புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013




            ண்டொன்றுக்கு இரண்டாயிரம் வழக்குகள் வரையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி விடுகின்றன. அதில் இரண்டாயிரத்து ஒன்றாக "நான்' இருக்கிறேன் என்பது போல இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்...

-மெட்றாஸ் ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர்களின் வேதனையான "கமெண்ட்'தான் இது.

போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகும்படி ஹைகோர்ட் சொன்னது எதனால்? அது என்ன வழக்கு? குறிப்பிட்ட அந்த வழக்கு பற்றி போலீஸ் வட்டாரத்திலும், கோர்ட் வட்டாரத்திலும் இப்படி விவரிக்கிறார்கள்...

பாப்புலர் போர்ஜ் (மெட்றாஸ்) நிறுவன உரிமையாளர் ராஜாமணிங்கறவரு ஈக்காட்டுத்தாங்கல்ல இருக்கற 4,800 சதுர அடி நிலத்தை ஸ்ரீதர் என்பவருக்கு விற்பனை செய் துள்ளார். நிறுவனத்தோட மற்ற இயக்குநர்கள்கிட்ட கலந்து பேசிதான் விற்பனை செய்யறதா சொல்லி ஸ்ரீதர்கிட்ட இடத்துக்கான முன்பணமா ரூ.13 லட்சத்தை காசோலையா வாங்கியிருக்காரு. ஆனா, ராஜாமணிக்கு அப்படி ஒரு அதிகாரத்தை நாங்க தரவில்லை என்று கூறி மற்ற இயக்குநர்கள் மறுத்ததோடு ஸ்ரீதருக்கு நோட்டீசும் அனுப்பறாங்க. இதனால ஸ்ரீதர் போலீசுக்குப் போகிறார்.


"நான் கொடுத்துள்ள வங்கிக் காசோலை யை பாப்புலர் போர்ஜ் வங்கிக் கணக் கில்தான் வைத்துள்ளனர்' என்பது ஸ்ரீதரின் குற்றச்சாட்டு.

2005 மே, 9 அன்று இந்தப் புகாரின் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்கின்றனர். மத்திய குற்றப் பிரிவு போலீஸார் இதை விசாரிக்கின்றனர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர், புகார்தாரர் ஸ்ரீதருக்கு எந்தத் தகவலும் கொடுக்காமல் வழக்கை முடித்து வைத்து சைதாப்பேட்டை 11-வது குற்ற வியல் கோர்ட்டில் அறிக்கை யை தாக்கல் செய்து விடுகிறார்.

இதன்பின்னர் இந்த வழக்கை மறுபடியும் விசா ரணை நடத்தி முடிவெடுக்கும் படி போலீசாருக்கு உத்தர விடக்கோரி மெட்றாஸ் ஹை கோர்ட்டில் ஸ்ரீதர் முறையிடு கிறார். நீதியரசர் சிங்காரவேலு இதன்மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடும்படி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு டைரக்ஷன் கொடுக்கிறார். 

இதன்பேரில் "முடித்து வைக்கப்பட்ட' வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி 26-05-2008 அன்று மாஜிஸ்திரேட், போலீசுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் போலீசார் இதை மீண்டும் சிவில் வழக்கு என்று கூறி வழக்கை முடித்து வைப்பதாக 21-03-2011-ல் சைதாப் பேட்டை கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்கின்றனர்.

இதனால் மீண்டும் மெட்றாஸ் கோர்ட் உதவியை நாடுகிறார் ஸ்ரீதர். மறுபடியும் ஓர் உத்தரவை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு பிறப்பிக்கிறது ஹைகோர்ட். இந்த உத்தரவை போட்டவர் நீதியரசர் நாகமுத்து.

இதன்மீது மீண்டும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட் ஓர் உத்தரவை பிறப்பிக்கிறது. அதில், "இந்த வழக்கை தகுந்த அதிகாரியை வைத்து விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும்' என்று சொல்லப்பட்டிருந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனருக்கு 10-11-2011-ல் இந்த உத்தரவு போடப்படுகிறது.

இதை "கந்துவட்டி' பிரிவு உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் கரு ணாகரன் விசாரித்தனர். அப்போது ஸ்ரீதர் சார்பில் அவருடைய வக்கீல் கே.சம்பத்குமார் ஆஜ ராகி வழக்கு தொடர் பான ஆதாரங்களை போலீசாரிடம் வழங் கினார்.

இப்போதும் அதே கதைதான் தொடர்ந்தது.

"இந்த வழக்கை உதவி கமிஷனர் உத்தரவின்படி முடித்து வைக்கிறேன்' என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் தெரிவித்திருக் கிறார். நியாயம் கிடைக்கும் வரை இதை விடுவதில்லை என்பதில் உறுதியாய் நின்ற ஸ்ரீதர் மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் முறை யீடு செய்கிறார்.

ஜன.10, 2013 அன்று இந்த வழக்கு நீதியரசர் டி.ஆறுமுகச்சாமி முன்பு விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதியரசர் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், காவல்துறையின் செயல்பாடுகளை ஒரு பிடி பிடித்தார்.

"சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோரின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும் சென்னை போலீசுக்கும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது. போலீஸ் கமிஷனர் என்பவர் போலீஸ் கமிஷனர்தான். அவர் ஒன்றும் புனித ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல. ஒரு அரசு அதிகாரி என்ற விதத்தில் அவர் பொதுமக்களை சந்தித்து, புகாரை பெற்று மக்களின் பிரச் சினைகளை தீர்க்கும் விதமாக குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் புலனாய்வு மேற்கொள்ள வேண்டும். பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும்.

இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூற கமிஷனர் ஜார்ஜ் நாளை (11-01-2013) நேரில் ஆஜராக வேண்டும்' என்றிருந்தது அந்த இடைக்கால உத்தரவில்.

இதனால், 11-ந்தேதி காலை 9 மணி முதலே "மீடியா'க்கள் கோர்ட்டில் நிரம்பத் தொடங்கினர். போலீசாரோ, ஹைகோர்ட் உதவி கமிஷனர் முரளி ஏற்பாட்டின்படி கோர்ட்டில் பல பகுதிகளை "பேரி-கார்ட்' மூலம் தடுத்து அதைக் கடந்து படம் பிடிக்காதபடி மீடியாக்களை மடக்கியிருந்தனர். ஆனால் கமிஷனர் ஜார்ஜ் கோர்ட்டுக்கே வரவில்லை.

வழக்கு வரிசை எண் 99 வரும்போது அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இணை கமிஷனர் சேஷசாயி, உதவி கமிஷனர்கள் முருகேசன், முரளி மொத்தமாய் நுழைந்தனர். 

அப்போது நீதியரசர் டி.ஆறுமுகச்சாமி "போலீஸ் கமிஷனர் எங்கே, இங்கே ஆஜராக உத்தரவிட்டும் அவர் ஏன் வரவில்லை?' என்று கேள்வி எழுப்ப... "முஸ்லிம் அமைப்பினர் கருத்தரங்கு நடத்த அனுமதி கேட்டுள்ளது தொடர்பாக கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். ஆகவே வரவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார் அட்வகேட் ஜெனரல்.

தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோர்ட்டில் ஆஜராகும்போது சீருடையில்தான் வரவேண்டும். அது கட்டாயம் என்று "மஃப்டி'யில் வந்திருந்த சேஷசாயிக்கு கண்டனத்தைத் தெரிவித்தார் நீதியரசர்.

டெல்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி சம்பவத்தை மறைமுகமாக சுட்டிக்காட் டிய நீதியரசர், "டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததும், உயர் போலீஸ் அதிகாரிகள் அத்தனைபேரும் தவறாமல் ஆஜராகி மன்னிப்புக் கோரியிருக் கிறார்கள். நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். வருகிற 17-ந் தேதி வியாழக்கிழமை கமிஷனர் ஜார்ஜ், கண்டிப்பாக இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும்' என்றார். 

கமிஷனர் ஜார்ஜின் கோர்ட் புறக்கணிப்பு செயல்பாடு பற்றி மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி, ""எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் முதல்வராக இருந்தபோது, திருப்பூர் கோர்ட்டில் ஆஜராகி பதிலளிக்கும்படி ஒரு மாஜிஸ்திரேட் உத்தரவைப் போட்டதும், நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அத்தகைய பண்பை இறுதிவரை அவரிடம் காண முடிந்தது. அவருடைய கட்சி யின் ஆட்சி இன்று நடக்கிறது. கோர்ட்டை ஏமாற்றும் அதிகாரிகள் பலர் நீதிமன்ற அவமதிப்பில் சிக்கி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் கோர்ட்டில் நின்று மன்னிப்புக் கேட்ட வரலாறுகள் நிறைய உள்ளன. இவரைப் போன்ற உயர் பொறுப்பினரின் தவறுகள் சமூகத்தில் சிறு தவறு செய்யும் சாதாரண மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துவிடும் பேராபத்து இதன்மூலம் உண்டாகிவிடும்'' என்று விரிவாகவே சம்பவம் பற்றி அலசினார்.

""குறிப்பிட்ட வழக்கில், அரசியல் சட்டப்படி உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்கவும், அவர்மீது நடவடிக்கைக் கேட்டு அரசுக்கு உத்தரவு போடவும் உரிமையுண்டு. அவர்கள் எவ்வளவு பெரிய பதவி வகிப்பவராயிருந்தாலும் நீதிமன்றம் மறு உத்தரவு போடும்வரை அவர் கோர்ட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்'' என்று குறிப்பிடுகிறார் சீனியர் அட்வகேட் சி.விஜயகுமார். 

மூத்த வழக்கறிஞர் பாரி, ""எது சிவில் வழக்கு என்பதே தெரியாதவர்களாக காவல்துறையில் சிலர் இருப்பதே அவமானகரமானது. குறிப்பிட்ட ஒருவர் எனக்குப் பணம் தரவேண்டும், அதை வாங்கித் தாருங்கள் என்றால் சிவில். ஏமாற்றப்பட்ட ஒருவர், அதற்கான ஆதாரங்களுடன் ஏமாற்றியவருக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று புகார் அளித்தால் அது கிரிமினல். அதுபோக இவையிரண்டையும் தீர்மானிக்க வேண்டியது கோர்ட். போலீஸ் அல்ல. நீதிமன்ற உத்தரவு என்பது அரசு உத்தரவு அல்ல. அரசியல் சாசன உத்தரவு. அதை மீறுவதும், மறுப்பதும் அரசியல் சாசனத்தை மீறுவதற்கு ஒப்பானது.

இதன்மூலம் சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்ற சுதந்திரத்தையும் தமிழக போலீஸார் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். என்று போலீஸார் ஹைகோர்ட்டை அடித்து நாசப்படுத்தினார்களோ, அன்று முதல் நீதிமன்றத்தை கிஞ்சித்தும் மதிப்ப தில்லை. நீதிமன்ற கோபுரத்தை விட உயர்ந்தது போலீசாரின் குண்டாந்தடி என கருதும் போக்கு நாட்டுக்கே பாதுகாப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என்றால் அரசியல் சாசன செயல்பாடு சரியில்லை என்று கூறி ஆட்சிக் "கலைப்பை' நோக்கி இந்தப் போக்கு பயணப்படும் என்பது உறுதி'' என்று சீறினார் வழக்கறிஞர் பாரி.

வருகிற 17-ந் தேதி கோர்ட்டில் கமிஷனர் ஆஜராகும் வாய்ப்பு வெகுவாகக் குறைவுதான். ஹைதராபாத் போலீஸ் பயிற்சி அகடமிக்கு செல்ல ஜார்ஜ் விருப்பம் தெரிவித்துள்ளார் என்கிறது உச்ச வட்டாரங்கள். "அப்பவும் கோர்ட்டுக்கு வந் தாகணுமே?' என்ற கேள்வி எழாமல் இல்லை.  

அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் கேட்டபோது...

""ஒண்ணுமில்லே ஸார்... எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடும்'' என்று ஒரே வார்த்தையிலேயே முடித்துக்கொண்டார்.

ad

ad