புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 டிச., 2019

ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
ரன் என்பவரை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்திறமையால் நேற்று விடுதலை செய்யப்பட்டார். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் விடுவிக்கப்படும் முதல் அரசியல் கைதி இவராவார்.

இவரது கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு – கொள்ளுபிட்டி, பித்தலை சந்தியில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் கோட்டாபய, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த ஐந்து அரசியல் கைதிகளுக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி இந்த வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தினத்தில் முதலாம், இரண்டாம், ஐந்தாம் எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சகர்கள், நீதிமன்றிற்கு சமூகமளிக்காத நான்காம் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்திரபோஸ் செல்வச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பித்திருந்தனர்.

அரச சாட்சியங்களின் சாட்சியங்களும் எதிரிதரப்பின் சாட்சியங்களும் நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கு மேலதிக விளக்கத்திற்காக நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது எதிரியின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டவாதி கே.வி.தவராசா தனது சமர்ப்பணத்தில்,

யாழ்ப்பாணம், புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரான இந்த வழக்கின் எதிரியான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் 1993ஆம் ஆண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு வந்து மகரகம புற்றுநோய் வைத்திசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும்போது கொழும்பில் 2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

எதிரி தரப்பின் சாட்சியமாக சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயுரதனின் சாட்சியத்தில், புற்றுநோயாளியான கைதியை பொலிஸார் சித்திரவதை செய்ததினால் கைதியின் உடலில் 12 கடுங்காயங்கள் காணப்படுவதாகவும் அந்தக் காயங்கள் கைதி தடுப்புப் காவலில் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட மருத்துவ அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்ட வாக்குமூலம் அல்ல என இந்த நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

இந்த வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்தச் சான்றுகளையும் சட்டமா அதிபர் திணைக்களம் சான்றாக குற்றப்பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்பது மட்டுமன்றி இந்த நீதிமன்றம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாக ஏற்க மறுத்து நிராகரித்த தினத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களாக நான்காம் எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சாட்சியம் உள்ளதா என்பதை நீதிமன்றிற்கு அறிவிக்காமல் தொடர்ந்து தவணை கோருவது, 14 வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தக் கைதிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாமல் சாட்சியங்களை முன்வைக்காமல் தொடர்ந்து தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என நான்காம் எதிரி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டவாதி கே.வி.தவராசா தனது வாதத்தை முன்வைத்தார்.

அப்பொழுது சட்டமா அதிபர் சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டவாதி ரோகாந்த அபேசூரிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர வேறு சான்றுகள் இல்லை என்பதனை ஏற்றுக் கொள்வதாகவும் அரச தரப்பிற்கு ஓரிருநாட்கள் ஒரு சந்தர்ப்பத்தை தரும்படியும் கேட்டுக் கொண்டார்.

அரச தரப்பின் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுத்த நீதிபதி இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதாக எதிரிதரப்பை பார்த்துக் கூறி 2019ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கினை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளையில் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரச சட்டவாதி, சட்டமா அதிபர் வழக்கை தொடர்ந்து நடாத்த சான்றுகள் உண்டா என்பதை தீர்மானிக்க மேலும் கால அவகாசம் கோரிய போது அதற்கு எதிரி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டவாதி, சட்டமா அதிபர் வழக்கை தொடர்ந்து நடத்த சான்றுகள் நீதிமன்றில் முன்வைக்கப்படாவிடின் எதிரியை நீதிமன்றம் விடுதலை செய்ய நீதிமன்றிற்கு சட்டரீதியான அதிகாரம் உண்டு என சட்ட அறிக்கைகளை ஆதாரமாகக் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து அரச தரப்பினதும் எதிரி தரப்பினதும் வாதத்தை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி எதிரி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டவாதியின் வாதத்தையேற்று எதிரியாகிய சந்திரபோஸ் செல்வச் சந்திரனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக பிரதி மன்றாடியர் நாயகமும், ஜனாதிபதி சட்டவாதியுமான ரோகாந்த அபேசூரியவும் எதிரி சார்பாக சட்டத்தரணி செல்வி தர்மஜா தர்மராஜாவின் அனுசரனையில் ஜனாதிபதி சட்டவாதி கே.வி.தவராசாவும் ஆஜரானார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முதலாவதாக விடுதலையாகும் அரசியல் கைதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது