புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012


நீதித்துறை எழுச்சியினால் பின்வாங்கினார் ஜனாதிபதி; விஜித ஹேரத் எம்.பி. தெரிவிப்பு
குற்றப் பிரேரணைக்கு எதிராக நீதித்துறை கிளர்ந்தெழுந்ததைக் கண்டு அவ்விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்க ஆரம்பித்துள்ளார் என்றும், குற்றப் பிரேரணையை திரும்பப் பெற வைப்பதற்கான சக்தி, சட்டத்தரணிகளின் எழுச்சிக்கு இருக்கின்றது என்றும் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 
போலிக் குழுக்களை நியமிக்காது உடனடியாகக் குற்றப் பிரேரணையை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதற்காக ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் அனைத்து வழிகளிலும் போராடும் என்றும் தெரிவித்தார்.
 
கொழும்பு நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு தெரிவித்த விஜித ஹேரத் மேலும் தெரிவித்ததாவது:
 
18ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை தனது கைகளில் எடுத்தார் ஜனாதிபதி. அதன்பின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று நாடாளுமன்றை கைப்பொம்மையாக்கினார். 
 
நாடாளுமன்றம்தான் உயர் அதிகாரம் கொண்டது எனக் கூறுகின்றனர். ஆனால், அது இன்று கைப்பொம்மையாகியுள்ளது. குறிப்பாக, கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியான துமிந்த சில்வா எங்கிருக்கின்றார் எனத் தெரியவில்லை என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் கூறும் அதேவேளை, துமிந்த சில்வா சிகிச்சைபெற்று வருகின்றார். 
 
அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் விடுமுறை தேவை என நாடாளுமன்றில் தெரிவிக்கின்றார் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா. 
"திவிநெகும' சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டிருந்த 47 சரத்துகளுள் 16, அதாவது மூன்றில் ஒரு பங்கு அரசமைப்புக்கு முரணாக உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், "இஸட்' புள்ளி விவகாரத்திலும் மேலதிகமாக 5 ஆயிரம் மாணவர்களைப் பல்கலைக்கழகத்துக்கு சேர்க்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 
 
இதனால் நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு ஆரம்பித்தது. அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இவ்வாறான சூழ்நிலையில்தான் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. 
 
குறித்த பிரேரணையைக் கொண்டுவந்ததும் நீதியரசர் பதவி விலகுவார் என்றுதான் அரசு எண்ணியது. ஆனால், அவ்வாறு செய்யாது முதுகெலும்புடன் நின்று நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க நீதியரசர் முற்பட்டார். இதற்காக அவரை நாம் மதிக்கின்றோம். 
 
இதற்கிடையில் குற்றப் பிரேரணைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட நீதித்துறையினர் கிளர்ந்தெழுந்தனர். இவ்வாறு நடக்கும் என அரசு கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. குற்றப் பிரேரணையை விரட்டியடிப்பதற்கான சக்தி,  சட்டத்தரணிகளின் எழுச்சிக்கு இருக்கின்றது. 
 
இவ்வாறான எதிர்பலைகளுக்கு மத்தியில் நீதித்துறையின் எழுச்சியைக் கண்டு ஜனாதிபதி சுயாதீன குழு நியமிக்கப்படும் எனக் கூறி இது விடயத்தில் சற்று பின்வாங்கியுள்ளார். 
 
அத்துடன், குற்றப் பிரேரணையைத் தான் விரும்பவில்லையெனக் கூறி அதில் கையொப்பமிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி காட்டிக்கொடுத்துள்ளார். சுயாதீன குழு என்றெல்லாம் போலிக் கதைகளைச் சொல்லாது குற்றப் பிரேரணையை உடன் வாபஸ் பெறுமாறு நாம் வலியுறுத்துகின்றோம். 
 
இதற்காக சகல வழிகளிலும் எமது அமைப்பு போராட்டங்களை முன்வைக்கும் என்றார் விஜித ஹேரத் எம்.பி. 

ad

ad