25 ஜூன், 2019

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பருவமழையையும், அணைகளில் நீர் இருப்பையும் காரணம் காட்டி வழக்கம்போல் கையை விரித்தது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணி​யில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது. தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

கூட்டத்தில் காவிரிநீர் தொடர்பான கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கோரியதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இனி வரும் கூட்டங்களிலும் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது.

ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது.

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை கர்நாடகா திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரையும், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரையும் முழுமையாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.