புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012


உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கலைஞர் உருக்கம்



உண்மையான தொண்டன் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது. எப்போதும் போல் திமுக வலுவாக இருக்கிறது என திமுக தலைவர் கலைஞர் பேசினார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் முன்னாள் உதவியாளர் திருமங்கலம் கோபால் - சரோஜினி தம்பதியின் மகள் பாப்பு என்கிற ரம்யா, திருச்சானூர் அரும்புரி சாம்பவசிவய்யா-அல்புரி லட்சுமிதேவி தம்பதியரின் மகன் அல்புரி கார்த்திகேய சிவபிரசாத் ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று (25,10,2012) நடந்தது.
திமுக தலைவர் கலைஞர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கலைஞர் பேசியதாவது:- 


இந்த இயக்கம் பார் புகழும் இயக்கங்களில் ஒன்றாக மிளிர காரணம் தலைவரோ பெரும் பொறுப்புகளில் இருப்பவர்களோ அல்ல. யார் என்று எண்ணிப் பார்த்தால் திருமங்கலம் கோபால் போன்ற தொண்டர்களால்தான் என்பது தெரியும். இந்த இயக்கம் பல்வேறு தோல்விகளை எதிர்கொண்ட போதும், பல பிரளயங்களை சந்திக்க நேரிட்டபோதும் புயல், பூகம்பங்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து கம்பீரமாக எழுந்து நிற்க காரணம் நானோ, எனது தலைமையோ பல்வேறு பொறுப்பு வகிக்கும் முன்னோர்களோ அல்ல. 

திருமங்கலம் கோபால் போன்ற கொள்கை வீரர்கள் ஆற்றிய தனித் தொண்டு தான். அவர் எனக்கு பக்கபலமாக இருந்தது மட்டுமல்ல எனது குடும்பத்தையும், குடும்பம் போன்ற கழகத்தையும் கட்டிக் காப்பாற்ற துணை நின்றதை எண்ணிப் பார்க்கிறேன். என் உடலின் ஒரு பகுதியாக உயிரின் ஒரு பகுதியாக மூச்சோடு மூச்சாக கலந்த தொண்டராக இருந்தார். அவர் மீது பரிவு உண்டு. பாசம் உண்டு. அதற்கும் ஒருபடி மேல் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பக்தியும் உண்டு.  


அப்படிப்பட்ட தொண்டர்கள் பக்கத்தில் இருப்பதால் ஒரு இயக்கத்துக்கோ இயக்கத்தின் தலைமைக்கோ எந்த தீங்கும் வராது. தீங்கு நெருங்கினால் அதை விரட்டியடிக்கும் ஆற்றல் அந்த தொண்டர்களுக்கு உண்டு. ஆரியத்தின் ஆணி வேர் இந்த மண்ணில் ஊன்றுவதற்கு முன்பு சதியாக யாரும்  பிரிக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களாக இருந்தார்கள். திராவிட சமுதாயம் என்றுதான் அழைக்கப்பட்டது. மீண்டும் திராவிட சமுதாயம் எழுச்சி பெற திராவிட இயக்கத்தை பெரியாரும், திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணாவும் தோற்று வித்தார்கள். உறுதிமிக்க தொண்டர்கள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்திட முடியாது. அழித்து விட முடியாது. இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ரகுமான் கான், எ.வ.வேலு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் ஜெ.அன்பழகன் நன்றி கூறினார்.

ad

ad