புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012

சாம்பியன்ஸ் லீக்: முதலாவது அரைஇறுதியில் டெல்லி-லயன்ஸ் இன்று மோதல்
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டின் முதலாவது அரைஇறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ்-லயன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
 

4ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. நேற்று முன்தினம் நடந்த கடைசி கட்ட லீக் சுற்றில் பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆக்லாந்தை (ஏ பிரிவு) வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ்-டைட்டன்ஸ் இடையே நடக்க இருந்த ஆட்டம் பலத்த மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த டெல்லி டேர்டெவில்ஸ், டைட்டன்ஸ் அணிகளும், பி பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த சிட்னி சிக்சர்ஸ், லயன்ஸ் அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறின. ஒரு வெற்றி கூட பெறாத நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் முதலாவது அரைஇறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ்-லயன்ஸ் அணிகள் இன்று டர்பனில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் இருந்து பங்கேற்ற 4 ஐ.பி.எல். அணிகளில் டெல்லி அணி
மட்டுமே அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது. 2 வெற்றி (கொல்கத்தா மற்றும் பெர்த்துக்கு எதிராக) 2 முடிவில்லை என்று தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பிடித்த டெல்லி அணி துடுப்பாட்டத்தில் பலம் வாய்ந்த அணியாக வர்ணயிக்கப்படுகிறது. மஹேல ஜெயவர்த்தன, அதிரடி மன்னன் ஷேவாக், ரோஸ் டெய்லர், கெவின் பீட்டர்சன், உன்முக் சந்த் ஆகியோர் அந்த அணியின் துடுப்பாட்ட தூண்களாக உள்ளனர்.

ஆனால், டெல்லி அணி இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருப்பதால் களத்தில் திறமையை நிரூபிக்க அந்த அணிக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச்சில் மோர்னே மோர்கல், இர்பான் பதான், அகர்கர், உமேஷ் யாதவ் ஆகியோர் மிரட்டி வருகிறார்கள். இந்த கூட்டணி முழு திறமையை காட்டும் பட்சத்தில் லயன்ஸ் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களம் இறங்க முடியும் என்பதால் டேவிட் வோர்னருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

தென்னாபிரிக்காவை சேர்ந்த லயன்ஸ் அணி பி பிரிவில் 3 வெற்றி (சென்னை, மும்பை, யோர்க்ஷைருக்கு எதிராக) ஒரு தோல்வி (சிட்னி சிக்சர்ஸ்) என்று 2ஆவது இடத்தை பிடித்தது. லயன்ஸ் அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பான்கிசோ கலக்கி வருகிறார். இதுவரை 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அவர், ஓவருக்கு சராசரியாக 4.43 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கன பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார். டெல்லி அணிக்கும் அவர் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் துடுப்பாட்டத்தில் 2 அரைசதத்துடன் 152 ஓட்டங்கள் சேர்த்துள்ள குலாம்போடி, மெக்கன்சி, அல்விரோ பீட்டர்சன், டி காக், சைம்ஸ் ஆகியோரையே அந்த அணி பெரிதும் நம்பியிருக்கிறது. உள்ளூர் சூழல் லயன்ஸ் அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

ad

ad