புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2020

சித்திரா தற்கொலை; இதற்கு முன்னால் நடந்த சோகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

www.pungudutivuswiss.com
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா(29). இவர் இன்று புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.

மேலும் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.

திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் மரணம் ரசிகர்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக திரை நட்சத்திரங்களின் தற்கொலை ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது.

திரைப்படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு பகட்டாய் பணத்தில் வசதியாய் என்றும் மகிழ்ச்சியாய் இருப்பது போல தோன்றினாலும் அடிக்கடி நிகழும் பிரபலங்களின் தற்கொலை மரணங்கள் அவர்கள் எத்தனை பெரிய அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.

இந்நிலையில் இதற்கு முன்னர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பிரபலங்கள் பற்றிய பார்வையை பார்க்கலாம், தமிழ் சினிமாவின் மர்லின் மன்றோ என கொண்டாடப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா புகழின் உச்சியில் இருந்தபோது 1996ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்டார். தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி கடன் தொல்லை உள்ளிட்டவை காரணமாக சொல்லப்பட்டாலும் இன்றுவரை சில்க் ஸ்மிதாவின் மரணம் தமிழ் சினிமாவில் நீங்காத மர்மமாக இருந்து வருகிறது.

இதேபோல, காதலர் தினம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்த நடிகர் குணால் 2008ஆம் ஆண்டு மும்பையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட காதல் மற்றும் மணமுறிவால் குணால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, குணாலுடன் பார்வை ஒன்றே போதுமே திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மோனலும் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இருவரும் இணைந்து நடித்த பார்வை ஒன்றே போதுமே திரைப்படத்தில் இடம்பெற்ற துளித்துளியாய் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்த நிலையில், மோனல் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை வெகுவாக பாதித்தது. நடிகை சிம்ரனின் சகோதரி என்ற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில், நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்து புகழ்பெற்ற, நகைச்சுவை நடிகை ஷோபனாவின் தற்கொலையும் ரசிகர்களை மனதளவில் கடுமையாக பாதித்த மரணங்களில் ஒன்று. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீண்டும் மீண்டும் சிரிப்பு நிகழ்ச்சியில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைத்த ஷோபனா தமிழ் ரசிகர்களின் மனதிற்கு மிக நெருக்கமான ஒருவராக இருந்து வந்தார்.

அண்மைக்காலமாக தற்கொலை செய்துகொண்ட பிரபலங்களில் திரை நட்சத்திரங்களை விட சின்னத்திரை நட்சத்திரங்களே அதிகம். தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்த சாய் பிரசாத்; சின்னத்திரை நடிகையாகவும், பூஜை மீகாமன் ஆகிய திரைப்படங்களில் நாயகியின் தோழியாகவும் நடித்த சபர்ணா, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகையின் தோழியாக நடித்த வைஷ்ணவி ஆகியோர் பட்டியலில் தற்போது நடிகை சித்ராவும் இணைந்துள்ளார்.

சின்னத்திரை நடிகர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு பணி அழுத்தம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதையும் தமிழ் சின்னத்திரை உலகம் ஆராய வேண்டிய கால கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கையில் எத்தனை பெரிய போராட்டங்கள் வந்தாலும் தற்கொலை தீர்வு இல்லை என்பதற்கு நட்சத்திரங்களின் மரணங்கள் நல்ல உதாரணம் மறைந்த சில நாட்கள் மட்டுமே பேசு பொருளாக இருந்து விட்டு அவர்களை உலகம் எளிதில் மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கும் பொழுது ஒரு சிறிய காரணத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் மடமை எத்தனை பெரிய கொடை தினம் என்பது விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad