தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ந. காண்டீபன் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சர்ச்சையான விடயங்களை பேசியுள்ளதுடன் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார். முன்னணியின் சட்ட ஆலோசகரின் சிறிய விவாதம் பலமுனைகளிலும் எதிர்ப்பை கண்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பசில் ராஜபக்சவுடன் டீல் பேசி பணம் வாங்கியதாக அந்தப் பேட்டியில் காண்டீபன் குறிப்பிட்டதானது, மகிந்தவிடம் பணம் பெற்றே புலிகள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்ற புலி எதிர்ப்புவாதிகளின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல உலகத் தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்களை ஒருமையில் பேசி அவமதிப்பு செய்துள்ளதாக இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அத்துடன் சுமந்திரனுக்கு புலிகளால் ஆபத்து இருந்ததது என தனது குரலாகவும் அவர் கூறியிருப்பதன் மூலம் சுமந்திரன் பாதுகாப்பு பெற்றது சரியே என்ற நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்த்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றமை ஊடகங்கள் மத்தியில் மிகுந்த அவதானத்துடன் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழீழ தேசிய மாவீரர் நாளை, அனைத்து இயக்கங்களின் மாவீரர் நாளாக மாற்ற தமது கட்சி பரிசீலித்து வருவதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னர் கருத்து தெரிவித்து மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார்.
அதேபோன்று, நான்கு, ஐந்து பிள்ளைகள் உள்ள வீடுகளில் உணவுக்கு வழியின்றி போராட்டத்தில் இணைந்தார்கள் என்றும் புலிகளின் பொறுப்பாளர்கள் பொய்கூறி வலுக்கட்டாயமாக போராட்டத்தில் இணைத்தார்கள் என்றும் சர்ச்சைபடப் பேசி தமிழீழ விடுதலைப் புலிகளையும் மாவீரர்களையும் கஜேந்திரகுமார் அவமதிப்பு செய்துள்ளதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
இத்தகைய கருத்துக்களை கண்டிக்காமல், நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கியதன் விளைவாகவே, இன்று ந. கண்டீபனின் பொறுப்பற்ற கருத்துக்கள் அமைந்துள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக திரு. ந. காண்டீபனும் அக் கட்சியும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புலத்தில் இருந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்களின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொண்டு, இதுபோன்ற கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து, மிகவும் நுட்பமான முறையில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும், முன்னணியினர் துரோகம் இழைப்பதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன