புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஜன., 2013மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை தூண்ட வேண்டாம் - கூட்டமைப்பிடம் அமீர் அலி கோரிக்கை

மட்டக்களப்பில் தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை தூண்ட வேண்டாம் - கூட்டமைப்பிடம் அமீர் அலி கோரிக்கை 14.01.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பத்திரிகை மாநாடு ஒன்றினை நடாத்தி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது அமீர்அலி குற்றம் சாட்டினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மேற்படி பத்திரிகையாளர் மாநாடு தமிழ் மக்களுக்கு பிழையான வழிகாட்டலையும், தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் சீர் குலைக்க எடுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். 

உண்மை நிலையை அறிந்து கொள்ளாது பத்திரிகையாளர் மாநாடு நடாத்துவதிலும், அறிக்கை விடுவதும் தமிழ் கூட்டமைப்பின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டதா என்ற கேள்வியையும் எழுப்பினார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக இருந்துவருகின்ற எல்லைரீதியான பிரச்சினைகள் விடுதலைப்புலிகள் இயக்கம் கிழக்கில் கால் ஊன்றியதுடன் ஆரம்பமான விடயமாகும். அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை மத்திய பிரதேசங்களில் எல்லை ரீதியான பிரச்சினைகள் அதிகரித்தது பற்றி த.தே.கூ. அறிந்துகொள்ளாமல் போனது வேடிக்கையானது. 

புலிகளால் முஸ்லிம்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு அவர்களை கொலைசெய்த போது ஏதுமே தமக்கு தெரியாது என்ற நிலவரத்தில் த.தே.கூட்டமைப்பினரின் அரசியல் பயணம் மட்டக்களப்பில் இருந்துள்ளது என்பதனை எந்த முஸ்லிம் மகனும் மறக்கவில்லை என்பதனை கூறிவைக்க விரும்புகிறேன். 

வெறும் அறிக்கை மன்னர்களாக த.தே..கூ பாராளுமன்ற உருப்பினர்கள் நடந்து இருக்கிறார்கள் என்தே உண்மை. அல்லது இவ்வாறான செயல்பாடுகளின் மூலமாக முஸ்லிம்களை அடிமையாக்கி வைக்க விரும்புகிறார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. 

மேற்படி நிர்வாக எல்லை நிர்ணயம் என்பது மாவட்டத்திங்கு புதிய விடயமாக த.தே.கூ காட்ட ஏன் விளைகிறது என்பது எனக்கு புரியவில்லை. இது தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதில் மக்களினதும், அரசியல்வாதிகளினதும், பிரதேச அமைப்புக்களிடமும் வாதப் பிரதிவாதங்களோடு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்ட நிகழ்வினை ஏன் த.தே.கூ. மறைக்கப் பார்க்கிறது. 

பொதுநிர்வாக அமைச்சின் மூலம் தனிப்பட்ட விசாரணைக் குழுக்கள், பனம்பலம ஆணைக்குழு, புலுமுள்ள ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள் பல தடவைகள் பிரதேச செயலகங்களிலும், மாவட்ட செயலகத்திலும் அபிப்பிராயம் பெறப்பட்டது என்பது உண்மை. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மேற்கூறிய இரண்டு சுயாதீனமான ஆணைக்குழுவினர்களின் பரிந்துரைகளை ஏன் த.தே.கூ. படிக்க மறுக்கிறது. 

அல்லது படித்துவிட்டு வேண்டுமென்று செய்திக்காக அல்லது தமிழ் மக்களிடத்தில் இன துவேஷத்தினை கிளறி தங்களது வாக்கு வங்கியை சரி செய்துகொள்ளும் முயற்சியா இது என கேட்கத் தோன்றுகிறது. 

அண்மையில் பட்டிருப்பு தொகுதியில் உள்ள ஒரு த.தே.கூ அரசியல்வாதி ஒரு வைபவம் ஒன்றின்போது ஓட்டமாவடி முஸ்லிம் அரசியல்வாதியான அமீர் அலிக்கு இந்தப்பிரதேசத்தில் இருந்து வாக்களித்தீர்களே! என்று மிக துவேசத்துடன் பேசிய பேச்சை பத்திரிகையில் கண்டு அதிர்ச்சி அடைய நேர்ந்தது. 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசி அல்லது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அபிவிருத்தி பற்றி பேச வேண்டிய த.தே.கூட்டமைப்பினர் இவ்வளவு கீழ் மட்டத்திற்குச் சென்று முஸ்லிம் தமிழ் என்று இனத்துவேசம் பேசி அரசியல் செய்ய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனென்றால் புலிகளின் வருகைக்கு முன்பு மு.று. தேவநாயகத்தினை எங்களது பிரதேச மக்கள் தமிழர் என்ற பார்வையில் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பவில்லை. மனிதநேயம் உள்ள தலைவன் என்றே நாங்கள் அப்போது அவரைப் பார்த்தோம். 

மேற்படி எல்லை நிர்ணயம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் எமது பிரதேச மக்களின் எதிர்பார்ப்பினையும் அபிலாஷைகளையும் அப்பிரதேச மக்களின் ஆணையைப் பெற்றவன் என்ற முறையில் பதிவு செய்துள்ளேன். ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளையோ எல்லைகளையோ இரகசியமாக செய்யவேண்டிய தேவைப்பாடு எனக்கில்லை. 

மாறாக தமிழ் மக்களுக்கு சேரவேண்டிய நியாயபூர்வமான விடயங்களில் மிகவும் தெளிவாக எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேன். மறைத்து அல்லது ஒழித்துப்பேச எனக்கு தெரியாது. பேசுவதை மிகவும் தெளிவாக பேச எனக்கு தைரியம் இருக்கிறது. 

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு வாழ வேண்டுமென்றால் விஷேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை (மத்தி) ஓட்டமாவடி பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களின் எல்லைரீதியான பிரச்சினைகள் தீரத்து வைக்கப்பட வேண்டுமென்று பல தடவைகள் பேசி இருக்கிறேன். இது பற்றி உங்கள் தலைவர்களிடத்தில் பேசியபோதும் நியாயமான விடயம்; என்பதில் உடன்பாடு கண்டீர்கள். ஆனால் தங்களால் வெளியில் கூற முடியாது என்று கூறிய வார்தைகளை மீட்டிப் பார்க்கும்படி உங்களுக்கு ஞாபகம் செய்கிறேன். 

13.01.2013ல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு த.தே.கூ. மட்டுமல்ல எந்த அரசியல் வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அவ்வாறு அழைக்கப்பட்டிருந்தால் நானும் கலந்துகொண்டு எனது உண்மையான கருத்துக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இருந்திருக்கும். 

ஆனால் இதே செயலகத்தில் பல தடவைகள் இது தொடர்பான கூட்டங்கள், அரசியல் தலைமைகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச அமைப்புக்கள் என்று பல கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் எனக்கும் உங்களைப்போன்று உள்ளது. மாவட்டத்தில் இரு சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் எல்லை நிர்ணயம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். 

மாவட்டத்தில் முஸ்லிம் தமிழ் உறவுபற்றி நாம் எல்லோரும் இதயசுத்தியோடு நடக்க தவறினால் வெளிமாவட்டத்தாருக்கு 900 ஏக்கர் என்றும் 1500 ஏக்கர் என்றும் கடந்தகாலத்தில் கொடுத்தது போன்று எதிர்காலத்திலும் கொடுத்துவிட்டு பத்திரிகையில் கூச்சல் போடுவதில் அர்த்தமே இல்லை. 

கிராம சேவகர் பிரிவுகள் இணைக்கப்படுவது பற்றி அந்த பிரதேச மக்களுடனும், அரசியல் தலைமைகளுடனும்; ஆலோசனை பெறப்பட வேண்டுமென்று கூறியிருந்தீர்கள். நானும் அதைத்தான் உங்களிடம் கேட்கிறேன். ஓட்டமாவடி பிரதேச செயலகம் நீண்டகாலமாக 14 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டது. 

நீங்கள் பேசுகின்ற கள்ளிச்சை, ஊத்துச்சேனை, வடமுனை, வாகனேரி, புனானை மேற்கு அடங்களாக ஓட்மாவடி பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வந்ததுபற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனீர்களா? அல்லது பத்திரிகை செய்திக்காக வீராப்பு பேசுகிறீர்களா? என்பதை மட்டும் இரகசியமாவது என்னிடம் கூறுங்கள். 

அது மட்டுமல்ல மேற்குறிப்பிட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இப்போதும் ஓட்டமாவடி பிரதேச சபையின் நிருவாக அலகுக்குள் இறுப்பதுபற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 

மேற்படி, நீங்கள் கூறும் 5 கிராம சேவககர் பிரிவுகளும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 2000ம் ஆண்டு கிரானுடன் இரவோடு இரவாக இணைக்கப்பட்ட போது ஏன் இப்பிரதேச மக்களின், அரசியல் தலைமைகளின் அபிப்பிராயத்தை உங்களது கட்சியாவது கேட்கவில்லையே என்று உங்களுக்காவது யோசிக்க வரவில்லை என்பது தெரியாமல் போனது ஏன்? 

இந்நிகழ்ச்சியானது ஆயுத முனையில் செய்யப்பட்டதாக இப்பிரதேச மக்கள் இப்போதும் நினைவு கூறுகிரார்கள். நீங்கள் கிரானில் இருந்து ஓட்டமாவடிக்கு எடுத்ததாக இப்போது கூப்பாடு போடுகிறீர்கள். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மாவட்ட முஸ்லிம் மக்களுக்கும் நியாயம் கிடைக்கப்பட வேண்டும் என்று த.தே.கூ விரும்புமானால் ஓட்டமாவடியில் இருந்து கிரானுடன் இணைத்துக்கொண்ட கிராமசேவகர் பிரிவுகளான கள்ளிச்சை , ஊத்துச்சேனை, வடமுனை, வாகனேரி, புனானை மேற்கு போன்ற கிராம சேவகர் பிரிவுகளை மீண்டும் ஓட்டமாவடியுடன் இணைத்துக்கொடுப்பது நியாயமானது என்று த.தே.கூட்டமைப்பினரால் கூற முடியுமா? அவ்வாறு செய்வீர்கள் எனின் ஒரு பிராயசித்தமாகவும் அமையுமென்பது எனது கருத்தாகும். 

மேற்குறித்த 5 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு அண்மையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் 90%மான விவசாய நிலம் என்பதனையும், கள்ளிச்சை கிராம சேவகர் பிரிவு என்பது மிகவும் பழமைவாய்ந்த முஸ்லிம் கிராமம் என்பதும் அங்கு பள்ளிவாசல், பாடசாலைகள் நீண்டகாலமாக இயங்கி வந்தது பற்றியும் உங்களுக்கு தெரியாமல் மாவட்டத்தின் எல்லைக் கோடு பற்றி பேசுவது போலியானது. 

புலிகளின் காலப்பகுதியில் கள்ளிச்சை, புனானை மேற்கு, வாகனேரி, காரமுனை பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி பின்னர் தேவைப்படின் விரிவாக பேசலாம். 

இனரீதியான பிரதேச செயலகங்கள் உருவாக்கக் கூடாது என அரசாங்கத்தின் முடிவினை ஏற்றுக்கொள்கிறீர்கள். அவ்வாறாயின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் இந்த நடைமுறைக்கு உடன்படுவதற்கு த.தே.கூ. பகிரங்கமாக அறிவிப்பனை செய்யுங்கள். அதன் முன்னோடி நடவடிக்கைகளாக கள்ளிச்சை கிராம சேவகர் பிரிவில் இருக்கும் முஸ்லிம்களை கிரானுக்கும், வாகனேரியில் இருக்கும் தமிழ் உறவுகள் ஓட்டாவடி பிரதேச செயலாளருக்கு கீழ் இருப்பதில் என்ன பிழை காண்கிறீர்கள். 

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதிலிருந்து பிரச்சினை உருவானது என்று பெரிய பொய்யினை கூறியுள்ளீர்கள். எமது பிரதேசத்தில் விஷேடமாக தமிழ், முஸ்லிம் உறவின் பிரச்சினைகளுக்கு காரணம் எப்போது புலிகள் மாவட்டத்தில் காலடி வைத்தார்களோ அன்றைய தினம் என்பது கசப்பாக இருந்தாலும் நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். 

எப்போது கிரானுக்கு தனியான பிரதேச செயலகம் திறக்கப்பட்டதோ அன்றைய தினம்தான் 2000ம் ஆண்டில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. கிரான் மக்களுக்கு தனியான செயலகம் தேவை என்ற எந்த நியாயபூர்மான காரணங்கள் தமிழ் தரப்பால் முன் வைக்கப்பட்டதோ அதனை விடவும் அதிகமான தேவைப்பாடுகள் கொண்டதாக கோரளைப்பற்று மத்தி மக்கள் இருந்தார்கள். 

புலிகளின் அச்சுறுத்தல், கெடுபிடி, உயிர்கொலை, கப்பம் இந்த காரணத்தால் தமிழ் பிரதேசத்தில் இயங்கிய பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு இப்பிரதேச முஸ்லிம் மக்களால் அன்றாட அவசர தேவை நிமித்தம் கூட போக முடியாத நிலைக்கு இப்பிரதேச முஸ்லீம்கள் தள்ளப்பட்டார்கள் என்பதனை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள். 

அவர்களுடைய வயல் ஆவணங்கள், காணி ஒப்பங்கள், பிறப்பு இறப்பு பதிவு செயல்பாடுகள் இன்னும் ஒரு சாதாரன பிரஜைக்கு பிரதேச செயலாளரின் தேவைப்பாடு அதிகமாக உள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள். 

இதன் அடிப்படையில்தான் கிரான், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்ட வரலாறாகும். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 11 கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட ஒரு பிரதேச செயலகமாக அமைச்சரவை அனுமதித்து செயல்படுத்தப்பட்ட போதும், மாவட்ட அரச உயர் அதிகாரிகளின் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் அதனை முழுமையான செயலகமாக இயக்குவதில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டது. 

அரசாங்கத்தின் சிபாரிசுக்கமைய கிரானுக்கு பிரதேச செயலகம் கிடைத்ததுபோன்று, கோரளைப்பற்று மத்தி செயலகத்தின் புனானை கிழக்கு, காரமுனை கிராம சேவகர பிரிவின் கடமைகளை கோறளைப் பற்று மத்தி செயலகத்திற்கு விட்டுக்கொடுப்பு செய்யவில்லை, மாறாக அமைச்சரவை தீரமானத்திற்கு முரணாக வாகரை செயலகத்துடன் தற்காலிகமாக இணைத்து வைத்திருந்தமையினை தயவு செய்து ஏன் ஏற்க மறுக்கிறீர்கள், என்பது எனக்கு விந்தையாகவே இருக்கிறது. இதிலும் இந்த இரண்டு கிராம சேவகர் பிரிவினை கடந்து சென்று நிலத் தொடர்பு இல்லாத ரிதிதென்ன கிராம சேவகர் பிரிவை கேறளைப்பற்று மத்தி நிருவாகம் செய்து வருகின்றது. 

இதில் ரிதிதென்ன கிராம சேவகர் பிரிவு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக நிருவாகத்தின் கீழும், வாகரைப் பிரதேச சபையின் கீழும் முன்னுக்குப் பின் முரணான எல்லைகளைக்கொண்டு காணப்படுகிறது. மக்களின் அன்றாட செயல்பாடுகள் எவ்வளவு தூரம் இழுத்தடிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றிய கவலை அரசியல் தலைவர்களாகிய நம்மிடத்தில் இல்லை என்றால் என்றோ ஒருநாள் நாம் மூன்றாவது நபரின் வருகையை மாலையிட்டு வரவேற்கவேண்டிய நிலை ஏற்படலாம். 

அது இப்போதே ஆரம்பமாகிவிட்டதா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கின்றது. நீண்டகாலமாக புரையோடிப் போயுள்ள இந்த நிகழ்வுகளில் இருந்து இரு சமூகமும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும் தயவுசெய்து விரும்புங்கள். மக்களுக்கு நல்லவற்றையே செய்வோம் மீண்டும் மீண்டும் குட்டையை குழப்பாதீர்கள். 

இந்த விளக்கத்தின்பால் நீங்கள் தெளிவு பெறவில்லையென்றால் மேலும் ஆதாரபூர்வமாக உங்களுடன் பேச தயாராக உள்ளேன். இதனை அரசியலாக்கி செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பினால்; உங்களோடு பகிரங்க தொலைக்காட்சி விவாதற்திற்கு அல்லது எந்தப்பகிரங்க மேடையாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் ஏனெனில் சத்தியம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில்.