புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2013


தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும்
நிலை உருவாகும் :  திருமாவளவன் ஆவேசம்

மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.


அவர்,  ‘’அனைத்துக் கட்சி நண்பர்களும் இங்கு பேசும்போது ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை எடுத்துச் சொன்னார்கள். இலங்கையை கண்டித்தால் இருநாட்டு நட்புறவு பாதிக்கும் என்று இந்தியா கவலைப்படுகிறது. அங்கே ஒரு இனம் அழிந்து வருவது பற்றி நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம். எனவே, இனியும் இலங்கையை நட்பு நாடாக இந்தியா கூறி வருவது வேதனை அளிக்கிறது.

ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றபோது அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்ற அந்த சம்பவம் வெட்கக்கேடானது. ராஜீவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாநிலங்களைச் சேர்த்து ஒரே மாநிலமாக அமைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சிங்கள அரசு அதனை வடக்கு, கிழக்கு என தனி மாநிலங்களாக பிரித்ததன் மூலம் ராஜீவ் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை.

தமிழக மீனவர்கள தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். இதுவரை ஏராளமான மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியிருக்கிறார்கள். நேற்று கூட துப்பாக்கி சூட்டில் நாகை மீனவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். 30 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இன்னும் வாடுகிறார்கள். இதுதான் நட்பு நாட்டின் இலக்கணமா?

அங்கு இலங்கை அரசு மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவேயில்லை. இலங்கை நடத்தியிருப்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்கும் செயல். தமிழ் இனம் முழுவதையுமே அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜபக்சே அரசு நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு பெரிய நாடு. இலங்கையில் நடந்து வரும் இந்த படுகொலைகளை ஏன் இன்னும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? ஜெனிவா மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அனைவரும் சொல்கிறார்கள். அது ஒரு உப்புச்சப்பு இல்லாத தீர்மானம். தமிழர்கள் நச்சுக்குண்டு வீச்சில் அழிக்கப்பட்டனர்.

எனவே, இந்த கொலைகாரர்கள் சர்வதேச நீதிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். இன்னும் தலையிடாமல் இருக்கக்கூடாது.

இத்தனை கொடுமை செய்தவர்களுக்கு இந்தியா வரும்போது ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுப்போம். அங்குள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி  கொடுப்போம் என்றெல்லாம் சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

செப்டம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளக்கூடாது என்று 117 இங்கிலாந்து எம்.பி.க்கள் கூறியிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது.

இன்னும் இலங்கை நட்பு நாடு என்று இந்தியா அடம்பிடிக்குமேயானால் நாங்கள் இந்தியர்கள் இல்லை என்று தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சொல்லும் நிலை உருவாகும்.

இலங்கையில் பாலச்சந்திரன் என்ற 12 வயது குழந்தை மட்டுமல்ல, பெண்கள், ஏராளமான குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் காரணமாகக் காட்டி ஒரு இனத்தைப் பழி வாங்க இலங்கை அரசை அனுமதிக்கக்கூடாது.

இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் இந்தியா பழி சுமக்க நேரிடும். தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும்.

இந்தியாவை தாய்நாடாகக் கருதி அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா மாற்ற வேண்டும்’’ என்று பேசினார்.

ad

ad