19 டிச., 2019

கருணாநிதியின் வார்த்தையை நம்பி 1.5 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சமைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டுமென பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் சற்றுமுன்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என பிரதமர் மோடி, அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டதாக கூறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை என கேள்வியெழுப்பிய முதலமைச்சர் தற்போது இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ததுபோல தி.மு.க. நாடகமாடுகின்றதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும் தமிழக மக்கள் பெற்றுக்கொள்ளும் சகல வசதிகளும் தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்