வடக்குத் தேர்தல் வரலாற்று திருப்புமுனை வெற்றியாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=409072190923237265#sthash.q9tm2h1L.dpuf
சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேசத்தின் ஆதரவும் மக்களின் அங்கீகாரமும் கிடைத்துள்ளன. எனவே, எந்த விலை கொடுத்தாவது கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். வட மாகாண சபைத் தேர்தல் வரலாற்று திருப்புமுனை வெற்றியாக அமைய வேண்டும்.
நாம் அனைவரும் இணைந்து இதற்காக பாடுபடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வவுனியா நகரிலுள்ள வசந்தம் ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியினை எவரும் அழித்துவிட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேச ரீதியிலும் மக்கள் மத்தியிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை பேண வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும்.
வடமாகாண சபைத் தேர்தலில் வரலாற்றுத் திருப்புமுனையான வெற்றியினை நாம் பெறவேண்டும் வடமாகாண சபையில் உள்ள 36 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்களையாவது நாம் பெற வேண்டும். சர்வதேச ரீதியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் வரலாற்றுத் திருப்புமுனையான வெற்றியினை பெற்றால்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும்.
வடமாகாண சபை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரில் ஜனநாயகம் பேணப்படவில்லை என்று யாரும் குற்றம்சாட்ட முடியாது. முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுக்கவில்லை. ஆனாலும் அவரும் இணைந்து நீதியரசர் விக்கினேஸ்வரனை வேட்பாளராக தெரிவுசெய்துள்ளார். இங்கு பலவந்தமாக முதலமைச்சர் வேட்பாளர் திணிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியிலேயே தெரிவு இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சர்வதேசம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே கூட்டமைப்பை பேணிப் பாதுகாப்பதற்கு எந்தவிலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். வடக்கு மாகாணசபைக்கான வேட்பாளர் தெரிவில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொண்டு நாம் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.