவார். தேனி மாவட்ட செயலாளர், கொள்கைபரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்.

18 எம் எல்.ஏக்களை நீக்கிய சபாநாயகருக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும் என கூறினார்