புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2013

வாழ்வா சாவா போட்டியில் ஆஸி. இலங்கை இன்று பலப்பரீட்சை

சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இறுதி லீக்கில்(ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியாவும்,
இலங்கையும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று சந்திக்கின்றன. அவுஸ்திரேலிய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

வெறும் ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். அத்துடன் ஓட்ட எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கியுள்ள அவர்கள் அதிலும் தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான் அவுஸ்திரேலியாவுக்கு அரைஇறுதி வாய்ப்பு கிட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் முழுமையான அதிரடி துடுப்பாட்டத்தை நடத்தி காட்ட வேண்டியது அவசியமாகும்.

முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் முதல் இரு ஆட்டத்தில் ஆடவில்லை. காயத்தில் இருந்து தேறி வருவதாகவும், இன்றைய முக்கியமான ஆட்டத்தில் களம் இறங்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அது குறித்து காலையில் முடிவு செய்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஒழுங்கீன நடவடிக்கைக்குள்ளான டேவிட் வோர்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், கிளார்க் விளையாடினால் அது நிச்சயம் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். அவர் உடல்தகுதி பெறாவிட்டால் ஜோர்ஜ் பெய்லி அணியை தொடர்ந்து வழிநடத்துவார்.

தனது முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் போராடி தோற்ற இலங்கை அணி 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, டில்ஷான் ஆகிய மூன்று அனுப வீரர்களும் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால் புதுதெம்பு அடைந்துள்ள இலங்கை அணி, அவுஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி அளிக்க வியூகங்களை அமைத்து வருகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே எளிதில் அரைஇறுதியை எட்டி விடலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 89 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 55இல் அவுஸ்திரேலியாவும், 30இல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவு கிடையாது.

இங்கிலாந்தில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆட்டத்தை ரசிக்க வரும் ரசிகர்கள் எரிச்சலடைகின்றனர். மழையும் புகுந்து விளையாடுவதால் சாம்பியன்ஸ் போட்டியின் சுவாரஸ்யம் குறைந்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிடலாம். இங்கு இன்று மழை பெய்ய 10 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad