புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2013



4ஆம் தேதி ‘டெசோ’ கூட்டத்தில் முக்கிய முடிவெடுப்போம்! கி.வீரமணி அறிக்கை!
இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட, தமிழர்கள்
ஒரே குர
லில் முழங்க வேண்டும் - பிப்ரவரி 4ஆம் தேதி நடக்க இருக்கும் ‘டெசோ’ கூட்டத்தில் முக்கிய முடிவு  எடுக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடரபாக அவர் வெளியிட்டடுள்ள அறிக்கையில், 
இலங்கையில் உள்ள சிங்கள வெறியர், சர்வாதிகாரத்தையே தனது நடைமுறையாகக் கொண்டு நடத்தும் ராஜபக்சேயின் அரசு, தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிட, உலக நாடுகளின் கண்களில் நன்றாக மிளகாய்ப் பொடித் தூவி ஏமாற்றினார்.
ராஜீவ் கொலையை மனதில் நிறுத்தி செயல்பாடு!
தீவிரவாதத்திற்கு எதிராகத்தான், தான் போர் நடத்துவதாகவும், விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாதிகளுக்கு எதிரானதே தனது நிலைப்பாடு என்றும் கூறி, இந்திய அரசையும் நம்ப வைத்தார்; ராஜீவ்கொலை என்ற ஒன்றினையே மனதிலிருந்து அகற்றாமல், இலங்கை இராஜபக்சே அரசின் இராணுவத்திற்கு வேண்டிய ராடார் கருவிகள், ஆயுதங்கள், பயிற்சிகள் எல்லாவற்றையும் தந்தது இந்திய அரசு
விளைவு...? லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கம் சிறிதும் இன்றி, கொன்று குவித்தார்கள். தப்பியோடிய தமிழ் சனங்கள்  தம் சொந்த இனத்தின் பிணங்கள்மீது கூட நடந்தே சென்றனர். அடக்கம் செய்யக்கூட வாய்ப்பில்லை, நேரமில்லை. பாதுகாப்புப் பகுதிக்கு வாருங்கள் என்று போர் நடக்கும்போது (வன்னிப் பகுதி) சிவலியன் மக்களை வரச் சொல்லி, ஒட்டு மொத்தமாக அவ்விடத்திலேயே ஒரு சேர அழித்து இனப்படுகொலை செய்தனர்!

அந்தத் தீவிரவாதிகளை ஒழித்து விட்டோம்; விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டோம் என்று எக்காளம் செய்கின்றனர்!
தமிழ்த் தாய்களும், சகோதரிகளும், இளம்பெண்களும் சொல்லொணா பாலியல் வன்கொடுமைக்கும் (வன்புணர்ச்சி உட்பட) பல்வேறு அருவருக்கத்தக்க. வார்த்தைகளால் எழுதப்பட முடியாத அளவுக்கு மனித இதயமே இல்லாதவர்களாக நடந்து கொண்டது சிங்கள அரசு.
இன்னும் இராணுவ முகாம் கட்டுப்பாட்டில்தான் தமிழர்கள்
போர் முடிந்து ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அரசியல் தீர்வு கண்டாகி விட்டதா? அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் இன்னமும் முள்வேலி மற்றும் இராணுவ முகாம்களுக்குள் சிறைபிடிக்கப்பட்ட வேற்று நாட்டு பிணைக் கைதிகளைப் போலத் தானே நடத்தப்படுகின்றனர்!
வடக்கு, கிழக்கு பகுதிகளில் (தமிழர் பிரதேசங்கள்) இராணுவம் நிறுத்தப்பட்டு, இராணுவ அரசு அங்கு நடந்து கொண்டு அரச பயங்கரவாதம் கொடி கட்டிப் பறக்கிறது!
தமிழ் ஊர்ப் பெயர்கள் சிங்களமாக மாற்றம்
வீடு திரும்பிய நிலையில் தமிழர்களின் பகுதிகளில் ஏராளமான சிங்களக் குடியேற்றங்கள் ஒருபுறம்; இவர்கள் வீடுகளையும் சிங்களவர்கள் ஆக்கிரமித்ததோடு, தமிழர் பகுதியில் இருந்த தமிழ்ப் பெயர்களையெல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றி விட்டனர். இதுபற்றி ‘டெசோ’ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் சில  நாள்களுக்கு முன் அறிக்கை விடுத்து கண்டனம் எழுப்பி, இந்திய அரசின் பொறுப்பில் உள்ளோருக்கும், வழிகாட்டும் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். ‘விடுதலை’ ஏட்டில் நீண்ட ஆதாரபூர்வ பட்டியலே வெளியிட்டுள்ளோம்.

அய்.நா. உலக நாடுகள் ஏன் இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘மவுன விரதம்’ இருக்க வேண்டும்?
எம் தமிழர்கள், தொப்புள் கொடி உறவுகள் ஆயிற்றே! அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? கொல்லப்பட்டவர்கள், இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் போக, எஞ்சியவர்களுக்காவது வாழ் உரிமை  தரப்பட இலங்கை அரசினை வற்புறுத்தும் கடமை இந்திய அரசுக்கு உண்டே!  அதுபற்றியெல்லாம் கவலைப்படாது, யாருக்கோ வந்த கொடுமை என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ஆகும்?
பல்லாயிரக்கணக்கான எமது மக்களின் வரிப் பணத்தை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு என்று கொடுத்தீர்களே அது இப்போது யாருக்குப் பயன்படுகிறது? சிங்கள நரிகளுக்குத்தானே!

சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கலாமா?
1. போர் முடிந்து 4 ஆண்டுகள் ஓடி விட்டதே, சிதைக்கப்பட்ட எம் தமிழர் பகுதிகளில் (வடக்கு, கிழக்கு மாகாணங்களில்) மறுவாழ்வு மீள் குடியமர்த்தம், பணிகள் சரி வர நடக்கவில்லையே!

2. இன்னமும் முகாம்கள் கலைக்கப்பட வில்லையே! இராணுவக் கட்டுப்பாட்டில் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக அல்லவா ஈழத் தமிழர்கள் ஆண், பெண், குழந்தைக் குட்டிகள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் கடலில் மிதக்கின்றனவே!  இலங்கை அரசியல் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று   முன்பு இந்திய அரசிடம் இலங்கை அரசு ஒப்புக் கொண்டதே -  போர்க் கால உதவிகள் கேட்ட போது  - மறந்துபோய் விட்டதா? 
சிங்களவர்களைப்போல, தமிழர்களும் அம்மண்ணின் மைந்தர்கள் அல்லவா? அதிகப்படி உரிமை உடையவர்கள் அல்லவா?
3. தமிழர் பகுதிகளின் இராணுவத்தை விலக்கிக்  கொண்டு தமிழர்களை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி செய்வது மனிதநேயம் - மனித நாகரிகம்  அல்லவா?
இதுபற்றி அனைவரும் ஓங்கிக் குரல் எழுப்ப  வேண்டாமா?
4. யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் தமிழ் மாணவர்கள் என்பதால் அவர்களின் கல்விக் கண்களைக் குத்தி, காராக்கிரகத்தில் அல்லவா அடைத்து, பாழ்படுத்துகிறது - சிங்கள ராஜபக்சே அவரது குடும்பத்தினரின் சர்வாதிகார ஆட்சி. அய்.நா. உலக நாடுகளும், உலக மனித உரிமை அமைப்புகளும் உடனே இப்பிரச்சினைகளின்மீது ஓங்கிக் குரல் கொடுத்து, தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்!
கடுமையாகக் கண்டிக்கிறோம்!
இந்த லட்சணத்தில் எம் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் (தமிழ்நாடு தவிர) மற்ற மாநிலங்களில் இராணுவப் பயிற்சி தருவோம் என்று கூறும் இந்திய இராணுவ அமைச்சரின் பேச்சுகளை கடுமையாகக் கண்டிக்கிறோம்!

இராணுவத்தை விலக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் இறுமாப்புடன் கூறுகிறார்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் என்றால் இந்திய ஒருமைப்பாடுபற்றி முழக்கமிடுவோர் இதில்  மட்டும் வேறு கண்ணோட்டமா? தமிழனை ஏமாளியாக்க முயலுகிறார்களா?

அக்கிரமத்தை, அநியாயத்தை இந்திய அரசு மற்ற மாநிலங்களில் நடத்தி, அதன் மூலம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்திட இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி என்பது மனிதாபிமான விரோதம் அல்லவா?
‘டெசோ’ கூட்டத்தில் முடிவெடுப்போம்!
எனவே தமிழ் மக்கள்  உணர்வுகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்த நாம் அனைவரும் ஒரே குரலில் முழங்குவோம்!
மானமிகு  கலைஞர் அவர்கள் தலைமையில் ‘டெசோ’ கூட்டம் 4ஆம் தேதி கூடவிருக்கிறது. இவைபற்றி நல்ல முடிவுகளை எடுத்து  மூடிய உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வோம், ஆயத்தமாவீர்!
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ad

ad