புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


பிரதமரின் உத்தரவை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சனிக்கிழமை நடத்திய தர்னா போராட்டத்தில் கலந்துகொண்டு எடியூரப்பா பேசியது:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கர்நாடகம் மற்றும் தமிழகம் இரு கண்களை போல இருக்க வேண்டும். அப்போதுதான் நீதி வழுவாமல் இருக்க முடியும். காவிரி நதி ஆணையக் கூட்டத்திற்கு முன்பாகவே, நிபுணர் குழுவின் முன்மூலம் இருமாநில அணைகளின் நீர்மட்டங்களை அறிந்திருந்தால், தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட செப்.19ம் தேதி பிரதமர் தீர்ப்பளித்திருக்க மாட்டார். ஆனால் பிரதமர், தமிழகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளார். கர்நாடகத்தில் 17 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வாடியிருக்கும் பயிர்களுக்கு பாசனம் இல்லை. பெங்களூருக்கு குடிநீர் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது எப்படி சாத்தியம்? எனது ஆட்சிக்காலத்தில் காவிரி நதிநீர் பிரச்னை எழவில்லை.
தமிழர்-கன்னடர் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, பெங்களூரில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் சர்வக்ஞர் சிலையை திறந்து வைத்தேன். கன்னடர்களும் தமிழர்களும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வை விதைத்தேன். இந்தநிலையில், அமைதிப் பூங்காவாக திகழும் கர்நாடகத்தில் பிரதமர் கலகமூட்டியிருக்கிறார். காவிரி விவகாரம் தீயாக எரிந்து கொண்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்கா சென்றிருப்பதும், அங்கிருந்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதும் எந்தவகையில் நியாயமானது? கர்நாடகத்தின் நிலையை எடுத்துக்கூறி பிரதமரின் மனதை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கையில் கிருஷ்ணா ஈடுபடாதது ஏன்? கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருந்தால், 24 மணி நேரத்தில் காவிரி நீர் திறந்துவிட்டுள்ளது நிறுத்தப்பட்டிருக்கும்.
காவிரியில் இருந்து குடிநீர் பெற்றுவரும் பெங்களூரை சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த்குமார் எங்கே? காவிரிக்காக கட்சி சார்பில்லாமல் நடத்தும் போராட்டங்களில் ஏன் அவர் பங்கேற்கவில்லை? அத்வானியை அழைத்து கொண்டு பிரதமரை சந்தித்து முறையிட அனந்த்குமார் தவறியது ஏன்? அவரது அலட்சியப்போக்கை கண்டித்து, அனந்த்குமார் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன். எனக்கு பாஜகவின் ஆதரவை விட மக்களின் ஆதரவே தேவை. பிரதமரின் உத்தரவை கண்டித்து, கர்நாடக எம்.பி.க்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரை உடனடியாக நிறுத்தாவிட்டால், கர்நாடகம் தீப்பற்றி எரியும் என்றார். போராட்டத்தில் ஏராளமான எண்ணிக்கையில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். எடியூரப்பாவை எதிர்த்து பேசிய எல்லைப்பகுதி பாதுகாப்புக்குழுவை சேர்ந்தவர்களை அவரது ஆதரவாளர்கள் தாக்கியதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் காணப்பட்டது.

ad

ad