புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு விடுக்கப்படும் சவால்: துரைரெட்ணம்
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்
மீதான, சிறுபான்மைச் சமூகத்துக்கு விடுக்கப்படும் சவாலாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
புதிய கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குருநாகலைச் சேர்ந்த ரஞ்சித் அபே குணவர்த்தன நியமிக்கப்பட்டமை குறித்து இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபையின் பிரதம செயலாளரை நியமனம் தொடர்பான சரத்தில், பிரதம செயலாளரை மாற்றுவதாக இருந்தால், மாகாண முதலமைச்சரின் சிபார்சினைப் பெற்றாக வேண்டும்.
இம்மாதம் 17ஆம்திகதி பகல் 2 மணிக்கு ஜனாதிபதியிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட புதிய முதலமைச்சர் இருக்கையில், 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திலிருந்து புதிய பிரதம செயலாளரின் நியமனம் தொடர்பான கடிதம் கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டவர் மத்திய அரசாங்கத்தில் அமைச்சு ஒன்றின் மேலதிக செயலாளராக செயற்பட்டவர் என அறிய முடிகிறது.
இந்த நிலையில் இந்த நியமனம் நடைபெற்றமை புதிய முதலமைச்சருக்குத் தெரிந்து நடைபெற்றதா என அறிய விரும்புகிறேன். அப்படியானால் ஆரம்பத்திலேயே மாகாண முதலமைச்சருக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினை முதலமைச்சர் துஸ்பிரயோகம் செய்கிறாரா? அல்லது ஜனாதிபதி தன்னிச்சையாக எடுத்த முடிவா?
13ஆவது திருத்தச் சட்டத்தில் முதலமைச்சர், பிரதம செயலாளரை நியமிப்பதாக இருந்தால் மாகாண ஆளுனர் ஊடாகவே மேற்கொள்ளமுடியும். அவ்வாறில்லாமல், நடைபெற்றுள்ளமையானது மாகாண முதலமைச்சர் தமது அதிகாரத்தினை ஜனாதிபதிக்கு வழங்கினாரா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. அவ்வாறு அவர் எவ்வாறு அதிகாரங்களைக் கொடுக்க முடியும்.
அதே நேரம் இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஆரம்பத்திலேயே விவாதத்துக்கு எடுத்து கொள்ள பிரேரணையை முன்வைப்பதோடு, கிழக்கு மாகாண சபையில் நியமனம், நிதி ஒதுக்கீடு, ஏனைய விடயங்கள் விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிககு முன்னுரிமையளிக்கவும் நிரந்தர திட்டம் ஊடாக நிதியை ஒதுக்குவதற்கும் ஆவன செய்ய வேண்டும் எனும் பிரேரணையை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

ad

ad