தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதின முதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. இதன்பின்னர், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்ற கருத்தை நாங்கள் எல்லாருமே ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதனை மதத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அந்த அரசியல் ஒற்றுமையை எவ்வாறு வேகமாகவும், தீவிரமாகவும் நகர்த்துவது என்பது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தமது தீர்மானமெடுக்கும் கூட்டங்களிலே பேசித் தீர்மானங்களை எடுத்தபின்னர் வெகுவிரைவில் ஒரு கட்டமைப்பாக முன்னேறுவது குறித்த நடவடிக்கையை எடுப்போம். இக்கலந்துரையாடலில், எவ்வித முரண்பாடும் இல்லாத நிலையிலும் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை. அத்துடன், இதுவொரு தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்று தமிழர்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகும். அதனைப் பொறுப்போடு நாம் அணுகவேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்குத் தேவையான ஒரு கட்டமைப்பை உருவாக்குவோம். ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையைப் பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றன. அதை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசாங்கம் கட்டாய ஜனாசா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது. முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனைச் செய்திருக்கிறார்கள். எனினும், இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம். அதேபோல், சில நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என காலம் கடந்து ஞானம் வந்ததுபோல இலங்கை அரசாங்கம் ஓடித் திரிகிறது” என்று குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,எம். எ.சுமந்திரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோகராதலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாகரம்,சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன் சுவாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மன்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். கஜேந்திரகுமார், அனந்தி சசிதரன், சிறிகாந்தா, சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சிகளை சேர்ந்த எவரும் இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருக்கவில்லை . |