ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்த மருதமுனையை மு.கா.வின் தளமாக என்னால் மாற்ற முடிந்துள்ளது -அமைச்சர் ஹக்கீம்
தலைவர் அஷ்ரப்புடைய காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த மருதமுனை முஸ்லிம் காங்கிரஸின்தளமாக என்னால்தான் மாற்றியமைக்க முடிந்துள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் திதுலன வேலைத்திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபா செலவில் அமையவுள்ள கணினி கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணிக்கான கல்முனைப்பிராந்திய அமைப்பாளர் சறோ தாஜிதீன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்கள் இன்று எம்மிடமிருந்தும் அபிவிருத்தியினை எதிர்பார்க்கின்றனர். அதற்கான பல்வேறு திட்டங்களை நாமும் முன்னெடுத்து வருகின்றோம். சுனாமிக்குப் பின்னர் தகரக் கொட்டகைக்குள் ஆரம்பிக்கப்பட்ட மதீனா வித்தியாலயத்தில் இவ்வாறானதொரு கட்டிடத்தை ஒதுக்கீடு செய்வதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். சுனாமியின் பின்னரான அமைவிடம் தொடர்பில் இப்பாடசாலை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த நிலையிலும் நாம் மிகவும் நிதானமாக அவற்றையெல்லாம் அவதானித்தோம். இன்று அதன் பிரதிபலிப்புக்களைப் பார்க்கும் போது பூரிப்பு ஏற்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய தளமாக கல்முனை என்றும் இருந்து வரும் நிலையில் தலைவரின் காலத்தில் ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்து எம்மை ஏற்றுக்கொள்ளாத மக்களையெல்லாம் இன்றும் எம் பக்கம் அழைத்து வந்திருக்கின்றோம். மருதமுனை மக்களின் பெரும் பகுதியினர் எம்மோடு கைகோர்க்கும் முக்கிய தளமாக இக்கிராமம் மாறி இருக்கின்றது. இது என்னுடைய தலைமைத்துவத்தினாலேயே முடிந்திருக்கின்றது. இவ்விடயம் ஆரோக்கிமானதாகவோ சிலவேளை துரதிஷ்ட வசமானதாகவோ இருக்கலாம்.
பாடசாலை நிருவாகத்தினர், தாய்மார்கள், பெற்றோர்கள் பெருமளவில் வருகை தந்திருக்கும் இந்நிகழ்வு எனக்கு சந்தோஷமளித்திருக்கின்றது. எமது அரசியல் மற்றும் சமூகம் சார் முன்னெடுப்புக்கள் குறித்து விரைவில் மனம் திறந்து பேசவுள்ளோம் என்றார்.