புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின் பின் அமெரிக்க தூதுவர்.
வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதன் பின்னர் அமெரிக்க தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போது வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு கருத்துத் தெரிவித்த தூதுவர், "இந்த பிரச்சினை உள்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையாகும். இது தொடர்பாக நான் எதுவித கருத்துக்களையும் கூறமுடியாது என்றார். அங்கு தொடந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவினால் உதவிகள் மேற்கொள்ளப்படும். வட மாகாணத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அத்துடன், வட மாகாணத்தில் முதன்முறையாக முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டமை சந்தோசமளிக்கின்றது. வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளினை அமெரிக்க அரசாங்கம் வழங்கும்" என்றார்.
சந்திப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பொதுமக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்துவார் என வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேற்படி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடர்ச்சியாக பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடித்து அழித்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் மேற்படி கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.
விடயம் தொடர்பில் இன்று காலை அமெரிக்க தூதுவருடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கில் மக்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் கவனத்திற்கு நான் விடயத்தை கொண்டு சென்றிருக்கின்றேன்.
அந்தவகையில் அவர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேலும் இன்று காலை அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும், கொரிய நாட்டின் தூதுவருடனான சந்திப்பின் போதும் மேற்படி வலிவடக்கு பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.
எனினும் அவர்களால் அதனை கவனத்திற் கொள்ள முடியுமே தவிர நடவடிக்கை எடுப்பது சாத்தியமற்றது.
எனவே இந்த விடயத்தில் நாம் இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அந்தவகையில் எமது கட்சியின் தலைவருக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் இன்றைய சந்திப்பின் போது வடக்கின் வாழ்வாதார நெருக்கடிகள், படைப் பிரசன்னம், மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெளிவான கவனப்படுத்தலை நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.
அந்தவகையில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை தாங்கள் மேற்கொள்வோம், அதற்காக எமக்கு உதவிகளை ழங்குவோம் என அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளார்கள்.
அவர்களுடைய உதவிகளை நாம் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளவும் கட்டியெழுப்ப அத்தகைய உதவிகள் அத்தியாவசியமான இருப்பதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ad

ad