புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். 


சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை 10 மணியளவில் பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். 

சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மாலை முரசு இயக்குனர் கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், ரித்தீஷ் எம்.பி, சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன், பா.ஜனதா தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை, மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள். 

மேலும் வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:– 

இந்திய கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு, திருச்சி வேலுசாமி, தமிழருவி மணியன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன், கலைக்கோட்டுதயம் பால்வியூமன், கோட்டைகுமார், சிவகுமார், வெற்றிகுமார். 

நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, விவேக், ராஜேஷ், டைரக்டர் பாரதி ராஜா மகன் மனோஜ், விக்னேஷ், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், பாலா, பாலாஜிசக்திவேல், ஜெயம்ராஜா, புகழேந்தி, ஸ்டண்டுமாஸ்டர் ஜாக்குவார் தங்கம், வாகை சந்திரசேகர், வையாபுரி, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன், வணிகர் சங்க பேரவை தென் சென்னை மாவட்ட தலைவர் சவுந்தர ராஜன். திருமணத்துக்கு வந்திருந்தவர்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வக்கீல் தடா சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன், ஆவல் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மணமக்களின் பெற்றோரும் வரவேற்றனர். 

திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன.

ad

ad