புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2020

ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா? மூன்றிலிரண்டு முடிவெடுக்கட்டும்! – பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
ங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம்.

இலங்கைத் தமிழர் அரசியலில் இப்பதம் எப்போதும் சாகாவரம் பெற்றது. மீண்டும் ஜெனிவாக் கூட்டத்தொடர் பற்றியே தமிழரின் அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்காக ஒற்றுமை அல்லது இணக்கம் என்பது தேடப்படுகிறது.

இலங்கை நாடாளுமன்ற அரசியலில் உதயமான முதலாவது தமிழர் அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். அதன் உருவாக்கத் தலைவர் (காலஞ்சென்ற) ஜி.ஜி. பொன்னம்பலம். 1947ம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் இவரோடு எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு. வன்னியசிங்கம் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி ஊடாகவே தேர்தலில் தெரிவாகினர்.

ஆனால், அடுத்த இரண்டாண்டுக்குள் தமிழ் காங்கிரஸிலிருந்து விலகிய செல்வநாயகமும் வன்னியசிங்கமும் தமிழரசுக் கட்சியை உருவாக்கி அதனைப் பலமடையச் செய்தனர். இதனால் காங்கிரஸ் படிப்படியாக செல்வாக்கிழந்தது.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணாகவுமிருந்த இவ்விரு கட்சிகளும் இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர் – 1972ல் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைய நேர்ந்தது காலத்தின் தேவையாகவிருந்தது.

இந்தக் கால் நூற்றாண்டில் இவ்விரு கட்சிகளும் அல்லது அவற்றின் தலைவர்களும் தமிழ் மக்களின் அரசியல் நலன் கருதி ஓரளவுக்காவது ஒற்றுமையாக அல்லது விட்டுக்கொடுக்கும் இணக்கப்பாட்டில் இயங்கியிருந்தால் தமிழர் வரலாறு வேறாகியிருக்கலாம்.

பின்னர் 1977 தேர்தலில் தமிழர் கூட்டணி உருவாகியபோதாவது கொள்கை அடிப்படையில் கட்சிகள் நேர்மையாக இணைந்து செயற்பட்டிருந்தால், சிங்கள தேசம் தமிழினத்தின் வாழ்வியலை தாம் விரும்பியவாறு மாற்றியமைக்க முடியாது போயிருக்கலாம்.

முப்பதாண்டு கால ஆயுதவழிப் போராட்டத்தின் ஆரம்பம்கூட தமிழர் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மையினாலேயே ஏற்பட்டது என்று கூறவேண்டும். இதனை உணர்ந்த நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் 2000 ல், எதிரும் புதிருமாகவிருந்த அனைவரையும் இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினர். காலத்தின் தேவையை ஒட்டிய இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இதனைப் பார்க்கலாம்.

முள்ளிவாய்க்காலில் போராட்டம் மௌன நிலைக்குச் சென்றதோடு கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்தது. பெயரளவில் மட்டுமே கூட்டு என்று இருந்ததே தவிர, நடைமுறையில் அது பிளவாகவே இருந்தது.

கடந்த ஒரு தசாப்த தமிழரின் ஏகபோக அரசியலில் ஏற்பட்ட ஏற்றமும் இறக்கமும் – ஒரு கட்சி அரசியல் பெற்றுத் தந்த ஏமாற்றமும், கடந்த ஆகஸ்ட் மாதப் பொதுத்தேர்தலில் ஒரு மாற்றத்தைக் காட்டியது. அதனூடாக பெரும்பான்மையை இழந்த தமிழரசுக் கட்சிக்குள் சிலர் பாடம் கற்றுக் கொண்டனர் என்றும் சொல்லலாம்.

அதன் பிரதிபலிப்பை இப்போது ஆங்காங்கு காணக்கூடியதாகவுள்ளது. உள்வீட்டுக்குள் தோற்றவர்களுக்கும் வென்றவர்களுக்கும் இடையில் நீயா நானா என்ற தலைமைப்போட்டி ஆரம்பமாகியுள்ளது.

அதேசமயம், அந்த வீட்டுக்குள் வென்றவர்கள் தங்களின் ஆதரவுத் தளம் – வாக்கு வங்கி குறைந்தமையால் எதிர்கால நலனுக்காகவாயினும் அல்லது வெளிப்பார்வைக்காயினும் மாற்றுத் தலைமைகளை மதித்து அவர்களுடன் கூடிச் செல்வதாகக் காட்டவேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எதனையும் இலகுவாக மறந்துவிடும் சுபாவம் கொண்டவர்களாக தமிழர்கள் இருப்பதால், சில தகவல்களை மேலோட்டமாக இங்கு குறிப்பிட நேர்ந்தது. இந்தப் பின்னணியில் நின்று தமிழர் தேசிய கட்சிகளுக்குள் இப்போது ஒற்றுமை, இணக்கம், விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு என்று பேசப்படுபவைகளைப் பார்க்க வேண்டும்.

ஜெனிவாவில் அடுத்த இரண்டு மாதங்களில் – 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை மனித உரிமைகள் அமைப்பின் அடுத்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டம் ஈழத்தமிழரைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானது.

2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி இலங்கை தொடர்பான 30/1 இலக்கத் தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் போர்க்குற்றம், பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை ஆகியவற்றுக்கான இத்தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. அப்போதைய இலங்கை அரசு இதற்கு இணைஅனுசரணை வழங்கியது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. தீர்மான முடிவுகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மூன்று வருட அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு வருட காலநீடிப்பு வழங்கப்பட்டது.

அவ்வேளையில் இலங்கையில் ஆட்சியிலிருந்த மைத்திரிபால – ரணில் அரசுடன் தேனிலவில் கூடியிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பே முன்னின்று இக்கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்தது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத மற்றைய தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் இதனை வன்மையாகக் கண்டித்தனவாயினும் அவர்களின் குரல்கள் எடுபடவில்லை.

காலநீடிப்பு முடிவடைய ஓராண்டு இருந்தவேளையில், ராஜபக்சக்களின் ஆட்சி இலங்கையில் உருவானது. இவர்கள் ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்ததுடன், அதனை ஜெனிவா அமர்விலும் தெரிவித்தனர்.

ஐந்தாண்டு அவகாசம் முடிவடையும் காலமாக அடுத்த அமர்வு பெப்ரவரி – மார்ச்சில் வருகிறது. அடுத்த கட்டம் என்ன? பௌத்த தேசியவாதத்தை ஜெனிவா எவ்வாறு கையாளப் போகிறது? மூன்று கட்சிகளாவுள்ள தமிழர் தேசியத் தரப்பு எவ்வாறு இங்கு செயற்படப் போகிறது.

கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டணி ஆகிய மூன்றையும் ஜெனிவா விடயத்தில் ஒரு குடையின்கீழ் கொண்டுவர திரைமறைவில் ஏதோ நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தன்னிச்சையாக இலங்கைக்கு இரண்டு வருட காலநீடிப்பு கொடுத்து தாமும் ஏமாந்து தமிழ் மக்களையும் ஏமாற்றிய கூட்டமைப்பு இப்போது புதுநகர்வுகளை மேற்கொண்டுள்ளது தெரிகிறது.

2010 – 2020 பத்தாண்டு கால கூட்டமைப்புக்குள் எல்லாமாகவிருந்த சுமந்திரன், வரப்போகின்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க ஓர் ஆவணத்தைத் தயாரித்து மற்றைய இரண்டு தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரிடம் கையளித்துள்ளார்.

கடந்த தேர்தலில் கூட்டமைப்பு தனது தனித்தன்மையை இழந்தமையாலும், தமிழ் மக்கள் மாற்றுத் தலைமைகளாக கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் தரப்பை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்தமையாலும், கூட்டமைப்பின் சுமந்திரன் அவர்கள் இருவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது தவிர்க்க முடியாதது ஆயிற்று.

எனினும், சுமந்திரனின் ஆவணம் தொடர்பாக மற்றைய இரு தலைமைகளும் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களென்பதை புலம்பெயர் தமிழர் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் ராஜதந்திர வட்டாரங்களும் எதிர்பார்த்துள்ளன. மூன்று தரப்புகளும் சமதளத்தில், ஒரே நேர்க்கோட்டில் சுமந்திரனின் ஆவணத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லையென்பது தெரிகிறது.

ஆரம்பத்திலிருந்தே ஜெனிவா மனித உரிமைத் தீர்மானங்களில் நம்பிக்கையற்றவராக கஜேந்திரகுமார் தம்மை அடையாளப்படுத்தி வந்துள்ளார். ஜெனிவா என்பது வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றுமே தவிர அதனை நடைமுறைப்படுத்தும் களம் அல்ல என்பதால், இதனை விசாரணக்குட்படுத்த வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதே இவரது ஆரம்பம் முதலான நிலைப்பாடு.

ஏறத்தாள இதேபோன்ற நிலைப்பாடுதான் விக்னேஸ்வரனுடையதும். தம்மோடு நெருக்கமான துறைசார் நிபுணர்களுடன் இதுபற்றி இவர் உரையாடி வருகிறார். சர்வதேச நீதிமன்றத்துக்கு (International Court of Justice) இலங்கை விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென்பதில் இவருக்கு அக்கறை அதிகம்.

இவ்வாறு பார்க்கையில் ஜெனிவாவுக்குள் தொடர்ந்து நீச்சலடித்து வருடங்களை இழுத்தடித்து அதற்குள் மூழ்கிவிடாது வேறு பாதையில் பயணிக்க வேண்டுமென இவர்கள் இருவரும் விரும்புவதால் சுமந்திரனின் ஆவணம் கருத்தொருமித்ததாக ஏற்கப்படும் சாத்தியம் காணப்படவில்லை.

இவ்வேளையில் ஜெனிவாவின் முன்னைய தீர்மானம் தொடர்பாக ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வழங்கிய ஆங்கில செவ்வியின் ஒலிப்பதிவு கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகிறது. ‘நாங்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியினர். அதனால் நாங்கள் சிறிலங்காவுக்கு எதிராக எதனையும் செய்ய மாட்டோம்” (We are part of the Country. We Don’t do anything against Sri Lanka) என்று சுமந்திரன் இதில் தெரிவித்துள்ளார்.

இது கூறப்பட்ட காலம் சுமந்திரனும் அவரது கூட்டமைப்பும் நல்லாட்சியுடன் கூடியிருந்த காலம் என்பதால், அவர் அப்போது கூறியதை இப்போதைய நிலைப்பாடென எடுத்துக் கொள்ளக்கூடாதென்பது சிலருடைய வாதமாக அமையலாம். அதில் நியாயம் உண்டு.

இப்போது எழுகின்ற கேள்வி சுமந்திரனும் அவரது கூட்டமைப்பும் இன்று ஜெனிவா நிலைப்பாட்டில் எவ்வாறு உள்ளனர்? மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளில் இரண்டு ஜெனிவாவில் தொங்கியிருப்பதில் பிரயோசனமில்லை, அல்லது அர்த்தமில்லையென்று கூறினால் அவர்களுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு சுமந்திரன் உடன்படுவாரா? அல்லது தன்வழி தனிவழி என்று தொடர்ந்து அவ்வழி செல்வாரா?

மீண்டும் சிறிலங்காவுக்கு எதிராக எதனையும் செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டு ஜெனிவாவுக்குள்ளேயே தன்னுடைய செயற்பாடுகளை முடக்கிக் கொள்வாரா? தமிழ் மக்கள் கண்களை அகலத்திறந்து நடப்பவைகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்

ad

ad