"ஆட்சியில் யார் இருந்தால் என்ன? சட்டத்துக்கு பயந்தவர்களா நாங்கள்? வழக்கு நடந்து... என்றோ தண்டனை கிடைத்து..? அட, போங்கப்பா... நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...'’ எனச் சொல்லாமல் சொல்வது போல, மதுரை மண்ணில் பொட்டு சுரேஷ் குமாரை வெட்டிச் சாய்த்து விட்டு, நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள் இளைஞர்கள் ஏழு பேர். ankeeran
யார் இவர்கள்? யாருக்காக கொலை செய்தார்கள்?
அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் எனச் சொல்லப்படும் இந்த 7 பேரும் கீரைத்துறை ஏரியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சபா ரத்தினம் மீது 2008-ல் 307-வது பிரிவின் கீழ் பதிவான வழக்கு விசாரணையில் இருக்கிறது. 2009-ல் நடந்த வழுக்கை முனுசு கொலையில் சம்பந்தப்பட்டவன் என செந்தில் மீதும் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. 2010-ல் கொலையான இரும்புப் பட்டறை தனுஷ்லாஸ் வழக்கில் விடுதலை ஆனவன் ராஜா என்ற ஆசா, கார்த்திக் தவிர, சந்தானம், லிங்கம், சேகர் என மற்றவர்களும் குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான். ஏழு பேருமே 25 வயதுக்கு உட்பட்டவர்கள். திருமணம் ஆகாதவர்கள்.
ஏழு பேரையும் நத்தம் கோர்ட்டுக்கு அழைத்து வந்த வழக்கறிஞர் கண்ணனிடம் பேசினோம் “""இவர்கள் அட்டாக் பாண்டியின் விசுவாசிகள்தான். இன்னும் மூணு மாசத்துல சந்தானத்தின் தங்கச்சிக்கு கல்யாணம். இப்படி ஒரு சூழ்நிலைல தன்னோட குடும்பத்த போலீஸ் டார்ச்சர் பண்ணுறத எப்படி தாங்கிக்குவான்? சபாரத்தினமும் சந்தானமும் அண்ணன்-தம்பி உறவு முறை உள்ளவர்கள். மத்த அஞ்சு பேரு குடும்பத்துக்கும் இதே நெருக்கடிதான். அதான்... சரண்டர் ஆகுறாங்க''’என்றார்.
பொட்டுவை ஏன் கொலை செய்தார்களாம்?’ஏழு பேரையும் நத்தம் கோர்ட்டிலிருந்து சேலம் சிறைக்கு கொண்டு சென்ற காவல்துறை உதவி ஆணையர் கணேசனிடம் கேட்டோம். ""போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்த பிறகுதான் முழு விபரமும் தெரியும். மதுரை சிறையில் இவர்களை அடைத்து வைத்தால் ஏற்கனவே கைதாகி அங்கிருக்கும் அட்டாக்கின் ஆட்களுடன் கூட்டணி சேர்ந்து வேறு ஏதாவது சதிச் செயலில் இறங்கிவிடக்கூடும். இதற்காகவே மதுரை சிறை வேண்டாமென்று சேலம் சிறைக்கு கொண்டு சென்றோம்'' என்றார்.
இவர்கள் உண்மைக் குற்றவாளிகளா?’பொதுவான ஒரு சந்தேகத்தை துணை ஆணையர் திருநாவுக்கரசிடம் முன் வைத்தோம். ""உண்மையான குற்றவாளிகள் பிடிபடணும். என்ன நோக்கத்துக்காக கொலை செய்தார்கள் என்பதை பதிவு செய்யணும். காவல்துறைக்கு இதுதானே தேவை. மன்னன் போன்ற தி.மு.க.வினரைக்கூட காவல் நிலையத்தில் வைத்து ஜென்டில் ஆகத்தான் விசாரித்தோம். யாரையும் எந்த டார்ச்சரும் பண்ணல. அட்டாக் பாண்டிக்காகத்தான் பொட்டு சுரேஷை இவங்க கொலை செஞ்சிருக்காங்க. இன்னும் சிலருக்கு இந்தக் கொலையில சம்பந்தம் இருக்கு. அவங்களைத் தேடிக்கிட்டிருக்கோம்''’என்றார்.
யார் அந்த வேறு சிலர்? என்னும் கேள்வியோடு காக்கிகள் வட்டாரத்தை துருவினோம்.
""அட்டாக் பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டி, நெல் சன், பிரபு, பிரவீன், ஜோதி என இன் னொரு டீமுக்கும் இந்தக் கொலையில் தொடர்பு உண்டு. சரணடைந்த 7 பேருக்கும் லீடராக இருந்திருக்கிறான் சபாரத்தினம். மொத்த டீமையும் இயக்கியிருக்கிறான் விஜயபாண்டி. கீரைத்துறை ஏரியாவில் கல்யாண வீடோ, சடங்கு வீடோ பணத்தை விசிறி அடிக்கும் அட்டாக் பாண்டியை "தலைநகரம்' என்று பெயர் வைத்து அழைக்கிறது இந்த டீம். "எங்க தலைநகரத்தையே சாய்க்க நெனச்சா விட்டு வைப் போமா? அதான்... பொட்டுவோட கதைய முடிச்சிட் டோம்...'’என்று விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது இந்த டீம். அதற்கான டீலிங் விஜயபாண்டி மூலம் நடந்திருக்கிறது'' என்கிறார்கள்.
அட்டாக் பாண்டிக்கு பொட்டு சுரேஷ் மீது அப்படி என்ன பகை?
""ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதை தெரியும்ல. அது போலத்தான் அட்டாக் பாண்டியை மு.க.அழகிரி வட் டத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றி னார் பொட்டு சுரேஷ்''’எனச் சொல்லும் அட்டாக் தரப் பினர், பகை மூண்ட விதத்தை விவரிக்கிறார்கள்...
1992-லேயே தி.மு.க. மாவட்ட தொண்டரணி பொறுப்புக்கு வந்துவிட்ட அட்டாக் பாண்டி, தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் 2003-ல் அழகிரி கைதாகி சிறை சென்றபோது, எஸ்ஸார் கோபி மாமா கண்ணுச் சாமி மூலமாக அழகிரி வீட்டின் பாதுகாப்பாக கேட்டில் நிற்க ஆரம்பித்து காவல்காரனாக, தோட்டக்காரனாக அந்த வீட்டில் எந்த வேலையையும் முகம் சுளிக்காமல் பார்த்தார். அப்படியே அழகிரி மகன் துரைக்கு எஸ்கார்ட் ஆனார். 2006-ல் அட்டாக் பாண்டி திருமணத்தை அழகிரிதான் நடத்தி வைத்தார். அ.தி.மு.க. வட்டாரத்தில் சோபிக்க முடியாமல் தி.மு.க.வுக்கு தாவி, மெள்ள மெள்ள அழகிரியின் இதயத்தில் என்ட்ரி ஆனவர் பொட்டு சுரேஷ். தேவை எதுவானாலும் பூர்த்தி செய்கின்ற பொட்டுவின் சாமர்த்தியத்தில் பூரித்துப் போனார் அழகிரி. அப்போது தி.மு.க. ஆட்சி. கல் வீச்சில் ஆரம்பித்து தீ வைப்பாக மாறி, மூன்று பேர் உயிரைப் பறித்த கோர சம்பவத்தை முன்னின்று நடத்தி கைதும் ஆகிறார் அட்டாக் பாண்டி. வெளியே வந்தவுடன் ‘மற்றவர்களைப் போல நானும் வளரணும்’ என இம்சை பண்ணி குவாரிகள் சிலவற்றை வாங்குகிறார். வன்முறை வட்டத்தைக் கழற்றி விட்டால் தான் அரசியலில் வளர முடியும் என பொட்டு தந்த ஆலோசனையை அழகிரி அப்படியே ஏற்க, விசுவாசத் துக்காக கிடைத்த வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் பதவி அட்டாக் பாண்டியிடமிருந்து பறிக்கப்பட்டது.
அரிசியை பாலீஷ் பண்ணும் குறிப்பிட்ட சில ரைஸ் மில்களிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை கிடைத்து வந்த மாத மாமூலும் நின்று போனது. தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த பொட்டுவை நேரடியாக மிரட்டிப் பார்த்தார் அட்டாக் பாண்டி. பொட்டு வின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியும் பார்த்தார். அட்டாக் உயிரோடு இருந் தால் தனக்கு ஆபத்துதான் என்பதை உணர்ந்திருந்த பொட்டு சுரேஷ் என் கவுன்ட்டர் மூலம் அவரைப் போட்டுத் தள்ள என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் டான ஏ.சி. வெள்ளத்துரையை மதுரைக்கு கொண்டு வந்தார். ‘"எனது அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் அட்டாக் தப்பு செய்யட்டும்.. சுடுகிறேன். இல்லையென்றால் துப்பாக்கியைத் தூக்கவே மாட்டேன்'’என்பதில் ஏ.சி. வெள்ளத்துரை உறுதியாக இருக்க... ஆறே மாதங்களில் மீண்டும் சென் னைக்கே துரத்தி விடுகிறார் பொட்டு. பிறகே, தனக்குச் சரியாக இருப்பார் என்று ஜெயஸ்ரீயை மதுரை டி.சி. ஆக்கி னார். தொடர்ந்து, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என அட்டாக் பாண்டி யை அடுத்தடுத்து வழக்குகளில் சிக்க வைக்கிறார். கீரைத்துறை -ஸ்ரீ ஜெயம் ரியல்ஸ் நிதி நிறுவன மோசடியில் மூக்கை நுழைத்து ஆள் கடத்தல், பணம் சுருட்டல் என வேகம் காட்டிய அட்டாக்கின் வீட்டில் காக்கிகளை இறக்கி அதிரடியாக ரெய்டு செய்து, வீட்டில் இருந்த ரூ.3 கோடியைப் பறித்ததன் பின்னணியில் பொட்டு இருந்தார்.
ஆட்சி மாறியதும் நில அபகரிப்புக்காக மூன்று மாதங்கள் திருச்சி சிறையில் இருந்து விட்டு குண்டாஸை உடைத்து வெளிவந்த அட்டாக் பாண்டி, தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஆகிறார். பொட்டுவின் கைங்கரியத் தால், அறிவிப்பு வந்த மறுநாளே அந்தப் பொறுப்பும் பறிபோகிறது. பிறகுதான் சென்னை சென்று மு.க.ஸ்டாலினுக்கு சால்வை போட்டு விட்டு, பொட்டு சுரேஷுக்கு எதிராக மீடியாக்களிடம் வாய் திறக்கிறார் அட்டாக் பாண்டி. "என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொன்றுவிட சதி நடக்கிறது. என் உயிருக்கு ஆபத்து' என மு.க.அழகிரி, பொட்டு சுரேஷ், டி.சி. மயில்வாகனன் போன்றோரைக் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் மனுவும் தாக்கல் செய்கிறார்.
‘பொட்டுவுக்கு எதிரான நடவடிக்கைகளை இத்தனை வெளிப்படையாகவும், சட்டபூர்வமாக வும் செய்து வந்த அட்டாக் பாண்டி, எப்படி பொட்டுவின் கொலைக்கு காரணமாக இருப் பார்?’என்ற நமது கேள்விக்கு பதிலளித்தார் அட்டாக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் அந்த உயர் அதிகாரி.
""அடுத்து எப்படியும் தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும். அழகிரியை விட்டுப் பிரிந்தது போல பொட்டு நடத்தி வந்த நாடகம், பிறந்த நாளுக்கு முரசொலியில் விளம்பரம் கொடுத்தபோதே கலைந்து போனது. அழகிரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லையென்றாலும், அதற்கு முன்பாகவே அழகிரியைத் தனியாகச் சந்தித்து அவரது வயதைக் குறிக்கும் எண்ணிக்கையில் தங்கத்தைப் பரிசாகக் கொடுத்து அசத்திவிடுகிறார் பொட்டு சுரேஷ். கட்சிக்காரர்களைக் கூட அழகிரியை அண்ட விடாமல் தடுக்கின்ற சக்தியான பொட்டு மீண்டும் அவருடன் நெருக்கம் காட்டி வருவதும், பொட்டு உயிரோடு இருக்கும்வரை, தான் நிம்மதியாக இருக்க முடியாது என்பதும் அட்டாக்கின் மனதுக்குள் ஓடியபடியே இருந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தான், அட்டாக்கின் அக்கா மகன் திருச்செல்வத்துக்கும் அட்டாக் பாண்டிக் கும் இருக்கின்ற நெடுநாள் பகையை ஒரு கேடயமாக்கி, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக அட்டாக்கைப் போட்டுத் தள்ள ஆட்களைத் தயார் செய்திருக்கிறார் பொட்டு சுரேஷ். ரூபாய் இரண்டு கோடி வரை இரைத்திருக்கிறார்.
பொட்டுவிடம் பணம் வாங்கியவர்கள், "என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் அல்லவா?'’ என்று யோசித்திருக் கிறார்கள். இங்கேதான் சாதியும் தலை தூக்கியிருக்கிறது. பிள்ளைமார் சமூகத் தவரான பொட்டு சுரேஷ் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அட்டாக் பாண்டியை காலி பண்ணும் அளவுக்கு துணிச்சலை வளர்த்துக் கொண்டதும், அழகிரியின் வட்டத்தில் தொடர்ந்து இருந்து வந்த முக்குலத்தோர் லாபியை தொடர்ந்து உடைத்து வருவதும் ரொம்பவே உறுத்தியிருக்கிறது. நம் கையால் நம் கண்ணையே குத்துவதா? என்று அட்டாக்கிடமே பொட்டுவின் திட்டத்தைப் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள்.
ஆபத்து தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தோ என்னவோ, நண்பர்களோடு கொடைக்கானல் போய் மூன்று நாட்களைக் கழித்திருக்கிறார் பொட்டு. இதனால், அழகிரியின் பிறந்தநாளுக்கு முந்தைய நாளே நடக்கவிருந்த கொலை தள்ளிப் போயிருக்கிறது. ஆனாலும், கொடைக் கானலில் இருந்து திரும்பிய நாளில், அலுவலகத்திலிருந்து பொட்டு திரும்பிக் கொண்டிருந்த தகவலை அறிந்தபடி, இரண்டு டீமாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் ஆயத்தமாக காத்திருந்திருக்கிறார்கள். சத்யசாய் நகர் ரூட்டில் நின்ற டீம்தான் காரை மறித்து சுற்றி வளைத்து பொட்டுவை வெட்டிக் கொன்றிருக்கிறது. மாட்டிக் கொள்ள நேரிடும்போது கொலை செய்த டீம் தப்பிக்க வசதியாக, இன்னொரு டீமை சரணடையச் செய்யும் திட்டமும் இருந் திருக்கிறது. ஆனாலும், நேரடியாகக் கொலையில் ஈடுபட்ட சந்தானம் போன்றவர்களும் கையில் வெட்டுக் காயத்துடன் சரணடைய நேரிட்டிருக்கிறது''’என்று, தான் அறிந்து வைத்திருந்த தகவல்களைக் கொட்டினார் அந்த அதிகாரி.
அஞ்சலி செலுத்த மனைவி காந்தி மற்றும் மகன் துரையுடன் பொட்டு சுரேஷின் வீட்டு வாசலுக்கு வந்த அழகிரியின் முகத்தில் அப்படி ஒரு மிரட்சி. பொட்டு குடும்பத்தினரின் கதறலுக்கும் புலம்பலுக்கும் நடுவே பேசுவதற்கே தயங்கிய அழகிரியின் காரை மறித்து "என் நண்பரை, விசுவாசியை இழந்து விட்டேன்'’என்று மீடியாக்கள்தான் பேச வைத்தன.
‘"இனியும் விட்டு வைக்க மாட்டார்கள் காக்கிகள். ஆலோ சிக்கத் தொடங்கிவிட்டார்கள். என்கவுன்ட்டர் செய்து முடித்து வைப்பார்கள்...'’என்று தகவல்கள் ஒரு புறம் கசிந்து கொண்டிருக்க.. தொடர்ந்து தலைமறைவாக இருந்து காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருக்கும் அட்டாக் பாண்டி சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றே காத்திருக்கிறது தமிழக காவல்துறை!
-சி.என்.இராமகிருஷ்ணன், சக்தி
அட்டை மற்றும் படங்கள்: அண்ணல்
பொட்டுவின் பினாமிகளும் சில சந்தேகங்களும்..!
சொந்த பந்தங்கள் அத்தனை பேர் பெயரிலும் சுரேஷ்குமார் எங்கெங்கோ வாங்கிய சொத்துக்களின் மதிப்பினைக் கணக்கிட்டால் தலை சுற்றும் என்கிறது காக்கிகள் வட்டாரம். நண்பர்களான பால தம்புராஜ், கல்யாணி, சேகர் போன்றவர்களுக்கு மதுரையின் மையப் பகுதியில் பெரிய பெரிய விடுதிகளை லீசுக்கு எடுத்து நடத்த ஏற்பாடு செய்த வகையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறார் பொட்டு. டிரைவர் மணிகண்டன் பெயரிலும் கூட சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என காவல்துறை விசாரிக்கிறது. கத்தியைக் கழுத்தில் வைத்து சில அடி தூரம் கொலையாளிகள் இழுத்துச் சென்றதாகச் சொல்வதும், உடலில் ஒரு இடத்தில் கூட காயமில்லாததும், விசுவாசமே இல்லாமல் வேடிக்கை பார்த்திருக்கிறானே? என பொட்டு குடும்பத்தினரே அங்கலாய்ப்பதும் டிரைவர் மீது சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை பொட்டுவின் குடும்பத்திடம் திரும்ப ஒப்படைப்பார்களா இந்த பினாமிகள்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. சுரேஷ்குமார் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த பாலதம்புராஜிடம் இது குறித்து நாம் கேட்டபோது, "அய்யோ... தலை வலிக்குது, காய்ச்சல் அடிக்குது ஆளை விடுங்க...'’’ என்று டூ வீலரில் ‘ஜூட்’ விட்டார்.
|
இதுவரை இல்லாத நடைமுறை!-உ.பி.க்கள் வேதனை!
"பொட்டு சுரேஷ் எப்படிய்யா தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனாரு..?’பிரச்சினையா இருக்கும்போது அவரை ஏன் நீக்கச் சொல்லி யாரும் சொல்லலை?' -பொட்டு கொலையான நாளில் அறிவாலயத்தில் குரலை உயர்த்தியிருக்கிறார் கலைஞர். மதுரை மா.செ. தளபதி, வேலுச்சாமி, பொன் முத்துராமலிங்கம், வி.கே.குருசாமி, ஜெயராமன், குழந்தைவேலு போன்றவர்களை அவசரமாக சென் னைக்கு கிளம்பி வரச் சொல்லியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். “"இனியும் மதுரையைக் கட்டி மேய்க்க என்னால் முடியாது'’என்று மா.செ. பொறுப்பிலிருந்து விலகும் முடிவு எடுத்திருக்கிறாராம் தளபதி. "தலைமை செயற்குழு உறுப்பினரான பொட்டுவின் மறைவுக்கு முக்கிய நிர்வாகிகளே அஞ்சலி செலுத்த வராததும், ஒரு இடத்தில் கூட இரங்கல் போஸ்டர் ஒட்டாததும், இதுவரை தி.மு.க.வில் இல்லாத நடைமுறை' என்கிறார்கள் அக்கட்சித் தொண்டர்கள். "தன்னை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து வைத்த அழகிரியிடமே மிரட்டல் அஸ்திரத்தை விடுத்து, அப்போது வேளாண் விற்பனைக்குழுத் தலைவரான அட்டாக் பாண்டிதான் கூலிப்படையை ஏவி இப்போது பொட்டுவைக் கொலை செய்திருக்கிறார்' என காவல்துறை தேடுவதும், அட்டாக் பாண்டி தலை மறைவாக இருப்பதும் மதுரை உ.பி.க்களை வேதனை கொள்ளச் செய்திருக்கிறது. அழகிரியின் நெருங்கிய நட்பு வட்டமும் ஆடித்தான் போயிருக்கிறது.
|
ரோகிணி கதறல்!
பொட்டு சுரேஷின் வீட்டில் மூன்றாவது நாள் காரியம் நடந்தபோது நாம் அங்கிருந்தோம். தீவிர ரஜினி ரசிகராக பொட்டு சுரேஷ் இருந்ததையும், தன்னை முழுவதுமாக நம்பியவர்களுக்கு எவ்வளவோ நல்லது செய்தார் என்பதையும் சிலாகித்துப் பேசினார்கள் உறவினர்கள். ஆண் வாரிசு இல்லாத காரணத்தால், தம்பியின் இறப்புக்கு மொட்டை போட் டிருந்த பொட்டுவின் அண்ணன் குமார், தன் மனக்குறையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். பொட்டு சுரேஷின் மனைவி ரோகிணி, தனக்கு திருமணம் நடந்த சத்யசாய் நகர் கே.ஜி.எஸ். திருமண மகால் அருகிலேயே கணவர் கொல்லப்பட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆதங்கம் இது...
""அண்ணன் (அழகிரி) மேல அத்தனை விசுவாசமா இருந்தாரே... நேர்மையா இருந்தாரே... அண்ணன்கூட சேர்ந்து போட்டோ கூட எடுத்துக்க மாட்டாரே. பப்ளிசிட்டி பிடிக்காத மனுஷனாச்சே. துரைக்கு போலீஸால பிரச்சினை வரக்கூடாதுன்னு கார்ல கூட்டிக்கிட்டு போயி அத்தனை மெனக் கெட்டாரே. இவரோட உசிரு போறப்ப காப்பாத்த யாரும் வரலியே. ஒரு வாரத்துக்கு முன்னாடியே "அடுத்த வாரம் நான் இருப்பேனோ இல்லியோ?'ன்னு சொன்னாரே. சொன்ன மாதிரியே ஆயிப்போச்சே. செல்போன்ல ஒருத்தரு நம்பரக்கூட பதிஞ்சு வச்சிக்க மாட்டாரு. டக்டக்குன்னு நம்பர போட்டுத்தான் பேசுவாரு. அத்தனை ஞாபக சக்தி அவருக்கு. சட்டைல சின்ன அழுக்குக் கூட இருக்கக் கூடாது. போட மாட்டாரு. அப்பேர்ப்பட்ட மனுஷன ரோட்டுல சாச்சிட்டாங்களே. சட்டையெல்லாம் கிழிஞ்சு ரத்தக் கறையோட பிணமாத்தானே வந்தாரு. கூட இருந்தவனுகளே கொன்னுபுட்டாங்களே. என் கழுத்துல தாலி ஏறிய அதே இடத்துலயே எம் புருஷன கொன்னு தாலிய இறக்கிட்டாங்களே. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சோட்டானிக்கரை போவாரே. "இனி எனக்கு அரசியல் வேணாம், ஆன்மிகம்தான்'னு கோயில் கோயிலா போனாரே. எந்தக் கோயில்ல விஷேசம்னாலும் கணக்கு பார்க்காம பணத்த கொடுப்பாரே. படிக்கணும்னு யாரு உதவி கேட்டாலும் தட்டாம செஞ்சு கொடுப்பாரே. கட்சிக்காரங்க, ஐ.ஏ.எஸ்ஸு, ஐ.பி.எஸ்ஸு, கவர்மெண்ட் ஆபீசர்னு தமிழ் நாட்டுல எத்தனை பேருக்கு என்னென்னமோ உதவி பண்ணிருக்காரே. எம்புட்டு தர்மம் பண்ணிருக்காரு. அவரு பண்ணுன தர்மமோ, கும்பிட்ட சாமியோ காப்பாத்தலியே. சோட்டானிக்கரை பகவதி அம்மே... எம் புருஷன கொன்னவனுகள நீ விட்டு வைக்காத...''’-துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் அழுது புலம்பியபடியே இருந்தார் ரோகிணி. |