புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா?/தமிழ் கார்டியன் 

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது.


இவ்வாறு 'IPS - Inter Press Service' ஊடகத்திற்காக Samuel Oakford எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு முதன்முதலாக நியூயோர்க்கிற்கு சென்றிருந்தமை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார் விபரித்தார்.

 
"எனது நண்பர்கள் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தனர். நான் அமெரிக்காவின் சட்ட உரிமைகள் தொடர்பாகக் கற்றுக் கொண்டு அவற்றை சிறிலங்காச் சட்டத்துடன் தொடர்புபடுத்தி நடைமுறைப்படுத்த விரும்பியதால் நியூயோர்க்கைத் தேர்ந்தெடுத்தேன். நான் நாட்டை விட்டுப் புறப்பட்ட போது இதுவே எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் 1983ல் இடம்பெற்ற கலவரம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என உருத்திரகுமாரன் குறிப்பிட்டார்.

தற்போது உருத்திரகுமாரன் நீதிமன்றில் ஒரு சட்டவாளராக வாதிடுவதில்லை. இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பணியாற்றுகிறார். இவரது பணியகம் நியூயோர்க் நகரின் Garment மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவரது பணியகத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகக் காணப்பட்ட 'தமிழீழம்' என்பது பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009ல் சிறிலங்கா அரசாங்கப் படைகளால் தோற்கடிக்கப்படும் வரை உருத்திரகுமாரன் இந்த அமைப்பினதும் இதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகத்தால் காலங் காலமாக சிறுபான்மைத் தமிழ் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாகவே சிறிலங்காத் தீவில் யுத்தம் ஆரம்பமானது. 1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மைத் தமிழ் சமூகமும் ஏனைய சிறுபான்மை சமூகங்களும் சிறிலங்காவை ஆண்ட அரசாங்கங்களால் மொழி மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிறிலங்காவின் அனைத்து அரச செயல்களிலும் சிங்கள மொழி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1956ல் சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

1983ல் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்களை அடுத்து பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்காவை விட்டுப் புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் குடியேறினர். இதனைத் தொடர்ந்து சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் மிகத்தீவிரம் பெற்றது. இதுவே புலிகள் அமைப்பு தமிழீழம் என்கின்ற தனிநாடு கோர வித்திட்டது.

புலிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த முப்பதாண்டுகளாக தமது ஆதரவை வழங்கினர். இந்த மக்களுக்கு அரசியல் உரிமைகள், சுயநிர்ணயம் போன்றன தொடர்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. "இது தொடர்பில் மக்கள் மிகத் தெளிவான கருத்தைக் கொண்டிருக்கவில்லை" என்பதை உருத்திரகுமாரன் ஏற்றுக்கொண்டார்.

சிறிலங்காத் தீவில் வன்முறையற்ற அமைதி வழிமூலம் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களும் ஏனைய நாடுகளில் வாழும் இவர்களின் ஆதரவாளர்களும் மீளவும் சிந்திக்க வேண்டியேற்பட்டது.

செப்ரெம்பரில் ஐ.நா பொதுச் சபையில் சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உரையாற்றுவதை எதிர்த்து ஐ.நாவுக்கு வெளியே தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் 'தற்போதும் பிரபாகரன் தான் எமது தலைவர்' என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை தமது கைகளில் வைத்திருந்தனர்.

"புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியலை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தனர். அதாவது புலம்பெயர் அரசியலை புலிகள் தமது இரும்புப் பிடிக்குள் கொண்டிருந்தனர்" என சிறிலங்காவில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது ஐ.நா வுக்கான பேச்சாளராகக் கடமையாற்றிய கோர்டன் வொய்ஸ் குறிப்பிடுகிறார்.

"அதாவது எவருடன் கூட்டுச்சேர்ந்தாலும் அது ஆபத்தானது என அவர்கள் கருதினார்கள். தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை புலிகள் எதிர்த்தனர். கொடுமைப்படுத்தினர். சிறிலங்கா அரசாங்கத்தை தம்மால் மட்டுமே எதிர்த்து நிற்கமுடியும், அதற்கான ஆற்றலை தாம் மட்டுமே கொண்டிருப்பதாக புலிகள் கருதினர். இதனை இவர்கள் தமது பலமாகக் கருதினர். இவ்வாறான ஒரு தவறான கற்பிதமே புலிகளுக்கு அதிகாரத்தை வழங்கியது. இதனால் புலிகள் அழிக்கப்பட்டனர்" என கோர்டன் வொய்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் புலிகள் தமக்கான நிதியை பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் தமக்கான நிதியை அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர். இந்த நாடுகளில் புலிகள் அமைப்பு முறைசாரா விதத்தில் வர்த்தகம் மற்றும் வருவாயை ஈட்டும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டதுடன், தனது ஆதரவாளர்களைக் கொண்டு மிகப் பெரிய வலையமைப்பையும் உருவாக்கியது.

2000ம் ஆண்டளவில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குத் தேவையான நிதியைப் பெருமளவில் சேகரிக்கத் திட்டமிட்டனர். இதன்விளைவாக, தமது ஆதரவு அமைப்புக்களின் ஊடாக புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் மில்லியன் கணக்கான நிதியைத் திரட்ட ஆரம்பித்தனர். இவ்வாறான நிதி திரட்டல் பணியில் மிகவும் முக்கிய ஒருவராக ராஜ் ராஜரட்ணம் காணப்பட்டார். இவர் உலகில் வாழும் சிறிலங்கர்களில் மிகப் பெரிய செல்வந்தராகக் காணப்பட்டார். இவர் நியூயோர்க் நிதி சேகரிப்பு நிறுவனமான Galleon Group இன் நிறுவுனராவார்.

2009ல் இவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டது என்ற குற்றச்சாட்டின் பேரின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ராஜ்ராஜரட்ணம் 3.5 மில்லியன் டொலர்கள் வரை வழங்கியிருந்தார். சிறிலங்காவுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் சமூகமானது உள்நாட்டுப் போருக்கு நிதி வழங்குவதில் ஆர்வங்காட்டிய அதேவேளையில், உள்நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களின் உடல் ரீதியாக போரின் வடுக்களைத் தாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தனது இராணுவ மூலோபாயத்தை பலப்படுத்திக் கொள்வதற்கு சில தவறான காரியங்களில் ஈடுபட்டது. அதாவது சிறுவர்களை தமது படையில் இணைத்தமை, தற்கொலைக் குண்டுத்தாக்குதல் உத்தியைப் பயன்படுத்தியமை போன்றன இங்கு குறிப்பிடக் கூடியவையாகும்.

"சிறிலங்காவை விட்டு வேறு நாடுகளில் குடியேறுவதன் மூலம் தமது பொருளாதாரப் பலப்படுத்திக் கொள்ள முடியும், சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற்று, சிறப்பான வாழ்வை வாழ முடியும் என சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்கள் சிலர் கூறுகின்றனர்" என வெய்ஸ் தெரிவித்தார்.

"புலம்பெயர் சமூகம் என்கின்ற பதமானது தவறானது. புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டே நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்" என அமெரிக்கா மற்றும் சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களால் போர்க் குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்பட்ட, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி பாலித ஹோகன விபரிக்கிறார்.

காலமும் இடைவெளியும் புலம்பெயர் தமிழ் சமூகமானது மேலும் தீவிரமான திசை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகுத்துள்ளது. "சிறிலங்காவுக்குள் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை விடக் குறைவான தேசியவாதிகளாகக் காணப்படுகின்றனர். உலகெங்கும் வாழும் தமிழ் சமூகமானது எப்போதும் உள்நாட்டில் வாழும் தமிழ் சமூகத்தை விட தமது கோரிக்கைகளை மிகவும் தீவிரமாக முன்வைக்கின்றனர்" என அனைத்துலக நெருக்கடி அமைப்பின் சிறிலங்காவைச் சேர்ந்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் 11 தாக்குதலை அடுத்து, அனைத்துலக சமூகமானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேற்குலக அரசாங்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு வலைப்பின்னலை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கின. அமெரிக்க அதிகாரிகள், புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தினர். இதனைத் தொடர்ந்து புலிகள் அமைப்பின் ஆதரவுக் குழுக்களின் சொத்துக்கள் அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்டன. புலிகளின் நிதிப் பலம் குறைவடையத் தொடங்கியமையே இவர்கள் இராணுவ ரீதியில் தோல்வியுறக் காரணமாகியது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இராணுவத் தீர்வென்பது சாத்தியமற்றதாக இருக்கலாம் என்பதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்ற போதிலும், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் நிலையான அமைதியை எட்டி தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு தனித் தாய்நாடு மட்டுமே ஏற்புடையதாகும் என்பதில் உறுதியாக உள்ளது.

சிறிலங்காவில் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாது அதனைத் தான் புறக்கணிக்கவுள்ளதாக கனேடியப் பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பர் அறிவித்துள்ளதன் மூலம் கனேடியத் தமிழர் அமைப்பானது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

செப்ரெம்பர் 21 அன்று வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அமோக வெற்றியீட்டியது. "வடக்கு மாகாணத்தை தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் நிர்வகிப்பதானது எமது மக்களின் கௌரவம் மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கு வழிகோலுகிறது" என கனேடியத் தமிழர் அமைப்பு தெரிவித்திருந்தது.

"வடக்கு மாகாண சபைத் தேர்தலானது விடுதலையைப் பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்படும் வாக்கு. சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் அரசியல் அவாக்கள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகமுக்கியமானதாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக வழங்கப்பட்ட வாக்கல்ல. இது அடக்குமுறைக்கு எதிரான வாக்காகும்" என 'தமிழ் கார்டியன்' பத்திரிகையின் செப்ரெம்பர் மாத ஆசிரியர் பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ad

ad