புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2019

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்தரப்பு பிரதிநிதிகள் பொது இணக்கப்பாடு? ஞாயிறன்று உடன்படிக்கையில் கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் பலனாக இன்று இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரும் ஏது நிலைகள் தோன்றியிருப்பதாக இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட கட்சிப்பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொது இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், அவர்களின் பின்புலத்திலியங்கும் வல்லரசுகளிடமும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இணக்கப்பாட்டில் ஒப்பமிடும் வகையில் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கூடி உடன்படிக்கையில் ஒப்பமிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.



தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான நிலைப்பாடொன்றுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் 3 ஆவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் இன்று மாலை 5 மணி முதல் இடம்பெற்றது.

இன்றைய சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வலி வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ. சுகிர்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க. அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும், மூத்த சட்டத்தரணியுமான என். சிறீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.



சந்திப்பை முடித்து வெளியேறிய அனைவரும் ஊடகங்களிடம் பேசிய போது, இன்றைய சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வரும் ஏது நிலைகள் தோன்றியிருப்பதாகவும், இது பற்றி மாணவர்கள் தொகுத்துள்ள ஆவணத்தில் ஒப்பமிடுவதற்கு அனைத்துக் கட்சிகளும் கொள்கையளவில் இணங்கியுள்ளன என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தமிழர் தரப்பு கோரிக்கைகளுக்கு பிரதான வேட்பாளர்கள் இணங்கிவருவார்கள் என்ற நிலை தோன்றினாலொழிய தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனி சார்பில் சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் தெரிவித்தார்.

ad

ad