புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2020

கங்காருவை பழிதீர்த்தது இந்திய புலி!- 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா படுதோல்வி

www.pungudutivuswiss.com
மெல்போர்னில் நடந்து முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்று பழி தீர்த்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி 326 ரன்கள் குவித்தது. கேப்டன் ரஹானே தனது 12-வது சதத்தை நிறைவு செய்தார். இவர் 112 ரன்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 57 ரன்கள் எடுத்தார்.

131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்னில் உமேஷ் யாதவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேத்யூ வேட்டும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஸ்கோர் 42 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் 28 ரன்னில் அஸ்வின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டீவன் சுமித் டக் அவுட் ஆனார். மறுமுனையில் நிதானமாக செயல்பட்ட மேத்யூ வேட் 40 ரன் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 17 ரன், கேப்டன் டிம் பெய்ன் 1 ரன் ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 2 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது.

அதைதொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், கம்மின்ஸ் 15 ரன்னுடனும் களத்தில் இறங்கினர். இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் இந்த ஜோடியில் பேட் கம்மின்ஸ் 22 ரன்களும், சிறப்பாக ஆடிய கேமரூன் கீரின் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நாதன் லைன் 3 ரன்னும், ஹேசில் வுட் 10 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 69 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறக்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து சுப்மன் கில்லுடன், கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றிபாதைக்கு சென்றது. முடிவில் சுப்மன் கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இந்திய கேப்டன் ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது

ad

ad