புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2021

மேல்சபையா வாய்ப்பில்லை ராஜா!:கட்சியினரை ஏமாற்ற ஸ்டாலின்வாக்குறுதி?

www.pungudutivuswiss.com
தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், தங்களுடைய தேர்தல் அறிக்கையை, 'கதாநாயகன்'என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., அளித்துள்ள பல வாக்குறுதிகளில், அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, 'மீண்டும் சட்ட மேல்சபையை அமைப்போம்' என்பதே.சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாத, வாய்ப்பு தராதவர்களை சமாதானப்படுத்தி விடலாம் என்பது, ஸ்டாலினின் மனக்கணக்கு.ஆனால், மிகவும் வசதியாக, முக்கியமான விஷயத்தை, தி.மு.க., மறந்துள்ளது அல்லது மறைத்து, பொய் வாக்குறுதி அளித்துள்ளது என்றே தெரிகிறது.


கேள்வி


தமிழகத்தில் மேல்சபை அமைக்க வேண்டு மானால், பார்லி.,யின் இரண்டு சபைகளும் ஒப்புதல் தர வேண்டும்; அதற்கு, ஜனாதிபதி உத்தர விட வேண்டும்.பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய பா.ஜ., அரசுக்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெரும்பான்மை உள்ளது.மேல்சபை அடங்கிய, தமிழக சட்டசபையில், தி.மு.க., அல்லது காங்கிரஸ் கட்சிக்கு அதிக பலம் கிடைப்பதற்கு, பா.ஜ., எப்படி வாய்ப்பு தரும்? 'மேல்சபைக்கு நாங்கள் ஒப்புதல் அளித்தால், அதனால், பா.ஜ.,வுக்கு என்ன பலன் கிடைக்கும்; எதற்காக, கோடிக்கணக்கான பணத்தை வீணடிக்க வேண்டும்? அத்தைக்கு மீசை முளைத்து, சித்தப்பா ஆவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால், மேல்சபைக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பே இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.பார்லி.,யில், பல்வேறு முக்கிய மசோதாக்களின்போது, அரசுக்கு எதிராக செயல்பட்டுள்ள, தி.மு.க.,வுக்கு சாதகமாக எப்படி செயல்பட முடியும் என்பது, அவர்களது கேள்வி.



எதிர்ப்பு



கடந்த, 1986ல், அ.தி.மு.க.,வின், எம்.ஜி.ஆர்., ஆட்சியின்போது, மேல்சபை கலைக்கப்பட்டது. அதன்பின், 'மேல்சபையை மீண்டும் அமைப்போம்' என, தி.மு.க., தலைவராக இருந்த, மறைந்த கருணாநிதி, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.கடந்த, 2010ல், கருணாநிதி, முதல்வராக இருந்தபோது, இதற்கான தீர்மானம், தமிழக சட்ட சபையில் நிறைவேறியது. மத்தியில் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் ஒப்புதல் அளித்தது.ஆனால், மேல்சபை அமைப்பதற்குள், 2011 சட்டசபை தேர்தலில், மறைந்த ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அவர், மேல்சபை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்தது.'மீண்டும் மேல்சபை அமைவதை, அ.தி.மு.க., ஏற்காது' என, ஜெயலலிதா அப்போது கூறினார்.

மேல்சபைக்கு, அ.தி.மு.க., எதிர்ப்பு ஒரு புறம்; மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஒப்புதல் அளிக்காது என்பது, மறுபுறம் இருக்கையில், மற்றொரு பொய் வாக்குறுதியை, தி.மு.க., அளித்துள்ளதாகவே, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.தி.மு.க., அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த சிலர், இதற்கு காரணம் ஒன்றைச் சொல்கின்றனர். போட்டியிட இடங்களைக் கேட்டு, கூட்டணி கட்சிகளும், சொந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களும் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை சமாதானப்படுத்த, ஸ்டாலின், ஒரு அஸ்திரம் எடுத்தார்.

அது தான், 'மேல்சபை!''கோவிச்சுக்காதீங்கண்ணே... இப்ப இடம் கொடுக்கலேன்னு கவலைப்படாதீங்க... நான் ஆட்சி அமைத்ததும், மேல்சபை அமைப்பேன்; அதில் நிச்சயம் உங்களுக்கு இடம் உண்டு' எனப் பேசி இருக்கிறார்.அவர்களின் கண்ணில் தென்படும் வகையில், தேர்தல் அறிக்கையில், இந்த கருத்தையும் சேர்த்திருக்கிறார்.இந்த பொய் வாக்குறுதி இடம் பெற்றுள்ளதால், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் உள்ள, மற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





கலைப்பு ஏன்?



கடந்த, 1986ல், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை, அ.தி.மு.க., சார்பில் மேல்சபை உறுப்பினராக நியமனம் செய்ய, முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். பதவிப் பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.அப்போது, ஏற்கனவே திவாலானவர் என, அறிவிக்கப்பட்ட நிர்மலா, அரசியலமைப்பு சட்டப் பதவி ஏற்பதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து, நிர்மலாவின், 4.65 லட்சம் ரூபாய் கடனை, அ.தி.மு.க., அடைத்தது. திவாலானவர் என்ற நிலை நீக்கப்பட்டது. பதவியேற்புக்கு தயாரான நிலையில், கவர்னராக இருந்த சுந்தர் லால் குரானா, ஒரு கேள்வியை எழுப்பினார். 'திவாலானவர் என்று தெரிந்தும், அவரை பரிந்துரைத்தது ஏன்?' என்ற அவரது கேள்வி, எம்.ஜி. ஆரை கோபப்படுத்தியது. உடனடியாக மேல்சபையை கலைத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்கவே, மேல்சபையை கலைத்து, ஜனாதிபதி உத்தரவிட்டார்.



எங்கெங்கு உள்ளது?



தற்போது ஆந்திரா, பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசத்தில் மட்டுமே, சட்ட மேல்சபை உள்ளது.எங்கெங்கு உள்ளது?தற்போது ஆந்திரா, பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் மட்டுமே, சட்ட மேல்சபை உள்ளது. - புதுடில்லி நிருபர்

ad

ad