புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2021

ம.நீ.ம., பொருளாளர் நிறுவனத்திடம் தமிழக அரசு ரூ.450 கோடிக்கு கொள்முதல்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தொடர்பு கமல் கட்சிக்கு 'களங்கம்'

www.pungudutivuswiss.com
மக்கள் நீதி மய்ய மாநில பொருளாளர் சந்திரசேகரன் நிறுவனத்திடம் இருந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, 450 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2019ல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொருளாளராக, நியமிக்கப்பட்டார்.இவருடைய நிறுவனம் மற்றும் வீடுகளில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தி, ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றி உள்ளனர். ஆனால் முழுமையான விபரங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.


சந்திரசேகரனின் நிறுவனம், தமிழக சுகாதாரத் துறையின் முக்கியமான ஒப்பந்ததாரராக உள்ளது.சில ஆண்டுகளில் மட்டும், இந்த நிறுவனத்திடம் இருந்து, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை, தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.அதிலும், ஏராளமான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இந்நிறுவனத்திடம் வாங்கப்பட்டுள்ளது.



3 அடுக்கு முக கவசம்



கொரோனா பாதிப்பு துவங்கிய பின், கடந்த ஓராண்டில், 7.50 கோடி அளவிலான மூன்றடுக்கு 'மாஸ்க்'குகளை, 16 நிறுவனங்களிடம் இருந்தும், 77 லட்சம், என் - 95 மாஸ்க்குகளை, 22 நிறுவனங்களிடம் இருந்தும், 67 லட்சம் கொரோனா கவச உடைகளை, 13 நிறுவனங்களிடம் இருந்தும், தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.இவை மூன்றும் முறையே, 31.40 கோடி, 64.20 கோடி, 252.20 கோடி என, மொத்தம், 347 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் சந்திரசேகர னின், 'அனிதா டெக்ஸ்காட் இண்டியா' பிரைவேட் லிமிடெடில் இருந்துதான், அதிகளவிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளது தமிழக சுகாதாரத்துறை.மேலும், 2 லட்சத்து, 30 ஆயிரம் மூன்றடுக்கு மாஸ்க், மூன்று லட்சம், என் - 95 மாஸ்க் என, குறைந்த விலையிலான பொருட்களை, குறைவாகவே சப்ளை செய்துள்ள இந்த நிறுவனம், விலையுயர்ந்த கவச உடைகளை, பெருமளவில் தமிழக அரசுக்கு வினியோகம் செய்து உள்ளது.கொள்முதல் செய்யப்பட்ட, 67 லட்சம் கொரோனா கவச உடைகளில், 48 லட்சம் உடைகள், இந்நிறுவனத்திடம் இருந்தே வாங்கப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு மட்டுமே, 182 கோடியே, 80 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய்.இவற்றைத் தவிர்த்து, கொரோனாவுக்கு முன்பாகவே, 3 லட்சத்து 6 ஆயிரம், 'அம்மா நியூட்ரிஷன் கிட்'களை, 47 கோடியே, 28 லட்சத்து, 16 ஆயிரத்து, 968 ரூபாய்க்கும், 17 லட்சத்து 20 ஆயிரம் 'அம்மா பேபி கேர் கிட்'களை, 202 கோடியே 25 லட்சத்து 72 ஆயிரத்து 340 ரூபாய்க்கும் இந்நிறுவனத்திடம் கொள்முதல் செய்துள்ளதுதமிழக அரசு.மொத்தமாக, மூன்று ஆண்டுகளில் மட்டும், 451 கோடியே, 33 லட்சத்து 88 ஆயிரத்து 308 ரூபாய் மதிப்பிலான பொருட்களை, தமிழக அரசுக்கு சந்திரசேகரனின் நிறுவனம் சப்ளை செய்துள்ளது.இத்தனைக்கும் இந்த உபகரணங்களையோ அல்லது மூலப்பொருட்களையோ தயாரிக்கும் மில்கள் எதுவும் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக இல்லை. எல்லாவற்றையுமே, 'அவுட்சோர்சிங்' முறையில் செய்து, அரசுக்கு விநியோகித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.





அதிகாரிகள் கலக்கம்



தமிழக அரசுக்கு மட்டுமின்றி, ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, பீஹார் போன்ற மாநிலங்களுக்கும் கொரோனா உபகரணங்கள், கவச உடைகள் போன்றவற்றை, இந்த நிறுவனம் பல நுாறு கோடி ரூபாய்க்கு விநியோகித்துள்ளது.'அம்மா பேபி கிட்' போன்றே, அந்த மாநில அரசுகளுக்கும் பேபி கிட்களையும் விநியோகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு இவ்வளவு கோடி மதிப்பிலான பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்ததில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பங்கே பிரதானமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி.தமிழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து, ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி.தமிழக சுகாதாரத் துறையில், மூன்றாண்டுகளில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பலருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இவருக்கு டெண்டர் கொடுத்ததில், அவர்களுக்கும் பெரும் பங்கு சென்றுள்ளதாகவும் சந்தேகம் எழுந்து உள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக, சுகாதாரத் துறையால் வாங்கப்பட்ட உபகரணங்கள், முன் களப்பணியாளர்களுக்கான கவச உடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ததில், பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக, தி.மு.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறைக்கு முக்கிய ஒப்பந்ததாரராக உள்ள சந்திரசேகரனின் நிறுவனத்தில் ஐ.டி., ரெய்டு நடந்திருப்பது, ஐ.ஏ.எஸ்., வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



கமல் கட்சிக்கு 'களங்கம்'



வரி ஏய்ப்பு காரணமாகவே இந்த ரெய்டு நடப்பதாக வழக்கமான காரணம் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இவருடைய தரப்பில் இருந்து, ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் முக்கியமான எதிர்க்கட்சிக்கு ஒரு பெரும் தொகை தேர்தல் நிதியாகத் தரப்பட்டதாகவும், அந்த விபரம் தெரிந்தே, இவருடைய நிறுவனத்தில் ரெய்டு நடந்திருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.அரசுக்கு முறையாக வரி செலுத்த வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் கமல். தான் மிகச்சரியாக வரி செலுத்துவதை, மேடைக்கு மேடை பெருமையாகச் சொல்வதையும் வழக்கமாக அவர் வைத்திருக்கிறார்.அவருடைய கட்சியின் பொருளாளருக்குச் சொந்தமான நிறுவனமே, வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கியிருப்பது, கமலின் அரசியல் பயணத்திற்கும், நோக்கத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ad

ad