
தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2025
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள்.
தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத் தம்மை கந்தகத்தீயில் உருக்கி ஆகுதியாக்கிய வீரமறவர்களை, தியாகத்தின் உன்னதங்களை, தமிழீழ விடுதலையின் அத்திவாரக்கற்களை நெஞ்சுருகி வணங்கிடும் நவம்பர் 27 ஆம் நாள், தமிழீழத் தேசிய எழுச்சிமிகு புனித நாளாகும். இன்றைய நாள், தமிழீழத்தின் ஆன்மா எழுச்சி பெற்று, தமிழீழ விடுதலைக்காகச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு, தாயகம் தலைவணங்கி, தமிழீழ வீரசுதந்திர வரலாற்றை மீண்டுமொருமுறை உரத்துச்சொல்லும் எழுச்சி நாளாகும்.
தமிழீழ விடுதலையின் முதல் விதையான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் ஈகத்துடன் தொடங்கி, இன்றுவரை வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் எமது நெஞ்சில் அணையாத தீச்சுடராக, அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றும் வாழ்கின்றார்கள். விடுதலையின் விதைகளாகவே தமிழீழத்தாயின் மடியில் இவர்களை விதைத்தோம். அவர்களை வரலாற்றுத்தாய் அரவணைத்துக்கொண்டாள். இந்த மானமறவர்கள் துயில்கொள்ளும் இப்புனித நிலங்களைத் துயிலுமில்லங்களாக உருவாக்கிப் போற்றி, வணங்கிவருகின்றோம். இத்துயிலுமில்லங்கள், உலக இராணுவ விதிகளைமீறிச் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தமிழீழ மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களையும் கொதிநிலையினையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இருந்தும், இத்துயிலுமில்லங்களிலும் அதனை அண்மித்தும், சிங்கள இனவெறி அரசின் எண்ணத்திற்கு மாறாக, மாவீரர் நாளில் தாயகத்திலுள்ள தமிழீழ மக்கள் பேரெழுச்சியோடு மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை ஆழமாக நேசித்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை இவ்வேளை அன்புரிமையுடன் இறுகப்பற்றிக்கொள்கின்றோம். இவர்களிற்கான மதிப்பளிப்புகளைத் தாயகத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் உணர்வோடு முன்னெடுத்துவருகின்றோம் என்பதில் அகநிறைவடைகின்றோம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில், இன்று நாம் ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். கடந்த 2009 இற்கு பின்னரான சமகால நிலமை, எமது விடுதலை நோக்கிய பயணத்தைப் பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, அவற்றை இல்லாதொழிக்க முயலும் சவால்கள் நிறைந்த காலமாக மாற்றமடைந்துவருகின்றது. எமது மாவீரர்கள் எந்த மண்ணிற்காகப் போராடினார்களோ, அந்த மண் தற்போதும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவருவதோடு, தமிழர் பகுதிகளில் சிறிலங்காப் படைகளின் எண்ணிக்கை மாறாது பேணப்படுவதும், சிறிலங்காப் படைமுகாம்களை மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் விவசாய நிலங்களிலும் அமைத்திருப்பதும் மகாவலி அபிவிருத்தி, வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற சிறிலங்கா அரச கட்டமைப்புகளாவன, தொன்றுதொட்டுத் தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக நிலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், தமிழ் மக்களின் உடமைகள் என்பன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி பௌத்தமயமாக்கல் மூலம் திட்டமிட்ட முறையில் சூறையாடப்படுவதால் தமிழீழத்தின் குடிப்பரம்பல் அமைப்பு மாற்றப்பட்டு, தமிழர்களின் இருப்பையே இல்லாமல் ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
அத்தோடு, தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு என்பது இன்றும் சாத்தியமற்றதொன்றாகவே உள்ளது. ஏனெனில், புனையப்பட்ட கதையான மகாவம்ச மனநிலையில் ஆழ வேரூன்றியிருக்கும் சிங்கள இனவாதத்தின் கட்டமைப்புகளான சனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்றம், பாதுகாப்புத்துறை, நீதித்துறை, பௌத்ததேரர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளும் இணைந்து எமது தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்குத் தடையாகவுள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் வலதுசாரிகள், இடதுசாரிகள், புரட்சியாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் அனைவரும் இனவெறியாளர்களே. தமிழீழத்தில் வாழும் மக்களின் இன அடையாளத்தையோ ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதையோ சுயநிர்ணய உரிமையையோ அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தெளிவான திடமான பார்வையுள்ளவர்களாகவே இவர்கள் திகழ்கின்றார்கள். இதன் காரணமாகவே சர்வதேசக் குமுகாயகத்தினை நோக்கி, தமிழீழ மக்கள் தமது விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடாத்திவருகின்றார்கள். சர்வதேசச் குமுகாயத்தின் ஈடுபாட்டுடனான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு நிரந்தர நீதியான தீர்வே சிங்கள தேசத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் தேசத்தில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் வழிவகுக்கும்.
கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் வழக்கமான வலதுசாரித்துவ மேட்டுக்குடிச் சிங்கள ஆட்சித்தலைமைகளுக்குப் பதிலாக, புரட்சிகர இடதுசாரித்துவச் சிந்தனைகள் நிறைந்துள்ளதாகக் காண்பித்த ஜே.வி.பி. தலைமையிலான அரசானது, ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இவ்வரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பதாக, தமிழ் மக்களிற்கான உரிமைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்குவந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும்கூட சம உரிமை வழங்குவதன் பெயரால், ஒற்றையாட்சிச் சிந்தனைக்குட்பட்டு, இலங்கையர் என்ற சிங்களத்தேசியத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், இரண்டறக் கலக்கும் சூட்சுமமான சிந்தனையினை முன்னிறுத்தி, தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான உரையாடலைக்கூட மறுதலிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
ஜே.வி.பி அரசின் இந்த நடவடிக்கைபற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் இதே ஜே.வி.பியினர் தான், தமிழர் தாயகத்தினைச் சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கூறுபோட்டவர்கள். அத்தோடு, தமிழின அழிப்புப் போரிற்குச் சிங்கள இளைஞர்களை இணைத்து, போரைத்தொடர சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிற்கு முட்டுக்கொடுத்தவர்கள். தற்போதும், சிங்களத் தேசிய பௌத்தமயவாத சிந்தனையை வலுவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துத் தம்வசம் வைத்திருக்கவே திட்டமிட்டுவருகின்றார்கள்.
இத்தகைய சிந்தனை உள்ளவர்கள், தமிழ் மக்களிற்கு நியாயமான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு, இதயசுத்தியுடன் செயற்படுவார்களென்று எதிர்பார்க்க முடியாது. அத்தோடு, தாயகத்தில் நிலவும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. சிங்களத் தேசியவாத பௌத்தமயவாதத்திற்குத் தற்போது தலைமை தாங்கும் ஜே.வி.பியானது, கிராம மட்டங்களிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் இளையோரையும் மூளைச்சலவை செய்யும் செயற்பாடுகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. சுருங்கக்கூறின், சிறிலங்கா அரசானது தமிழீழத்தேசத்தை சிங்களத்தேசமாக மாற்றி, எமது விடுதலை வேட்கையை மடைமாற்றம் செய்து, விடுதலைச் சிந்தனைகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கையையே இலக்காகக் கொண்டு நகர்த்திவருகின்றது.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
நாம், கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும். எமது மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, எமது தமிழ்த்தேசிய உணர்வை ஆழமாக விதைக்கவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகின்றது.
அத்துடன், தமிழீழ விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினைப் பல வடிவங்களில் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்திலுள்ள மாணவர், இளையோர், பொதுமக்கள் என்று அனைவரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான நீதி, மனிதப் புதைகுழிகளிற்கான நீதி போன்ற விடயங்களை முன்னிறுத்தி, நீதிக்கான மக்கள் போராட்டங்களைச் சிறிலங்கா அரசிற்குத் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் பல்வேறு வழிமுறைகளில் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். அறவழியிலான இப்போராட்டங்கள், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. புலம்பெயர் உறவுகள், எமது மாவீரர்களின் இலட்சியங்களைச் சுமந்து, நீதிக்கான குரலைத் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். நாம் வாழும் தேசங்களிலுள்ள அதிகார மையங்களை நோக்கி, நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுவாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதனைப் புரிந்து அனைவரும் செயற்படவேண்டும்.
எமது அன்பிற்குரிய இளையோர்களே!
தமிழீழத்திற்கான விடுதலைப்பயணத்தின் நாளைய சிற்பிகளே, தமிழீழத்தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக ஒவ்வொரு இளையோரும் தாம் வாழும் நாடுகளில் உணர்வுடன் முன்னெடுத்துவருகின்ற உரிமைக்கான, உறுதியான பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
புதிய பரிணாமத்தை அடைந்துள்ள இன்றைய தொழில்நுட்பங்களின் ஊடாக, எமது போராட்ட வரலாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். சிறிலங்கா அரசானது தனது திட்டமிட்ட சூழ்ச்சிகளால், நாம் கடந்துவந்த வரலாற்றுப் பாதைகளைத் திசைமாற்றி, நாம் பேணிப்பாதுகாத்து வந்த எமது வரலாற்று ஆவணங்களை அழித்து, உண்மைக்குப் புறம்பான கருத்துருவாக்கங்களைத் திரைப்படங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தவறாக வெளியிட்டு, எமது போராட்டப்பாதையை மடைமாற்றத் தொடர்ந்தும் முயற்சிசெய்துவருகின்றது. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தி, எமது இன அடையாளங்களையும் உண்மையான போராட்ட வரலாற்றையும் அதன் ஆவணங்களையும் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினரிற்குக் கடத்தும் பாரிய பொறுப்பானது உங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொழி, கலை, பண்பாடு உள்ளிட்ட எமது இன அடையாளங்களைப் பாதுகாத்து, புரட்சிகரப்பயணத்தைத் தொடர்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது.
எமது அன்பிற்குரிய தேசியச் செயற்பாட்டாளர்களே!
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, நீண்ட நெடிய எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில் நீங்கள் செலுத்திவரும் பங்கு மிகவும் முக்கியமானது. ஆயுதப்போராட்டம் வீச்சோடு இருந்த காலத்தில், நம்பிக்கையும் அதி உச்ச உறுதியோடும் நீங்கள் செய்த தேசம் நோக்கிய செயற்பாடுகள் அளப்பரியவை. ஆயுதப்போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர், புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் அனைத்திற்கும் முகம்கொடுத்து, தொடர்ந்து மனத்துணிவோடு உறுதிதளராத உங்களது செயற்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உங்களுடைய இந்த உறுதிதளராத செயற்பாடுகள்தான், இன்றுவரை எமது மாவீரர்களின் இலட்சியமாகிய தமிழீழத்திற்கான பாதையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. எவ் இடர்வரினும், எமது இலட்சியத்தை நாம் அடையும்வரை உங்களது உறுதிதளராத பயணத்தை மேலும் வீச்சோடும் வேகத்தோடும் தொடர்வது அவசியமானது. இதுவே, மாவீரர்களின் ஈகங்களிற்கு நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.
எமது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களே!
தமிழ்த்தேசியம், தமிழ்மொழிக்காப்பு, குமுகாயநீதிக்கான போராட்டம், அடக்குமுறை எதிர்ப்பு என்பவற்றில் ஆழமான பற்றைக்கொண்டிருப்பவர்கள் நீங்கள். எமது தாயகத்தில், கட்டமைப்புசார் தமிழின அழிப்பு இன்றும் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்கு எதிராகவும் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு, இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், தார்மீக அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது தேசத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகத் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறும் வேண்டிநிற்கின்றோம். அத்துடன், மாவீரர்களின் ஈகங்களாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் உருவான எமது விடுதலைப்போராட்ட வரலாற்றைச் சிதைத்துத் திரிபுபடுத்தி வெளிவரும் படைப்புகளிற்கு வெளிப்படையாக நீங்கள் தெரிவிற்கும் எதிர்ப்புகளிற்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் இவ் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதோடு, இதனை நிறுத்தும் வகையில் நீங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு, எமது தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு மக்களிற்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பார்ந்த மக்களே!
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வகுக்கப்பட்ட, தமிழீழ விடுதலை என்னும் மாபெரும் சித்தாந்த இலட்சியத்தைத் தாங்கி, அவருடைய சிந்தனையின் வழிகாட்டலில் தொடர்ந்தும் கொள்கை வழுவாது உறுதியுடன் தமிழீழ விடுதலைப்போராட்டச் சக்கரம் நகர்ந்துவருகிறது.
இன்றைய காலப்பரப்பில், விடுதலைப்போராட்டத்தின் அடித்தளத்தையும், தேசியத்தலைவரின் சிந்தனையான இயங்குவிசையையும் சிதைத்து, அழித்துப் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய தமிழின விரோதக்குழுக்கள் சிறிலங்கா அரசினாலும் பிராந்திய உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்குநிலை மரபைத் தடம்மாற்றி, அழிக்கமுனையும் சக்திகளும் தலைதூக்குகின்றன. விடுதலை அவாவுடன் போராடும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை விதைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட விடுதலைச் சிந்தனைத் தளத்திலிருந்து தமிழினத்தை விலகச்செய்து தமிழீழம் என்னும் கோட்பாட்டை அடியோடு அழித்து விடுவதே இவர்களின் சதித் திட்டமாகும். இந்த நாசகாரப் புலனாய்வு நடவடிக்கையை உணர்ந்து, இன்னும் வீரியமாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலமிதுவாகும். தமிழின விரோதிகளை தெளிவாக இனம்கண்டு, நிராகரித்துக் களையெடுக்கவேண்டும் என்னும் விடுதலை விழிப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் கொண்டிருக்க வேண்டியது தாயக விடுதலைக் கடமையாகும்.
சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அரசியலும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணைச்சக்திகளும் பல தீர்வுகள், மாற்றங்கள், பொருண்மிய அபிவிருத்தி, நல்லிணக்கம் போன்ற சொற்களின் போர்வையில் ஒற்றையாட்சிக்குள் எமது தேசிய விடுதலையைப் புதைத்துவிட முயற்சிக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டுபோயுள்ள சிறிலங்கா அரசானது, புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு என்ற பெயரில் அணுகி, அவர்களைப் பயன்படுத்தித் தமிழினத்தின் விடுதலைச் சித்தாந்தத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு தேவையான புதிய படிமங்களைக் கட்டமைக்க முழனகிறது. இந்த அரசியல்-பொருளாதார, புலனாய்வுச் சதித்திட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுவது தமிழினத்தின் இருப்பிற்கு அத்தியாவசியமானாதாகும்.
அதேவேளை, தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டிய மக்கள் போராட்டங்களை இன்னும் வீச்சோடு தொடர்வதும் சர்வதேச அரசியல் தளங்களில் இராசதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும் எமது விடுதலைப் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் ஆகும். மாவீரர்கள் தங்கள் உயிர்விதையால் கட்டியெழுப்பிய ஒளிரும் பாதையில், தமிழீழ விடுதலையை நோக்கிய எமது பயணம் தளராது தொடரும் எத்தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறியக்கூடிய மனோபலத்தைத் தேசியத்தலைவரின் சிந்தனையும் வழிகாட்டலும் எமக்குத் தரும். மாவீரர்களின் ஆன்மபலம் எம்மோடு என்றும் துணை நிற்கும்.
“நாம் விதைத்த இலட்சிய விதை, எமது வீரர்களின் இரத்தத்தால் வளர்கிறது. அது விருட்சமாகி எமது கனவை நனவாக்கும்” என்ற தேசியத் தலைவரின் சிந்தனை, எப்போதும் தமிழினத்தை வழிநடத்தும் விடுதலை ஒளியாக நிலைத்திருக்கும்.
எமது சத்திய இலட்சியமான தமிழீழ விடுதலையினை எந்தச் சக்தியாலும் அசைக்கமுடியாது. தமிழீழ விடுதலைப் பயணத்தில் உறுதிதளராது போராடும் தமிழினம், தனது இலட்சிய விடுதலையை அடைந்தே தீரும். தேசியத்தலைவரின் சிந்தனை சுட்டி நிற்கும் விடுதலைப்பாதையில், தமிழீழம் என்னும் இலட்சியத்தை அடையும்வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக!
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.














.jpg)




