12 அக்., 2013

தம்பிக்கு அமைச்சு பதவி இல்லாத காரணத்தினாலேயே சுரேஷ் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்தார்: வட மாகாண முதலமைச்சர்
சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது சகோதரனான சர்வேஸ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்காத காரணத்தினாலேயே பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்துள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட 4 பேரும் இதற்கான நியமனக் கடிதங்களை நேற்று ஆளுநரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
இப்பதவியேற்பு வைபவத்தினை முடித்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
நேற்று வடமாகாண ஆளுநரிடம் இருந்து நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி வடமாகாண அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டுள்ளோம்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவினை சிலர் புறக்கணித்துள்ளார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்தவர்கள் வராமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியாமல் உள்ளது. ஆனாலும் மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தனது தம்பியாராகிய க. சர்வேஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி தர வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. எழுத்து மூலம் என்னிடம் கோரியிருந்தார்.
ஆனால் அது முடியவில்லை. கொடுக்க முடிந்தவர்களுக்கு நான் அமைச்சுப் பதவியினைக் கொடுத்தேன். அது அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்கக் கூடும்.
எல்லா அமைச்சர்கள் தெரிவிலும் இவ்வாறான ஒரு குழப்பம் இருக்கின்றது. அவர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.
காலப்போக்கில் எல்லாம் சரிவந்துவிடும் எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.