புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2022

இலங்கை மீது ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் - மனித உரிமை அமைப்புகள்

www.pungudutivuswiss.com

சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு ஆகியவையே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான, தற்போதைய ஆணைகளை வலுப்படுத்தும் மற்றும் நாட்டின் சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் வகையில் வலுவான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று குறித்த நான்கு அமைப்புக்களும், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது உட்பட, நடப்பு துஷ்பிரயோகங்களுக்குத் தீர்வு காணவும் இலங்கைக்கு இந்தத் தீர்மானத்தின் மூலம் அழைப்பு விடுக்க வேண்டும்.

இலங்கை, கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இலங்கையில் கடந்தகால சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக நீதியைக் கோரி வருகின்றனர்.

அதே நேரத்தில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறி, பொறுப்புக்கூறலைத் தடுத்து, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை உயர் பதவிக்கு உயர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில், இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை தொடர்பான தமது அறிக்கையில்,ஆழ்ந்த இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை, தண்டனையின்மை என்பன கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் விபரித்துள்ளார்.

எனவே இலங்கைக்குள் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்களை சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணை செய்ய வேண்டும் என்றும், வெளிநாடுகளில் உள்ள திருடப்பட்ட சொத்துக்களை கண்டுபிடித்து முடக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

2019 ஏப்ரல் 21 தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொலையுண்டமை தொடர்பான விசாரணைகளில் சர்வதேச பங்கிற்கு அழைப்பு விடுத்த உயர்ஸ்தானிகர், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பங்கு குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், இடைக்காலத்தில் அதன் பயன்பாட்டிற்கு உடனடித் தடை விதித்தல், சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்தல், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்நோக்காத அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் தெற்காசிய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா கோரியுள்ளார்.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்தன.எனினும் அவை முறியடிக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் யாமினி மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

எனவே உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அதன் உறுதிப்பாடுகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் மற்றும் நடப்பு துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாமினி மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

ad

ad