புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்;
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும்,


மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்து வைப்பதையும் எதிர்த்தும்கூட, இந்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல; மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற்பதும், அவருக்கு பிரதமரே விருந்தளிப்பதும் மரபுப்படி தவிர்க்க முடியாதது என்றாலும் எந்த அளவிற்கு தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்பதை ஈழத் தமிழர்கள்பால் அன்பு கொண்டுள்ள அனைவரும் அறிவர்.

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டும் பல்வேறு காரியங்களுக்கு அவர்களின் நட்பைப் பயன்படுத்திக் கொண்டும், இரண்டு நாடுகளையும் தங்களுக்கு மிக அணுக்கமாக வைத்துக் கொண்டும், இந்தியாவை மிரட்டும் பாணியில் இலங்கை அரசு செயல் படுவதை, இலங்கையிலே நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனித்து வருவோர் நிச்சயமாக அறிவார்கள்.

இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது என்று நாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும், இந்திய அரசு அதை நம்புகிறதா? நம்பிச் செயல்படுகிறதா? நம்பிடவே இல்லையா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் இந்திய அரசுக்கு இதை மேலும் ஆதாரங்களோடு தெரிவிப்பது நம்முடைய கடமை என்ற முறையில் ஒருசிலவற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.


இலங்கை-சீனா இடையே 14 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்படி ரூ. 4,180 கோடி செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே சீனாவின் உதவியுடன் இலங்கையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரு கின்றன.

இப்போது மீண்டும் பல உதவிகளைச் செய்து இலங்கை யுடனான தனது உறவை சீனா வலுப்படுத்தியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வூ பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தங்களின்படி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி ஆகியவற்றை இலங்கைக்கு சீனா அளிக்க விருக்கிறது.

இவை தவிர இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடனளிக்க இருக்கின்றன. ஆனால் இது தொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது, எல்லையில் விமான தளங்களை அமைப்பது என இந்தியாவுக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுக்கும் சீனாவுக்கு இலங்கை மிகவும் நெருங்கிய நட்பு நாடாக மாறியுள்ளது. இதனால் இருநாடுகளும் சேர்ந்து எதிர் காலத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று விரிவாக வந்துள்ள செய்தி, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே எந்த அளவிற்கு நட்பு வளர்ந்துள்ளது என்பதைத் தெளிவாக்கும்.

மும்பையை தீவிரவாதிகள் தாக்கியது போல தென்னிந்தியாவைத் தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி தமீம் அன்சாரி என்பவன் கியூ பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

அவனிடமிருந்து இலங்கையில் உள்ள சம்பத் வங்கியின் ஏ.டி.எம். கார்டு ஒன்றினையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்தியும், இலங்கையில் ஐ.எஸ்.ஐ. மையம் ஒன்றை நிறுவி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தியும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ள நட்பின் ஆழத்தைத் தெளிவாக்குகிறது.

இந்திய மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்காமல் தொடர்ந்து தாக்கி வருகின்ற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன நிறுவனம் ஒன்று அந்தக் கடலில் மீன் பிடித்து வருகிறது.

நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு பிடிக்கப்பட்ட போது, அவர்கள் சீன நாட்டைச் சேர்ந்த சிலரை இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்த அளவிற்கு இலங்கைக்கு நட்பு இருப்பதால்தான், இலங்கைத் தமிழர்களைத் தாக்குவதிலும், கொடுமை புரிவதிலும், கொன்று குவிப்பதிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது.


அந்த உண்மையை நம்முடைய இந்திய அரசும் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருவதோடு, தற்போது இலங்கை அதிபரை வரவேற்பதிலும் அக்கறை காட்டுகிறது. 20-9-2012 அன்று ஒரு நாளிதழில் வந்த கட்டுரையில், அதுவும் ராஜபக்சே இந்தியாவிற்கு வருகை தரும் நாளில் அந்தப் பெரிய, முக்கிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. அந்தக் கட்டுரையின் முக்கிய சில பகுதிகளை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று மூன்றாண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணுவம் அதன் 19 பிரிவுகளில், 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.

அந்த இதழில் உள்ள தகவல்படி, யாழ்ப் பாணத்தில் 3 பிரிவுகளும், கிளி நொச்சியில் 3 பிரிவுகளும், முல்லைத் தீவில் 3 பிரிவுகளும் வவுனியாவில் 5 பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 2 பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் 3 பிரிவுகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர். அரிகரன்  இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்ற காட்சியளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பது போருக்குப்பின் உள்ள சூழ்நிலையை மேலும் சிக்கலாக்குவதாக அமைந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஜனநாயக ஆர்வலர்,அகிலன் கதிர்காமர் என்பவர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பது பெரும் கவலை அளிப்பதாகவும், போருக்குப்பின் இலங்கை முழுவதையும் ராணுவ மையமாக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசே நியமித்த எல்.எல்.ஆர்.சி. எனும் ஆணையம் அளித்துள்ள முக்கிய பரிந்துரைகளில் ஒன்று; இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தின் அளவை வெகுவாகக் குறைத்திட வேண்டும் என்பதுதான்.

அண்மையில் ராஜபக்சே தமிழ்ப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும், சீனாவும் உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த கருத்து பிரதிபலிக்கும் வகையில் டெசோ மாநாட்டிலும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து இலங்கை முழுவதையும் சிங்களமயமாக்குவதிலும், பௌத்தமயமாக்கு வதிலும் தீவிரம் காட்டி வருவதை உலக அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் அறிவர். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்த முயற்சிகள் இலங்கைத் தீவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு அரசும் இலங்கையிலிருந்து தமிழினத்தை அறவே துடைத்தெறிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன.
இலங்கையில் தமிழர்கள் இருப்பதை சிங்கள அரசு இந்தியாவின் நீட்சியாகவே கருதி பகை பாராட்டி வருகிறது. இந்திய நாடு எவ்வளவு உதவிகளைச் செய்தாலும், எவ்வளவு ஆழமான நேசத்தோடு கரம் கொடுத்தாலும், அதையேற்று போற்றுவதற்கு சிங்கள அரசு தயாராக இல்லை.

மாறாக இந்தியாவோடு வேற்றுமை கொண்டுள்ள நாடுகளான பாகிஸ்தானோடும், சீனாவோடும் தான் நட்பை வளர்த்துக் கொள்ள இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது என்பதை நான் மேலே எழுதியுள்ள பல்வேறு குறிப்புகளும் தெளிவாக்கும் என்றே நம்புகிறேன்.

இந்தக் குறிப்புகள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. எனவே இனியாவது விழித்துக் கொண்டு, சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்சேயும் விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாமென்றும், மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். 

ad

ad