
இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று சட்டமன்ற அவை நடவடிக்கைகளுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் சந்தித்துப் பேசினார் ரத்தினசபாபதி. அதிமுகவில் மீண்டும் செயல்பட வேண்டும் என்கிற விருப்பத்தினையும் முதல்வரிடம் அவர் தெரிவித்தார். அப்போது உள்ளூர் அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த ரத்தினசபாபதி, “நான் இடையில் வேறு அணியில் இருந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் நான் அதனை விட்டு விலகிவிட்டேன். மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தோடு இருந்தேன். தடுமாறி இருந்த என்னை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவந்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரையே சாரும். இருவரும் கலந்துபேசிய பிறகு முதல்வரை சந்தித்து, இன்று முதல் தொடர்ந்து கட்சியில் முன்பைப் போல தொய்வின்றி செயல்படுவேன் என்று கூறினேன்” என்றவரிடம், நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறுவீர்களா என்ற கேள்விக்கு, “அதிமுகவில் இணைந்துவிட்ட பிறகு வழக்கு முடிந்துவிட்டதாகத்தானே அர்த்தம்” என பதிலளித்தார்.
மனமாற்றத்திற்குக் காரணமென்ன என்று கேட்கப்பட அதற்கோ, “அமமுக கட்சியாக ஆரம்பிக்கப்பட்டபோதே மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அதனைவிட்டு விலகிவிட்டோம். ஆகவே அதனை விமர்சிப்பது தேவையில்லாத ஒன்று. மக்கள் அமமுக புறக்கணித்துவிட்டனர். ஆரம்பத்திலிருந்தே இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான். ஏனெனில் இந்த இயக்கத்தின் ஆரம்பகால தொண்டன். என்னை இந்த இயக்கம் வளர்த்தது. நானும் இந்த இயக்கத்தை வளர்த்தேன். மீண்டும் அதிமுக வெற்றிபெற வேண்டும், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அமமுகவிலிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும்” என்றார். மேலும், விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் கூடிய விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
தினகரனுக்கு மக்கள் ஆதரவில்லை என எடுத்துக்கொள்ளலாமா என்று நிருபர் கேட்க, “எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், தேர்தலில் அனைவரையும் விட தினகரன் பின் தங்கிவிட்டார். உண்மையான அதிமுக இதுதான் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். சசிகலா உள்பட அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அமமுக படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாப்புலர் முத்தையா, இன்பத்தமிழன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சசிரேகா என முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு தினகரனுடன் பிணக்கு கொண்டு அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து அமமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா.