புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013

 நீலகிரி குன்னூலிருந்து 36 கிலோ மீட்டர் மலைத்தொலைவின் மேல் இருக்கிறது குந்தா தாலுக்காவிலிருக்கும் எடக்காடு. 11 மணிக்குள் நடையாய் நடந்து எல்லோரும் வந்து சேர்ந் திருக்க முதலமைச்சர் ஜெ. மதியம் 1.20 மணியளவில்தான் மேடைக்கு வருவார் என்பதால் எடக்காடு பெண்களைச் சந்தித் தோம். 

இங்குதான் தமிழக முதல்வர் ஜெ., கடந்த 4-01-13ந் தேதி உடலை வருடும் இதமான தென்றலுக்கும், வானத்தைத் தொடும் அளவு வளர்ந்திருக்கும் மரங்களுக்கும்,  காற்றோடு கலந்து வீசும் ரம்யமான யூகலிப்டஸின் நறுமணத்திற்கு மிடையே குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் 50-வது ஆண்டு விழாவில்... அத்தொழிற்சாலையின் கண்காட்சி யைத் திறந்து வைத்து பின் பொன்விழாவில் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பில் நீலகிரியே சின்னாபின்னமாக்கப்பட்டது.


எடக்காடு போவதற்கான  நான்கு கிலோமீட்டருக்கு முன்பே  பறக்கும் வாகனங்களோடு பிரஸ் வாகனங்களும் மறிக்கப்பட்டன.  அழைத்து வரப்பட்ட பேருந்தில் இருந்து பெண்களும் குழந்தை களும் நான்கு கிலோமீட்டரில் உதிர்ந்து நெட்டுக்குத்தலான மலையில் எடக்காடை நோக்கிப் படரத்தொடங்கி விழத் தொடங்கினார்கள். 

11 மணிக்குள் நடையாய் நடந்து எல்லோரும் வந்து சேர்ந் திருக்க முதலமைச்சர் ஜெ. மதியம் 1.20 மணியளவில்தான் மேடைக்கு வருவார் என்பதால் எடக்காடு பெண்களைச் சந்தித் தோம். மூன்று பெண்கள் ஒரு வீட்டின் மீதேறி வானத்தையே பார்த்திருக்க... "என்ன வானத்தையே பார்த்துக்கொண்டிருக் கிறீர்கள்' என நாம் கேட்க... ""அதுவா... அதோ... அந்த மலைமேல இருந்துதான் எ(ஹெ)லிகாப்டர்ல இன்னைக்கு   வர்றாங்களாம் ஜெயலலிதா அம்மா. ஆனா எதுக் காக இந்த மலை முழுக்க, போன நாலஞ்சு நாளா பேய் பனியில தரையில  நிக்கறாங்க போலீஸ்காரவுக. அதுவும் பொம்பளைப் போலீசுக கதிதான் ரொம்ப பாவம் கண்ணு. 

மல்லுக்குப் போறதுக்குக்கூட எடமில்லாம அவுக படற பாட்டைப் பாத்தா... அய்யோ சாமீ... அதுலயும் ஒரு பொம்பளைப் பொண்ணு வெறைச்சுப்போய் காலங்காத்தால கதவைத் தட்டிட்டு குளிர் ஜுரத்தோட நிக்குது. கதவைத் தொறந்ததுமே... "இங்க பாத்ரூம் போறதுக்கு இடம் இருக்குங்களா'ன்னு கேட்டுட்டு "இருக்கு'ன்னு சொல்றதுக்குள்ளயே அந்தப் பொண்ணு பாத்ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிச்சு. அதுக்கப்புறம் நெறைய பொம்பளைப் போலீசுக இப்படித்தான் எங்க ஒவ்வொரு வீடா கதவைத் தட்டிட்டு இருந்துட்டுப் போறாங்க. அதுவும் இது மார்கழி மாச பனி வேற. அவுங்களப் பாக்கவே பாவமா இருக்கு'' என்றபடியே மீண்டும்  வானத்தைப் பார்க்க பருந்து ஒன்றுதான் அப் போது அவர்கள் கண்களுக்கு அப்பால் பறந்து கொண்டிருந்தது.

அதற்குள்... தனபால் என்ற அந்தப் பெரியவர் அந்தப் பெண்களைப் பார்த்து... ""அடப் பொம்ப ளைகளா, வானத்துலயிருந்து இந்த இடத்துக்கு  வர்றதுக்கு எதுக்கு ஊட்டி முழுக்க இவ்வளவு போலீஸ தரையில நிக்க வச்சிருக்காங்கன்னு கேளுங்க. நம்ம ஊர்ல என்னைக்காச்சும் இந்த மாதிரி சொகுசுக் காருக இவ்வளவு வந்திருக்குதா? இல்லை, நம்மளத் தேடி யாராச்சும் இங்க வந்திருக்காங்களா? எனக்குத் தெரிஞ்சு அந்தக் காலத்துல இங்க நேரு ஒரு தடவை வந்திருந்தாரு.  காமராஜரு ஒரு தடவை வந்திருந்தாரு.  அதுக்கப் புறம் யாராச்சும் நாம இந்த மலை மேல இருக்க றமா இல்லையான்னு கூடத் தெரிஞ்சுக்கலை. இப்ப நிறைய பேருக்கு மலை மேல ஆசை வந்திருச்சு. இந்தம்மாவும் நம்மளப் பார்க்க வரலை. தாய் சோலை எஸ்டேட்டையும் இன் னும் சில எஸ்டேட்களையும் மேலிருந்து பார்க்க வந்திருக்கு.


அதுக்கு இடையில இப்படி ஒரு விழா. தேயிலைத் தொழிலாளி ஒவ்வொருத்தனும் பனியிலயும், காத்துலயும் செத்துட்டு இருக்கான். நீங்க இதைப் பார்க்க வேற அண்ணாந்து பாத் துட்டு இருக்கீங்க. போய் பொழப்பைப் பாருங்க'' என்று வெயிலை அனுபவித்தபடியே  நாற்காலியில் உட்கார்ந்து புலம்பினார்.

தூர மலையின் மரங்களுக்கு இடையில் ஹெலிகாப்டரில் வந்திறங்கி கான்வாய் வழியே வந்து ஜெ. மேடையேறி "தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களே' என ஆரம்பித்து... வழக்கமாய் சொல்லும் குட்டிக் கதைகள் இரண்டை சொல்லிவிட்டு அத்தேயிலைத் தொழிற்சாலையின் சில தொழிலாளர்களுக்கு பொன்விழா ஊக்கப் பணவோலையை வழங்கிவிட்டு 40 நிமிடங்களில் திரும்பவும் கான்வாயைப் பிடித்து ஹெலிகாப்டரில் கொடநாட்டுக்கு பறந்துபோனார்.

"இந்த 40 நிமிஷ மீட்டிங்குக்கு வேண்டியா நாலஞ்சு நாளா சித்ரவதைப்பட்டோம்' என அலுத்துக்கொண்ட பெண் காக்கிகளிடம் நாம் யார் என்று சொல்லாமல் பேச்சுக்கொடுக்க... அந்தம்மா சொன்ன ஒரு கதை, யாருக்காகச் சொல்லுச்சோ இல்லையோ எங்க போலீஸ்காரங்களுக்குச் சொன்ன மாதிரியே இருந்துச்சுங்க. அதாவது ஒரு ஊர்ல இருந்த பணக்காரர் நாட்டிலேயே தான் ஒருத்தர் மட்டுமே சுகபோகத்தை ஏராளமா அனுபவிக் கிறேன்னு நெனைச்சிருந்தாராம். அந்தப் பணக்காரரை ஒருநாள் ஒரு துறவி சந்திச்சபோது அவருக்கு உணவு வழங்கி உபசரிச்சாராம் பணக்காரர். அப்போ அந்தத் துறவியிடம் "நீங்க உலகமே சுத்தி வந்திருப்பீங்க. ஆனா என்னைவிட சுகபோகிய நீங்க பாத்திருக்கீங் களா?'ன்னு பணக்காரர் பெருமை யாய்க் கேட்டதுக்கு, அந்த துறவி சிரிச்சுக்கிட்டே "சுகமாக வாழ்கிற வரை வேற எங்கயும் தேடவேண்டாம். உன் நாட்டு லயே இருக்காரு'ன்னு சொன்னதுக்கு "என் நாட்டுல யா? எங்கே இருக்காரு?'னு கேட்டாராம் பணக்காரர்.

"வாங்க நேர்லயே காட்டறேன்'னு அந்தப் பணக் காரரை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றாராம் துறவி. அப்போ பயங்கர வெயிலாம். அந்த வெய்யில், வேர்வை ஒழுகறதப் பத்தியெல்லாம் கவலையேபடாம ஒரு இளைஞனை மாதிரி உழுதுட்டிருந்த அறுபது வயசு பெரியவரைக் காட்டி "இவர்தான் உன்னைவிட சுகம் அனுபவிக்கும் சுகபோகி'ன்னு சொன்னாராம் துறவி.


"இந்தக் கிழவன் என்னைவிட சுகபோகியா?'ன்னு கேலியா கேட்டதுக்கு, "செல்வந்தரே, இந்த வயசிலும் வெயில்னு பார்க்காம உழைச் சிட்டிருக்கிற இவருக்கு இந்த உழைப்புக்கு பின்னே நல்லா பசி எடுக்கும். கூழோ, கஞ்சியோ எது கிடைச்சாலும் அமிர்தம்தான் அவருக்கு. சாப்பிட்டுட்டு நிம் மதியா தூங்குவார். திரும்பவும் உழைப் பார். உழைப்பின் களைப்பில் இரவு நல்லா தூங்குவார். சுக போகம் என்பது வெயி லையும், பனியையும், மழையையும் ஆனந்த மாய் எதிர்கொள்வதே. அதை எப்போதும் எதிர்கொள்ள அவர் தயார்.  இப்ப சொல் லுங்க, நீங்க சுகபோகியா? அந்த உழைப் பாளி சுகபோகியா?'ன்னு துறவி கேட்டதுக்கு பணக்காரர் "யார் சுகபோகிங்கிறத உணர்ந்துட்டேன்'னாராம்.

""வெயில்லயும், பனியிலயும் நாங்க நின்னு உழைக்கிறதால சத்தியமா நாங்க சுகபோகி இல்லைங்க. வெளியூர்லயிருந்து பாதுகாப்புக்குன்னு கூப்புட்டுட்டு வந்து இங்க இந்த மலையில கூழும், கஞ்சியும் கூட இல்லைங்க... பல மாவட்டங்கள்லயிருந்து வந்தவங்களுக்கு எந்த வித அக்காமெடேஷனும் இல்லை. நாங்களேதான் எங்க கை பணத்தை செலவு பண்ணி சாப்பாடு, இந்த ஸ்கார்ப், ஸ்வெட்டர் எல்லாம் வாங்கிக்கிறோம். 16 மணி நேரம் டியூட்டிங்க. முடியலை. நேத்துகூட இந்த விழா நடக்கிற இடத்துக்கு பெரிய பஸ்சுல விடிய விடிய போலீஸ்காரங்களை கொண்டு வந்து குவிச்சாங்க. அப்ப ஒரு போலீஸ் டிரை வரு, அந்த டி.எஸ்.பி.கிட்ட "சார், ரெண்டுநாளா கண்ணு முழிச்சி ஓட்டிட்டு இருக்கிறேன். என்னால இந்த ட்ரிப் அடிக்க முடியாது. அது வும் எடக்காடு ஒத்தையடி ரோட்டுல 40 பேரை ஏத்திக்கிட்டு... டேஞ்ஜர் சார்'னு சொன்னதுக்கு அந்த டி.எஸ்.பி. "அதெல்லாம் முடியாது. நீ ஓட்டித்தான் ஆகோணும்'னுட்டாரு. "சார், ஒரு உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கணும்கிற உங்க உத்தரவுக்குப் பயந்து என்னால 40 உயிரைக் கொல்ல முடியாது'ன்னு  அந்த போலீஸ் டிரைவர் உள்ளதைச் சொன்னாரு. "உன் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுப்பேன்'னு அந்த டி.எஸ்.பி. கோப மாகி சொன்னதுக்கும் பயப்படலை. பஸ்லயிருந்து இறங்கிப் போயிட்டாரு அந்த போலீஸ்காரர். "நாங்களும் மனுஷங்கதான் சார்.  அதிகாரிகங்கிற துறவிக எங்கள உழைப்பாளிகளா சுகபோகிகளா பணக்கார அம்மாகிட்ட காட்டிட்டு லாட்ஜ்ல தங்கிக்கிறாங்க. இந்தப் பெண் உழைப்பாளிக நாங்க எங்க சார் தங்கறது. நடமாடும் கழிப்பிட வசதி எதுவுமே இல்லை. ஆம்பளைங்களுக்கே பிரச்சினை. பொண்ணுக நாங்க என்ன பண்ண முடியும்? கதையில வர்ற அந்தத் துறவிக்கோ, பணக்காரருக்கோ,  பெண் உழைப்பாளிகளினுடைய கஷ்டம் என்னவென்று தெரிய வேண்டாமாங்க? அந்தப் பணக்கார அம்மா எப்ப மலைய விட்டுப் போவாங்க? நாம எப்ப வீடு திரும்புவோம்னு நாங்க விடுகதை போட்டுட்டிருக்கோம்'' என கொட்டித் தீர்த்தார்கள் பெண் காக்கிகள், பனிக்காற்றிலும் ஆவேசமாய்.
மொத்தத்தில்... உறை பனிக் காற்றில் நீலகிரி மலையின் இண்டு இடுக்குகளில் நின்று "இந்த காக்கி உடை போட்டதுதான் எங்கள் தவறா?' என்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஜெ.விடம் கேட்கிறார்கள் காக்கிகள்.                                  

ad

ad