புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


வன்னியில் அவலப்படும் தமிழ் பெண்களின் துன்பங்களை மறந்துவிட்டு எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது! ஜமமு
போரினால் சொல்லொணா துன்பங்களை அடைந்து இன்று வன்னியில் நிர்க்கதியாக வாழும் தமிழ் பெண் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமல்,  இந்த நாட்டில் எந்தவிடத்திலும் எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பிரியாணி குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பு மருதானை சிஎஸ்ஆர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சமூக நீதிக்கான பெண்கள் நடவடிக்கை அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இம் மாநாட்டில் விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, ஜமமு ஊடக செயலாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில்,உரையாற்றிய பிரியாணி குணரத்ன மேலும் கூறியதாவது,
வடக்கு கிழக்கில் 90,000 விதவைகள் இருகின்றார்கள் என்ற ஒரு கொடும் உண்மையே அனைத்து கொடுமைகளையும் படம் பிடித்து காட்டுகிறது. இதை புரிந்துகொண்டாலே வட-கிழக்கு பெண்களின் அவல வாழ்வு புரியும்.
குடும்பங்களை தலைமை தாங்கிட வேண்டிய நிலைமையில், வாழ்வாதார தேவைகள் கிடைக்காமை, பலவந்தமாக மாற்று இடங்களில் குடியேற்றம், காணிகள் பறிபோகின்றமை, இராணுவ நிர்வாகம், பாலியல் வல்லுறவு, பிள்ளைகளின் கல்வி தேவைகள் ஆகிய பல்வேறு சவால்கள் வன்னியிலே வாழும் தமிழ் பெண்களை விரக்தி நிலைமைக்கு தள்ளியுள்ளன.
சொந்த நிலங்கள் பறிக்கப்பட்டு பரிட்சயம் இல்லாத காட்டு நிலங்களில் குடியேற்றப்படுகின்றமைக்கு, முல்லைத்தீவு கோப்பாப்பிலவு கிராம மக்களின் அவலவாழ்வு கண் முன் நிற்கும் உதாரணமாகும். இங்கே பெண்களே பெருந்துன்பங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
யுத்தத்தின் கொல்லப்பட்ட தமது பிள்ளையின், கணவரின், தந்தையின் நினைவு கல்லறைகளை இராணுவம் அழித்துள்ளதை தமிழ் பெண்களால் மன்னிக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கொல்லப்பட்டவர்களை நினைவுகூர முடியாதுள்ள வன்னி நில தமிழ் பெண்களின் இன்றைய யதார்த்தத்தை நாம் அறியவேண்டும். இறந்தவர்கள நினைவுகூர அவர்களுக்கு தேசிய துக்க தினத்தை நிர்ணயிக்கவாவது நாம் வழி காண வேண்டும்.
வட கிழக்கின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தமிழ் பெண்களை ஆக்கிரமித்துள்ளன. இராணுவ வலயங்களும், இராணுவ தொந்தரவுகளும் வன்னி பெண்களை அச்சுறுத்துகின்றன.
சம்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படும் மின் ஆலை ஒன்றிற்காக மக்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். தங்கள் சொந்த நில வரம்புகளுக்கு உள்ளே இவர்கள் செல்ல முடியாது.
காணாமல் போன, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டு தருமாறு நமது தமிழ் சகோதரிகள் இடும் ஓலம் இங்கே கொழும்பில் கேட்கவில்லை என எவரும் சொல்ல முடியாது.
நமது தலைவர் மனோ கணேசன் நீண்ட காலத்திற்கு முன்னமேயே அந்த ஓலங்களை கொழும்புக்கும் கொண்டு வந்துவிட்டார்.
கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களின் நிலைமைகளுக்கு சமீபகால உதாரணமாக நிமல்ரூபன், டில்ருக்சன், லலித், குகன்,சதீஷ் ஆகியோரது பெயர் பட்டியல் காணக்கிடக்கிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள, உறவுகளை,பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கும்படியும் அல்லது புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வு பயிற்சிகள் அளித்து அவர்களை தம் குடும்பங்களுடன் சேர்க்கும்படி, தமிழ் தாய்மார்களும், சகோதரிகளும் குரல் எழுப்புகிறார்கள்.
ஆகவேதான், போரினால் சொல்லொணா துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ள வன்னிநில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமை போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றி பேச முடியாது என்று நான் சொல்கிறேன்.
அவர்களை நினைந்து கொழும்பிலே நமது மனச்சாட்சிகள் உறுத்த வேண்டும் என்றும் சொல்கிறேன். என்றார் பிரியாணி குணரத்ன.

ad

ad