புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 மே, 2020

www.pungudutivuswiss.com
முல்லை புதுக்குடியிருப்பில் ரூபா 5000 கொடுப்பனவில் கிராம அலுவலர் மோசடி ?
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராமங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் கிராம அலுவலர் மோசடி செய்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒரு கிராம அலுவலரே கடமையாற்றி வருகின்றார்.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக கொடுப்பனவை பெறுபவர்கள் மற்றும் இவற்றுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் அரசினால் 5000 ரூபா மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 5000 வழங்கப்பட்டது.

அந்தவகையில் கடந்த மாதம் மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலில் கொடுப்பனவு பெற்றவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு மீதி 3000 ரூபாவினை வழங்காமல் இருந்துள்ளார்

இந்நிலையில் குறித்த விடயம் மக்களால் வெளியில் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சிலருக்கு அந்த கொடுப்பனவில் மீதி 3000 கொடுப்பனவையும் கொண்டு சென்று கொடுத்த கிராம அலுவலர் ஏனையவர்களுக்கு அந்த கொடுப்பனவுகளை வழங்கவில்லை

இந்நிலையில் சம்பவம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஊடகங்கள் மக்களிடம் சென்று கருத்துக்களை பெற்ற வேளையில் கிராம அலுவலர் இன்று ஒரு குடும்பத்துக்கு கொடுப்பனவை கொண்டுவந்து வழங்கியுள்ளார்

குறித்த பகுதியில் இன்று கூட அந்த கொடுப்பனவு வழங்கப்படாமல் பல குடும்பங்கள் உள்ளன.

இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் வினவியபோது குறித்த விடயம் தொடர்பில் விசேட குழு ஒன்று அமைத்து தாங்கள் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்