புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012


காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்;: உயிரிழப்பு 92 ஆக உயர்வு

இஸ்ரேல் தொடர்ச்சியாக 6வது நாளாகவும் காசா மீது நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் மேலும் பல அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்றை தினத்தில் 92
ஆக உயர்ந்தது.
மறுபுறத்தில் உடனடி யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழுத்தம் கொடுத்துள்ளார்.
கடைசியாக நேற்று காசாவின் சைத்தூன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் பலியானதோடு மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமெத்தமாக நேற்றைய தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கான் யூனிஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் கொல்லப்பட்டதோடு அதிலிருந்த குழந்தை ஒன்று படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளது. இதே பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலில் இப்ராஹிம் அல் அஸ்தால் மற்றும் ஒபாமா அல் அஸ்தால் என இரு விவசாயிகள் பலியாயினர்.
தவிர, தெற்கு காசா நகர் மீது நேற்று இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயம் அடைந்தனர். இதில் 23 வயது மொஹமத் விமலா என்பவரே கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கிறது. நேற்று அதிகாலையில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்ட நால்வருள் ஒருபெண் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.
காசாவில் இனங்காணப்பட்ட 80 இலக்குள் மீது இரவு (நேற்று முன்தினம்) தாக்குதல் நடாத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணும் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்தார். எகிப்து, இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை கொண்டுவர முன்னணியில் நின்று இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையிலேயே பான் கீ மூன் அங்கு சென்றுள்ளார்.
இதனையொட்டி தாக்குதலை நிறுத்தும் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தூதுக்குழு கெய்ரோ சென்றிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி, காசாவின் ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் மற்றும் போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவர் ரெமதான் ஷல்லாவையும் சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பலஸ்தீன சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தகவலின்படி இஸ்ரேலின் வான் தாக்குதல் ஆரம்பமானது தொடக்கம் இதுவரை 84 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் 23 சிறுவர்களும் பல பெண்களும் அடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் பலஸ்தீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இன்றி பலஸ்தீன் மருத்துமனைகள் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் உக்கிர தாக்குதலை ஆரம்பித்த கடந்த புதன்கிழமை தொடக்கம் இதுவரை காசாவின் 1,300க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மறுபுறத்தில் காசாவில் இருந்து குறித்த காலத்திற்குள் இஸ்ரேல் மீது 544 ரொக்கெட்டுகள் எறியப்பட்டுள்ளன. இந்த ரொக்கெட் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
எனினும் காசாவின் ரொக்கெட் தாக்கதல்களில் 302 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் ஏவுகணை காதுகாப்பு முறையான அயன் டோம் மூலம் இடை மறித்து அழிக்கப்பட்டுள்ளன. 99 ரொக்கெட் தாக்குதல்கள் தோல்வி அடைந்து காசாவுக்குள்ளேயே விழுந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான்தாக்குதல்களில் மாத்திரம் 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 750 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் இதுவரையான தாக்குதல்களில் ஒரே தினத்தில் இடம்பெற்ற அதிக பலி எண்ணிக்கை இதுவாகும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வடக்கு காசா நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எப் 16 யுத்த விமானத்தின் முலம் இந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் இரண்டு அல்லது முன்று ஏவுகணைகள் கொண்டு மூலம் தரைமட்டமாக்கியுள்ளது. இதில் 80 வயது பெண் ஒருவர் உட்பட்ட 5 பெண்களம் 4 குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
இதற்கு, தவறுதலாக வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. சிரேஷ்ட ஹமாஸ் உறுப்பினர் ஒருவரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வீடோன்றின் மீது குண்டு விழுந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
மோதல் நிறுத்தத்திற்கு தீவிர முயற்சி
பிராந்தியத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பான் கீ மூன் மோதலை நிறுத்த இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். பான் கீ மூன் இன்று இஸ்ரேல் செல்ல திட்ட மிட்டுள்ளார். இது குறித்து பான் கீ மூன் வெளியிட்ட அறிக்கையில், “ஒரே குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேல் நகரங்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்களால் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்தின் அவசர யுத்த நிறுத்த முயற்சிக்கு இரு தரப்பும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்வரும் ஒரு சில மணி நேரங்களில் தீர்மானங்களுக்கு வந்து யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என உறுதியாக நம்புவதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் கிலியே டர்சி பிரசல்லில் வைத்து நேற்று தெரிவித்தார். காசாவுக்குள் ஊடுருவும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். மறுபுறத்தில் மோதல்களை நிறுத்த சீனாவும் நேற்று அழுத்தம் கொடுத்தது.
எனினும் ஹமாஸ் அமைப்பின் முன்னணி உறுப்பினரான இஸ்ஸத் ரிஷாக் தனது பேஸ்புக் பக்கத்தில் காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முதலில் நிறுத்தினாலே தாம் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படுவதாக ஹமாஸ் தலைவர் காலித் மிஷால் கூறியதாகத் தெரிவித்தார்.
மறுபுறத்தில் இஸ்ரேல் துணை பிரதமர் மொஷே யாலொன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, ‘இஸ்ரேல் பிரஜைகள் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நின்று தென் பகுதியில் அமைதி ஏற்பட்டு மேலும் காசாவில் தீவிரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் நாம் தாக்குதல் நடத்தமாட்டோம் என அறிவித்துள்ளார்.
ஹமாஸ் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சி
காசாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹமாஸ் அமைப்பின் தொலைக்காட்சி சேவைக்கு இஸ்ரேல் இடையூறு செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ‘அல் அக்சா’ ஒளிபரப்பிற்கு இஸ்ரேல் இராணுவம் இடையூறு செய்வதாகவும் பல மணிநேரத்திற்கு ஒளிபரப்பு தடைப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இதனை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு எச்சரிக்கையை விடுத்ததாக கூறியுள்ளது. அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பை தாம் கடந்த ஒரு சில மணி நேரங்கள் கைப்பற்றியதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் கூறினார்.
எனினும் ஒளிப்பரப்பினூடே எந்த எச்சரிக்கை தகவலும் இஸ்ரேல் இராணுவத்தால் வெளியிடப்படவில்லை என காசாவுக்கான ஏ. எப். பி. செய்தியாளர் கூறியுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் அமைப்பின் வானொலிச் சேவையையும் இஸ்ரேல் இராணுவம் கட்டுப்படுத்தியது. அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் இராணுவம் காசாவில் இருக்கும் செய்தி ஊடக கட்டடிடங்கள் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 ஊடகவியலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மறுபுறத்தில் காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரச இணையதளங்களை முடக்க 44 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய பாதுகாப்பு இணையதளங்களை முடக்கவே முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதா - ஹமாஸ் இணைவு
இதனிடையே பலஸ்தீனின் மேற்குக் கரையை ஆண்டு வரும் பதா அமைப்பு காசாவில் தாக்குதலை நிறுத்த ஹமாஸ் அமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. காசா தாக்குதலுக்கு எதிராக ரமல்லாவில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பதா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஜிப்ரில் ரஜவ்ப், “இன்றிலிருந்து நமக்கிடையிலான பிரிவுகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்பதை உலகத் தலைவர்களுக்கு கூறிக் கொள்கிறோம்”. ரமல்லாவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்குக் கரையின் ஹமாஸ் அமைப்பின் முன்னணித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். ரமல்லாவின் மனாரா சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் இதில் பலஸ்தீன கொடிகளுடன் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘ஒற்றுமை’, ‘டெல் அவிவை தாக்கு’ என கோஷமெழுப்பினர்.
இதற்கு பின்னர் எவராவது பிரிவினை பற்றி பேசினால் அவர்கள் குற்றவாளிகள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் ரமாஹி கூறினார். பலஸ்தீன விடுதலை அமைப்பான பதா மற்றும் ஹமாஸ் அமைப்பு பல ஆண்டுகளாக பிரிந்து நின்று ஆட்சி நடத்தி வருகின்றன. இரு பிரிவுகளுக்கும் இடையிலான ஒற்றுமை முயற்சி கடந்த ஆண்டில் சிதைவடைந்தது.
இதனிடையே எகிப்தின் 500 க்கும் அதிகமான செயற்பாட்டாளர்கள் ரபா எல்லையை கடந்து நேற்று முன்தினம் தாக்குதல் தொடரும் காசாவை சென்றடைந்தனர். பலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தவே இவர்கள் காசா சென்றனர். இதன்போது மருத்துவ உதவிகளுடனேயே இந்த குழு காசாவை சென்றடைந்தது.
கடந்த ஹொஸ்னி முபாரக் ஆட்சிக் காலத்தில் ஹமாஸ் அமைப்புக்கும் எகிப்து அரசுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருக்கவில்லை. இந்நிலையில் எகிப்தின் புதிய அரசு பலஸ்தீன விடயத்தில் கொண்டிருக்கும் நிலைப்பாடு இந்த குழுவின் காசா விஜயத்தின் மூலம் வெளிப்படையாகி இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“பலஸ்தீனர்களுக்கு நாம் அவர்கள் பக்கமே இருக்கிறோம் என்பதை காட்ட வந்திருக்கிறோம். காசாவில் இருக்கும் பலஸ்தீனர்கள் தனிமைப் படுத்தப் படவில்லை என்பதை இந்த விஜயத்தின் மூலம் நாம் இஸ்ரேலுக்கு காட்டியிருக் கிறோம்” என காசா வந்த எகிப்து செயற்பட்டாளர் சதம் முபாரக் கூறியுள்ளார்.

ad

ad