புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு
தாய்த்தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
திரு.வை.கோ ,திரு. பழ நெடுமாறன் ,திரு.சீமான் ,திரு. குமரேசன் போன்ற தமிழீழ ,தமிழின உணர்வாளர்களும் ,திரு சாலமன் பாப்பையா போன்ற தமிழ்மொழி ஆர்வளர்களும்,தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரும் காலையில் இருந்து மதியம் வரை அன்னாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும் மாலை போட்டும் வணக்கம் செலுத்திவந்தனர். மதியம் 12:30 மணியளவில் அன்னாரின் உடல் அவரது தோட்டக் காணி உள்ள இடமான தவசிமேடை என்னும் கிராமத்திற்கு பெரும் திரளான மக்கள் புடை சூழ கொண்டுசென்றனர்.

மாலை 3:00 மணிக்கு அவரது தோட்டக்காணியில் உலகதமிழர் பேரமைப்பின் துணை தலைவரான திரு.வீரப்பன் தலைமையில் இறுதி வணக்க உரை தொடங்கியது.
இதில் ம.தி.மு.க அழகுசுந்தரம், அ.தி.மு.க கண்ணன் ,பெரியார் தொண்டன் வரதராசன் ,கவிஞ்ஞர் அறிவுமதி, ஆகியோர் உரையாற்றினர். அமரர் அழகிரிசாமி அவர்களின் நீண்டகால நண்பரும் உலகதமிழர் பேரமைப்பின் தலைவருமான திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்கள் இறுதி வணக்க உரையின் போது,
"1957 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆரம்பமான எமது மாணவப்பருவ சந்திப்பானது 56 வருடங்களாக தொடர்ந்த எமது நட்பானது எனது வாழ்விலும்,அரசியல் செயல்பாட்டிலும், தமிழீழ விடுதலை களத்திலும், தமிழீழ  விடுதலைப்புலிகள் வளர்ச்சியிலும் எனக்கு பெரும் துணையாக நின்றார்.
எந்த அரசியல் போராட்டமாக இருந்தாலும் நான் எள் என்றால் அவர் எண்ணையாக அச்செயலை செய்து முடித்துவைக்கும் ஆற்றல் நிறைந்தவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1945 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிஞர் அண்ணாவை அழைத்து வந்து பேச வைத்த பெருமை இவரையே சாரும். ஆனால் தன்னை முன்னிலை படுத்தாமல் எக்காரியத்தையும் செய்து முடிப்பதில் வல்லவராக இருந்தார்.
பொடா சட்டத்தில் இவரது மகனான மருத்துவர் தாயப்பன் அவர்கள் பதினைந்து மாதமாக சிறையில் இருந்த பொழுது நான் தாயப்பனுக்காக வருத்தப்பட அவரோ எனக்காக கவலைப்பட்டார் மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சிக்காக இவரது சிறுமலை என்னும் கிராமத்தில் உள்ள காணியை கொடுத்து உதவினார்.
இதற்காக எந்தப்பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயாராகவே இருந்தார். இதுக்காகத்தான் இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் ஈழத்துணை என்று கெளரவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அறிக்கையும் வாசித்து திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்கள் இறுதி வணக்க உரையை நிகழ்த்தினார். இறுதியாக

வீர வணக்கம் வீர வணக்கம்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உயிர் ஊட்டிய
அழகிரிசாமிக்கு வீர வணக்கம் எனும் முழக்கத்துடன் அன்னாரின் வித்துடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது.

ad

ad