புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2020

அமெரிக்காவை பணிய வைக்கும் ஈரானின் ஏவுகணை வியூகம் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களின் பரப்பை முற்றுகை

அமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் பொறிமுறையை மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்கா பலமாக உருவாக்கி உள்ளது.

தொலைதூரக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஆளற்ற பறக்கும் விமானங்களான ட்ரோன்கள் மூலம், தங்களது எதிரிகளின் இலக்குகளை அமெரிக்கா மிகத்துல்லியமாகத் தாக்கிவருகின்றது. இந்த ஆளில்லாத் தாக்குதல் மற்றும் வேவு விமானங்களில், பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய Hellfire ஏவுகணைகள் நான்கு பொருத்தப்படும் சாம்பல் கழுகு எனப்படும் MQ-1C Gray Eagles ரக ட்ரோன்கள் மிகவும் ஆபத்தானவை.

இதே முறையிலேயே ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானி தாக்கியழிக்கப்பட்டார். சத்தமின்றி பறக்கககூடிய இந்த MQ-1C Gray Eagles ட்ரோனில் பொருத்தப்பட்ட, மணிக்கு 370 கிலோ
மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய, தாக்குதல் இலக்கும் பாதையும் வரையறுக்கப்பட்ட யஹல்பயர் ஏவுகணைகள் மூலம், சுலைமானியில் இலக்கு நிச்சயிக்கப்பட்டது.

111

பல வருடகாலப் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் சர்வதேசப் புலனாய்வு ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த இலக்கு நிச்சயிக்கப்பட்டது. அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சுலைமானி மீதான கண்காணிப்பைத் தொடர்ச்சியாப் பேணி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது கடந்த 20 வருடங்களிற்கும் மேலாகப் பல கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை முறியடிக்கட்டு வந்துள்ளன. ஆனால் மேற்குறிப்பிட்ட ரீப்பர் ரக ஆளில்லாவிமானத்தின் இலக்கில் இருந்து சுலைமானியால் தப்பித்திருக்க முடியவில்லை.

சுலைமானியும் அவரது தளபதிகளும் வந்த இரண்டு வாகனங்களும் இந்தத் தாக்குதலில் துல்லியமாகத் தாக்கியழிக்கப்பட்டன. தனது மேற்கத்தேயக் கூட்டாளிகளிற்குக் கூடத் தெரிவிக்காமல், சுலைமானியின் மீதான தாக்குதலிற்கான ஆணையை டொனால்ட் ட்ரம்ப் வழங்கியிருந்தார்.

ஆனால் இந்தத் தாக்குதலின் எதிர்வினைத் தாக்குதல், ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவம் மற்றும் விமானப்படையிரைப் பெரிதும் சிக்கிலிற்கு உள்ளாக்கியதுடன், அப்பகுதி மேலான தங்களது வானாதிக்கத்தையும் இழக்கவைத்துள்ளது.

ஜனவரி 3ம் திகதி சுலைமானி மீதான தாக்குதல் நடந்த பின்னர், ஈரானின் அதியுர் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனி, அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்பேன் எனவும் முகத்தில் ஓங்கி அறைவேன் எனவும் சூளுரைத்திருந்தார். இதனால் ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள் மிகவும் உச்சநிலை எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் ஈராக்கின் அன் அல்-அசாத் அமெரிக்க வான்படைத்தளம் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் நடந்த வேளை, ஈரான் மற்றும் ஈராக் வான்பரப்பின் மேல், சாம்பல் கழுகு ரக ஆளில்லா விமானங்கள் ஏழு பறப்பில் ஈடுபட்டிருந்தன.

அங்குள்ள அமெரிக்கக் கூட்டுப் படைகளின் முகாம்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் இந்த விமானங்கள் ஈடுபட்டிருந்தன.

இந்த வேவு அணியில் MQ-1C சாம்பல் கழுகும் வேவுப் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த ரக ஆளில்லா விமானங்கள் நான்கு யஹல்பயர் ஏவுகணைகளைத் தாங்கியபடி 27 மணித்தியாலங்கள் தொடர்ந்து பறக்கும் திறனுள்ளவை.

தரையில் தான் தாக்குதல் நடக்கும் என்ற எச்சரிக்கை வழங்கப்பட்டமையால், தாங்கள் இந்த ஆளில்லா விமானங்களைப் பறப்பில் ஈடுபடுத்தியதாக தொலைக்கட்டுப்பாட்டு அணியின் கட்டளையதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தாக்குதல் தொடங்கிய சில கணங்களிலேயே, தரைக்கும் ஆளில்லா விமானங்களிற்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

தாக்குதல் நடாத்தப்பட உள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டமையால், அந்தத் தளத்திலிருந்த 1500 அமெரிக்க வீரர்களில் பெரும்பகுதியினர், பல மணிநேரங்களிற்கு மேலாகப்பதுங்கு குழிகளிலேயே பதுங்கி இருந்துள்ளனர்.

ஆனாலும் வெளியில் இருந்த, இருண்ட இரும்பு அறைகளிற்குள், மேலே பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானங்களைத் தொலைத் தொடர்பில் செலுத்தியபடி, 14 விமானிகள் இருந்துள்ளனர்.

இவர்கள் ஏவுகணைகள் வரும் திசைகளை அறிவித்தபடி இருந்துள்ளனர். ஆனாலும் பலத்த ஏவுகணை மழை இவர்களிற்கு மிகவும் நெருக்கமாக விழத்தொடங்கியதும், தங்கள் கதை அன்றுடன் முடிந்து
விட்டதாகவே எண்ணினோம் எனக் கட்டளை விமானி ஊடகங்களிற்குத் தெரிவித்திருந்தார்.

அவ்வளவு தொடர்ச்சியாக வீழ்ந்த ஏவுகணைகள், அன் அல்-அசாத் அமெரிக்க விமானப்படை முகாமை முற்றாக முடக்கியது.

தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலங்கள் இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில், ஆளில்லா விமானங்களின் ஒளிக்கற்றைத் தொடர்பாடல்கள் (fibre lines) முற்றாக அழித்து எரிக்கப்பட்டன. இந்த ஒளிக்கற்றைகள் எரித்து அழிக்கப்பட்டமையால், வானில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானங்களின் கட்டப்பாடும், அதனிலிருந்த பெறப்பட்ட காணொளித் தகவல்களும் முற்றாக இழக்கப்பட்டன.

இதனால் இந்த விமானிகளும் பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்தனர். ஆளில்லா விமானங்கள் மேலே அநாதரவாகப் பறந்த வண்ணம் இருந்தன.

அமெரிக்கா தனது ஆகாயக் கண்களை இழந்தமையால், தன் முகாம்களிற்கும், ஈராக்கிற்கும் மேலான வான்பரப்பையும், வானாதிக்கத்தையும் இழந்தது. விமானப்படையினரிற்கான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

இதனால் இந்த விமானிகளும் பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்தன.

மேலே பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டாலும், எந்தத் தகவல்களும் கீழிருக்கும் கட்டளை மையத்திற்கோ, அன் அல்‡அசாத் வான்படைத்தளத்திற்கோ தெரியப்போவதில்லை என்ற நிலையிலேயே, பலவீனமான நிலையில் அன்று அமெரிக்கா இருந்துள்ளது.

இந்த ரக சாம்பல் கழுகு ஒன்று மட்டும் ஏழு மில்லியன் டொலர் பெறுமதியானது. இதில் ஏழு விமானங்களின் தொலைத் தொடர்புக் கட்டளைகளை இழந்த நிலையில், பெரும் பொருளாதாரச் சேதத்திற்குள் அமெரிக்கா தள்ளப்படும் ஆபத்து இருந்துள்ளது.

இந்தச் சாம்பல் கழுகுகள் ஜிகாதிப் பயங்கரவாதிகிளிற்கு எதிரான போரில், கூட்டுப்படைகளிற்கு உதவுவதற்காக, 2017 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தச் சாம்பல் கழுகுகள் ஈராக்கின் வான்பறப்பில் பறப்தற்கான அனுமதியைக் கூட்டுப்படைகள் ஈராக் அரசிடம் பெற்றிருந்தன. ஆனால் ஈரான் தாக்குதல் நாடாத்துவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஈராக் அரசு இந்த அனுமதியை இரத்துச் செய்திருந்தது.

அமெரிக்க வான்படைத்தளம் மீதான தாக்குதலிற்கு, இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட்டமை, அமெரிக்க வீரர்களை நட்டாற்றில் தள்ளி உள்ளது.

தாக்குதல் நின்றதும், மிக மிக அவசரமாக, 500 மீற்றர்கள் நீளமான ஒளிக்கற்றைத் தொடர்புகள் , இராணுவத் தொழில்நுட்பவியலாளர்களினால் பல மணி நேரங்களின் பின்னர்மீளமைக்கப்பட்டன.

ஆனாலும், வான்படைத்தளம் முற்றாகச் சேதமடைந்த நலையிலும், கட்டளைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நிலையிலும், விமானங்களைத் தரையிறக்குவது என்பது, பெரும் சாவாலாக இருந்ததாக விமானக் கட்டளை அதிகாரி ஹேர்வே தெரிவித்துள்ளார்.

எத்தனை விமானங்கள் கட்டுப்பாட்டு மையத்தினால் மீளப்பறெப்படும் என்பது சந்தேகமாகவே இருந்துள்ளது.

முக்கியமான சாம்பல் கழுகு ஒன்று, தாக்குதல் நடந்த சமயத்திலேயே தறையிறக்கப்படடிருக்க வேண்டும். ஆனால் தாக்குதல் நடந்தமையால், பல மணிநேரங்கள் இது தறையிறக்கப்படாமையினால், எரிபொருள் முடிந்திருக்கும் அபாயமும் அங்கு எதிர்நோக்கப்பட்டது.

எரிபொருள் இழக்கப்பட்டால், ஏவுகணைகளுடன் இது நிலத்தில் வீழ்ந்து வெடிக்கும் ஆபத்தும் அங்கு நிலவியது.

பலமணிநேரப் போராட்டத்தின் பின்னர், ஒவ்வொரு ட்ரோன்களும் தரையிறக்கப்பட்டன. உலகத்தின் பெரிய இராணுவ சக்தியயனப்படும் அமெரிக்கா, தனது ஆகாயக் கண்களைத் தரையிறக்குவதற்குள் மூச்சுவாங்கி விட்டது.

ஆளில்லா விமானங்கள் தரையிறக்கப்பட்டாலும், ஈராக்கிற்கு மேலால் பறப்பதோ, ஈரானிற்கு மேலால் பறப்பதே, இந்த ஆளில்லா விமானங்களிற்கு வழியில்லாமல் போய்விட்டது. ஈராக்கில் வைத்து, அமெரிக்கா ஈரான் இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தியமையால், ஈராக் இனி எந்த அனுமதியும் வழங்கப்போவதில்லை.

பறந்தால் சுட்டுவீழ்த்தவும், ஈரானும் ஈராக்கும் தயங்கப்போவதும் இல்லை

ad

ad