புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஏப்., 2020

பிரான்சில் உள்ளிருப்பு மே 11 வரை நீட்டிப்பு!!


மூடிமுடங்கிக் கிடக்கும் நாட்டையும் பொருளாதாரத்தையும் மீண்டும் வழமை நிலைமைக்கு நகர்த்தும் முயற்சிகளை மே 11 ஆம் திகதியை ஆரம்பமாகக் கொண்டு முன்னெடுப்பதற்கு பிரெஞ்சு அரசு தீர்மானித்திருக்கிறது.
மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் உள்ளிருப்புக்காலம் ஐந்தாவது வாரத்தினை எட்டுகின்ற நிலையில் அதனை மே 11ஆம் திகதி வரை மேலும் சுமார் ஒருமாத காலம் நீடிக்கும் அறிவிப்பினை அதிபர் மக்ரோன் நேற்று விடுத்திருக்கிறார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய அரை மணிநேர உரை, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை.
நிலைமையின் முன்னேற்றத்தைப் பொறுத்து மே 11 முதல் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.
குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களையும் ஆரம்ப, நடுத்தர, உயர்தர பாடசாலைகளையும் அன்று முதல் திறப்பதன் மூலம் வீடுகளுக்குள் டிஜிட்டல் உபகரணங்களோடு முடங்கிக் கிடக்கும் மாணவர்களை கல்விச் செயற்பாடுகளை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர் தெரிவித்தார்.
*பல்கலைக் கழகங்கள் தொடர்ந்தும் இயங்காது. கோடை காலம் வரை இந்த நிலை தொடரும்.
*மக்கள் கூடும் இடங்களான பார்கள், உணவகங்கள், கபேக்கள், சினிமா, நாடக இன்னிசை அரங்குகள், ஹொட்டேல்கள், அரும்பொருள் காட்சியகங்கள் என்பன தொடர்ந்து இந்தக் கட்டத்திலும் (மே 11) மூடப்பட்டிருக்கும்.
*மக்கள் திரளுகின்ற திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்களை நடத்த வரும் ஜீலை நடுப்பகுதிவரை
அனுமதிக்கப்படமாட்டாது.
*ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான பயணவழிகள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.
 
*சிவில் சேவையின் கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுவாசப் பாதுகாப்பு கவசங்கள் (மாஸ்க்) மே 11 முதல் வழங்கப்படும்.
மேற்கண்ட விடயங்களையும் அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மே மாத நடுப்பகுதியில் நிலைமையின் முன்னேற்றத்தை கூட்டாக மதிப்பீடு செய்து மேலும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் போது அது பற்றி மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
s
உள்ளிருப்புக் காலம் முடிவடையும் போது நாட்டு மக்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அரசுப் பிரமுகர்கள் முன்னர் கூறியதற்கு மாறாக, நோய்த் தொற்று அறிகுறி உடையவர்கள் மாத்திரமே சோதிக்கப்படுவர் என்று மக்ரோன் தனதுரையில் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் அனைவரையும் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றார் அவர். தொற்று நோய் ஒன்றை எதிர் கொள்ளும் தயார் நிலையில் நாடு இருக்கவில்லை என்பதை இன்றைய தனது உரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார் மக்ரோன்.
மாஸ்க்குகள் மற்றும் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், "உங்களைப் போலவே நானும் சில தவறுகளைக் காண்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
வைரஸ் காலத்துக்குப் பிந்திய நகர்வுகளை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டா அல்லது மக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தியா எடுப்பது என்று எழுந்துள்ள விவாதங்களுக்கு மத்தியில் - நாட்டை முடக்கவும் வேண்டும், நகர்த்தவும் வேண்டும் என்ற இரண்டும் கெட்டான் நிலைமையில் அரசுகள் தடுமாறி வருகின்றன.
தொற்று இன்னும் தீவிரமடைய வாய்ப்புகள் இருப்பதால் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றும் முடிவை அவசரப்பட்டு எடுத்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி இருப்பது தெரிந்ததே.