புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012


 
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்
மேற்கொண்ட அமைதிவழிப் பேரணி மீது இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய தினமே 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட ஏனைய மாணவர்களின் கைது  மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு சில் ஊடகங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைத்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான செய்தி பிரசாரங்கள் பல்கலைக்கிழக மாணவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையால் எமது கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் விடுதலைக்காக பல்கலைக்கழக நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது தொடர்பான பூரண விளக்கம் அற்ற சூழ்நிலையில் சில ஊடகங்கள் தமக்குக் கிடைக்கின்ற சில் தகவல்களைக் கொண்டு அதனைத் திரிபுபடுத்தி சில பொய்யான, ஒன்றிற்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதுடன், தமது ஊடக சுதந்திர வாய்ப்பை பயன்படுத்தி துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளினுடைய தகுதிகளை கேவலப்படுத்துகின்ற வகையிலே செய்திகளை வெளியிட்டு வருகின்றமையானது மாணவர்களிடையே ஊடகங்களின் நடுநிலைத்தன்மை தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது மாணவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றோம் என்ற அடிப்படையில் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளோம். குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் இற்கு இல்லாத சூழ்நிலையில்  பதில் துணைவேந்தராக கடமையாற்றிய முகாமைத்துவ பீடாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக வெளியாகிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதுடன் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அன்றைய தினங்களில் பதில் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இராணுவ மற்றும் காவல்துறையினரின் செயற்பாடுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததுடன் 28ம் திகதி கைதுசெய்யப்பட்ட 3 மாணவர்களும் உடனடியாக விடுவிக்கக்கூடியதாக காணப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் சரணடைதல் தொடர்பாக சில முரணான தகவல்கள் காணப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களை நிர்வாகமே கொண்டுசென்று கையளித்ததாக கூறப்படுகின்றது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் மாணவர்களுடைய பாதுகாப்பு கருதியும் பெற்றோர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலுமே பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை விசாரணைக்கென அழைத்துச் சென்றதேயொழிய  பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை என்பதுடன் மாணவர்களை நிர்வாகம் கையளித்ததன் காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேரம் பேசக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஒரு சில ஊடகங்கள் வேண்டுமென்றே அவருக்கு தனிப்பட்ட ரீதியில் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி மாணவர்களையும் பெற்றோரையும் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதனை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகளைப் பேண்வருகின்றோம் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகமானது எத்தனையோ அழுத்தங்களுக்கு மத்தியில் சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை  தொடர்பாகவும், தடுத்து வைத்திருக்கின்ற மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் தங்களது இயலுமைக்கு அப்பாற்பட்ட வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும்போது அம்மாணவ பிரதிநிதிகளின் பாதுகாப்பினையும் அவர்களின் விரைவான விடுதலையையும் கருத்தில்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வெளியிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad